PUBLISHED ON : மார் 18, 2018

எழுத்தாளர், அருணன் எழுதிய, 'அண்ணா ஆட்சியை பிடித்தது எப்படி?' நுாலிலிருந்து: ஜூன் மாதம், 1962ல், 'விலைவாசி உயர்வு எதிர்ப்பு' போராட்டத்தில், கைதாகி, வேலுார் சிறையில் அடைக்கப் பட்டார், அண்ணாதுரை. அவர் விடுதலையாகி, வெளியே வந்த சமயம், இந்தியாவுக்கும் - சீனாவுக்கும் இடையே எல்லைப் போர் மூண்டிருந்தது. வேலுார் கோட்டை மைதானத்தில் அண்ணாதுரை பேசினார்...
'டில்லிக்காரனை பிடிக்கவில்லை என்றால், 'பீகிங்'காரனையா பிடிக்கும்... ஒரே பூபாகத்தில் இணைந்திருந்தும், வட நாட்டானிடம் அளவுக்கு அதிகமாக அதிகாரம் குவிந்திருப்பது பிடிக்கவில்லை. அதற்கே, இப்படிப்பட்ட போராட்டங்கள் எனும் போது, கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத, கொலை பாதகம் புரியும் சீனாக்காரன், நம் நாட்டில் நுழைவதற்கு எந்த மடையன் ஒப்புக்கொள்வான்... சீனாக்காரன், எடுத்து வைத்த காலடி திருப்பி எடுக்கப்படும் வரை, நேருவின் கரத்தை வலுப்படுத்தியே தீருவோம்.
'அதே சமயம், சீன படையெடுப்புக்காக, திராவிட நாடு பிரச்னையை விட்டு விடமாட்டோம். தலைவலி வந்தால் அமிர்தாஞ்சன் தடவ வேண்டும்; அதற்காக, தலையை எடுத்து விட முடியாது. அது போலதான் திராவிட நாடு பிரச்னையும்! எனவே, போர் நெருக்கடியில் நம் பிரச்னையை தள்ளி வைத்து, எந்தவித கிளர்ச்சியிலும் ஈடுபடாமல், நாடு காக்கும் பணி நமதென்றே இருப்போம்...' என்றார்.
அவரது கோரிக்கையை ஏற்று, நாடு காக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர், திராவிட நாடு கேட்டவர்கள்.
மொழிப் பிரச்னையை கூட இதற்காக விட்டுக் கொடுத்தனர்.
'வானொலி' என்று அழைக்கப்படும் வரை, அதன் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது என்று முடிவெடுத்திருந்தது, தி.மு.க., அதை, போர் ஆதரவு பிரசாரத்திற்காக கைவிட்டனர். ஆகாஷ்வாணியில் அண்ணாதுரை உள்ளிட்ட, தி.மு.க., தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
அமரர் கல்கி பற்றி அவரது மகள் ஆனந்தி, ஒரு கட்டுரையில் நினைவு கூர்கிறார்: என் மகள் கவுரி ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது, அப்பா, சில நாட்கள் வெளியூர் செல்ல நேரிட்டது. அவள் ஒரு மாதக் குழந்தையாக இருக்கும்போதே, தன் மடியில் வைத்து, கை விரல்களையும், பாதங்களையும் தொட்டு மகிழ்வார். மடியில் போட்டு ஆட்டிக் கொண்டே, 'சின்னஞ் சிறு கிளியே...' பாடலை, கமாஸ் ராகத்தில் பாடுவார்.
பத்து நாட்களுக்கு பின், வெளியூரிலிருந்து அவர் திரும்பி வந்தபோது, குழந்தையை பார்க்க அவசரம் அவசரமாக மாடி ஏறி வந்தார். கவுரியை நான் இடுப்பில் துாக்கி வைத்திருந்தேன். வழக்கமாக அவரை பார்த்தவுடன், பரபரப்புடன் சிரித்துக் கொண்டே அவரிடம் தாவும் குழந்தை, அன்று அவரை பார்த்தபோது, சிரிக்கவோ, தாவவோ இல்லை. ஒருமுறை பார்த்து, முகத்தை கோணியபடி, என் தோள் மீது சாய்ந்து, விசும்பினாள். கையை நீட்டி, 'கவுரி கண்ணு...' என்று அவர் கூப்பிட்ட போதும் திரும்பிப் பார்க்கவே இல்லை.
எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. 'என்ன இது... 10 நாட்களில் தாத்தாவை மறந்துட்டாளா... இத்தனை ஆவலோடு அவர் கூப்பிடும்போது, முகத்தை திருப்பிக்கிறாளே... அவருக்கு வருத்தமாக இருக்கப் போகிறதே...' என்று எண்ணினேன்.
ஆனால், குழந்தையின் உள்ளத்தை புரிந்து கொண்ட என் தந்தை, 'பார்த்தியா... என்னை, ஏன் விட்டுட்டு போனேன்னு கோவிச்சிண்டிருக்கா. எங்கிட்டே கோவம் அவளுக்கு...' என்று சொல்லி, அவள் கையை பிடித்து, 'எங்கிட்டே கோவமா கண்ணு... நான் தான் உன்னைப் பார்க்க பறந்து வந்துட்டேனே...' என்றதும், குழந்தை அவரிடம் தாவி, அவருடைய தோளில் முகத்தை புதைத்து விம்மியதும், கண்களில் கண்ணீர் ததும்ப, கவுரியை அணைத்து, 'நான் தான் வந்துட்டேனே... நான் தான் வந்துட்டேனே...' என்று திரும்பத் திரும்ப சொல்லி சமாதானப்படுத்தியதும், மறக்க முடியாத சம்பவம்.
எண்ணங்களை வெளியிடத் தெரியாத குழந்தையின் உள்ளத்தை அவர் புரிந்து கொண்டது, பசுமையான நினைவாக என் மனதில் நிலைத்து விட்டது!
நடுத்தெரு நாராயணன்
