தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஏப் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அரசியல் தலைவர்கள் சுவையான சம்பவங்கள்' நுாலிலிருந்து: 'பாரதிதாசன் பாடல்களில் சிறந்து காணப்படுவது காதலா, வீரமா?' என்ற தலைப்பில், மதுரையில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக இருந்த, அப்போதைய அமைச்சர், முத்துசாமி பேசும்போது, 'கோழிகள் விடியற்காலையிலேயே கூவுகிற காரணத்தால், காதலர்களுக்கு இடையூறு நேருகிறது; ஆகவே, கோழிகள் விடியற் காலையில் கூவக் கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் போடலாமே...' என்றார்.

அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சராக, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த கருணாநிதி எழுந்து, 'குடும்ப கட்டுப்பாட்டைத் தீவிரமாக்க வேண்டும் என்று கருதுகிறது, அரசு. ஒரு விதத்தில், கோழிகளும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு துணையாக இருக்கின்றன. அதனால், அவற்றை காலையில் கூவக் கூடாது என்று சட்டம் இயற்ற முடியாது...' என்றார், சிரிப்புக்கிடையே!

நுாறு ஆண்டு பழமையான, தமிழின் முதல் நாவலான, 'பிரதாப முதலியார் சரித்திரம்' நுாலில், வேதநாயகம் பிள்ளை, எழுதியுள்ள சுவையான தகவல்கள்: * தன் நண்பன் ஒருவனுக்கு பெரிய உத்தியோகம் கிடைத்தபடியால், அவனுக்கு வாழ்த்து சொல்வதற்காக வந்தான், அவனுடைய தோழன். அவன், உத்தியோக மமதையால், 'நீ யார்?' என்று வினவினான். தோழனுக்கு கோபம் வந்து, 'நான் உன் பழைய நேசன்; உனக்கு, ரெண்டு கண்ணும் அவிந்து போனதாகக் கேள்விப்பட்டு, துக்கம் விசாரிக்க வந்தேன்...' என்றான்.

* தமிழ் படிக்காதவர்கள், தமிழகத்தில் வசிக்கவே தகுதியற்றவர். அவர்கள் எந்த ஊரின் மொழியை படிக்கின்றனரோ, அந்த ஊரே அவர்கள் வாழ தகுந்த இடம். தாய்மொழியை படிக்காமல், இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலாந்துக்கும், பிரெஞ்சு மட்டும் படிக்கிறவர்களை அந்நாட்டு பட்டணத்துக்கும் அனுப்புவோம்; லத்தீன் முதலிய பாஷைகளுக்கு சொந்த ஊர் இல்லாதபடியால், அந்த பாஷை படித்தவர்களை அனாமத்தான தீவுக்கு அனுப்புவோம்.

* ஓர் அரசனும், அவனுடைய மகனும், தங்கள் அரண்மனை விகடகவியை அழைத்துக் கொண்டு, வேட்டைக்கு கிளம்பினர். வேட்டையாடும் போது, மழை பெய்யவே, அரசனும், அவன் மகனும் நனைந்து விட்டனர். அதனால், நனைந்து போன தங்களது

உடுப்புகளை கழற்றி, மூட்டையாக கட்டி, விகடகவி தலை மேல் வைத்தனர்.

அவன் துாக்கி வரும் போது, அரசனும், அவன் மகனும், 'விகடகவி ஒரு கழுதை பாரம் சுமந்து போகிறான்...' என்று பரிகாசம் செய்தனர்.

அவர்களை திரும்பிப் பார்த்த விகடகவி, 'ஒரு கழுதை பாரம் தானா... இரண்டு கழுதை பாரம் அல்லவா சுமக்கிறேன்...' என்று அரசனையும், அவன் மகனையும் கழுதைகள் ஆக்கி விட்டான்!\

'சின்னச் சின்ன மின் மினிகள்' என்னும் நுாலிலிருந்து: கண்ணதாசன் ஒரு விழாவில் சொன்னார்... 'நான், சிவாஜி கணேசன், கருணாநிதி மூவரும் ஒரு நாடகத்தில் நடித்தோம்; அது, கருணாநிதி எழுதிய, 'துாக்கு மேடை' நாடகம். அப்போது, நான் ரொம்ப அழகாக இருப்பேன்; நாடகத்தில் எனக்கு பெண் வேடம். நாடகத்தை பார்த்த அண்ணாதுரை, 'உன்னைப் போல இத்தனை லட்சணம் பொருந்திய ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது; எங்கள் தெருவில் ஒரு பெண், சாத்துக்குடி விற்று வருவாள். அவள், இப்போது நீ இருக்கிறாயே, இதே மாதிரிதான் இருப்பாள்...' என்றார்.

வருத்தத்துடன், 'நல்ல உதாரணமாக சொல்லக் கூடாதா... சாத்துக்குடி விற்கும் பெண்ணுடன் என்னை ஒப்பிடுகிறீர்களே...' என்றேன்.

'வேறு எந்தப் பெண்ணும் உன் போல் உயரமாக இருந்ததில்லை; அதனால் தான் அவளைச் சொன்னேன்...' என்றார்.

- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us