PUBLISHED ON : மே 13, 2018

பிலோ இருதயநாத் எழுதியுள்ள, 'பிரயாணம் - ஒரு கலை' எனும் நுாலிலிருந்து:
மலை பிரதேசம் ஒன்றில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய ஒருவருக்கு, நகரத்துக்கு மாற்றலாகியது.
சில மாதங்களுக்கு பின், ஏதோ ஒரு வேலை காரணமாக, முன்பு வேலை செய்த ஊருக்கு வந்தார். வந்த வேலையை முடித்து, பேருந்து நிறுத்தத்திற்கு வருவதற்குள், கடைசி பஸ் போய் விட்டது. அது, மே மாதமாக இருந்ததால், அவருடன் வேலை செய்த ஆசிரியர்களும் விடுமுறையில் அவரவர் ஊருக்கு சென்றிருந்தனர். எனவே, ௧௨ கி.மீ., துாரத்தில் இருந்த மாணவன் ஒருவன் வீடு நினைவுக்கு வரவே, அன்றிரவு அவன் வீட்டில் தங்கலாம் என நினைத்து, அந்த பையனை தேடி, தேயிலை தோட்டத்துக்கு சென்றார்.
ஆனால், அதற்குள் இருட்டி விட்டது; டார்ச் விளக்கு இல்லை. தேயிலை தோட்டமாக இருந்ததால், சற்று உள்ளே நடந்து செல்ல வேண்டும். அப்பகுதியில், திருடர் பயம் இருந்ததால், இரவு எட்டு மணிக்கெல்லாம், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கதவுகளை அடைத்துக் கொள்வர். இந்நிலையில், இரவு ஒன்பது மணிக்கு, ஆசிரியர், தேயிலை தோட்டத்துக்குள் நுழைந்ததும், தோட்டத்தில் இருந்த நாய்கள் குரைக்க ஆரம்பித்தன.
ஏக காலத்தில் எல்லா நாய்களும் குரைக்கவே, தொழிலாளர்கள் சந்தேகப்பட்டு, தம் வீட்டிலிருக்கும் நாய்களையும் அவிழ்த்து விட்டனர். இதனால் பயந்து போன ஆசிரியர், இருளில் ஓட ஆரம்பித்தார். நாய்கள் அவரை துரத்த ஆரம்பித்தன. ஓடியவர், இருட்டில் ஒரு பாறையில் மோதி, மயங்கி விழுந்து விட்டார்.
திடீரென, நாய்கள் குரைக்கும் ஓசை நின்றது. திருடன் ஓடிவிட்டான் என நினைத்தனர், தோட்ட தொழிலாளர்கள். மறுநாள் காலை, தோட்ட தொழிலாளி ஒருவன் பார்த்து, நாய்களால் முகமெல்லாம் கடி வாங்கி, யாரோ ஒரு புதிய ஆள் இறந்து கிடக்கிறான் என்றும், அடையாளம் தெரியவில்லை என்றும் கூறினான்.
ஆசிரியரின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி, கடைசியில், ஒரு மாதத்திற்கு பின், இங்கே வந்து, நடந்த விபத்து பற்றி தெரிந்து கொண்டனர்.
அண்ணாதுரையின், 'உவமைகள்' நுாலிலிருந்து: கோவில் கும்பாபிஷேகம் நடத்தப் போவதாக கூறி, வைதீகர் வேடத்துடன் இருக்கும் ஒருவரிடம் நன்கொடைக்கு போனால், அந்த வைதீக வேடதாரி, தன் நெற்றியில் உள்ள குங்குமப் பொட்டை அவசர அவசரமாக அழித்து, 'நான் சுயமரியாதைக்காரன்; கோவிலுக்கு நன்கொடை கொடுக்கும் வழக்கம் எனக்கில்லை...' என்று கூறுவதையும் அறிவேன்.
கதர் அணிந்துள்ள வேடதாரியிடம், 'காந்தி விழா நடத்த, பணம் வேண்டும்...' என்று கேட்டால், 'இப்படிக் கொடுக்கும் நன்கொடையால், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு தான் லாபம்; என் அய்யன் கந்தசாமி கோவிலுக்கு கொடுத்தாலாவது, போகிற காலத்திற்கு புண்ணியம் கிடைக்கும்...' என்று சொல்லுவர்.
'சின்னச் சின்ன மின்மினிகள்' நுாலிலிருந்து: மகப்பேறு மருத்துவமனையிலிருந்து மலர்ந்த முகத்துடன் வீட்டுக்குள் நுழைந்த ராமசாமி, தன் ஏழு வயது பெண்ணை அழைத்து, 'மகளே... உனக்கு ஒரு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான்...' என்று கூறி, இனிப்பு வழங்கினார்.
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த மகள், 'எங்கே அப்பா அவன்... இப்போ எங்கே இருக்கிறான்?' என்று கேட்டாள்.
'அவன் ஆஸ்பத்திரியில் இருக்கிறான்; இன்னும் நாலு நாள் கழித்துதான் வீட்டுக்கு வருவான்...' என்றார்.
'போங்கப்பா...' என்றாள் ஏமாற்றத்துடன் மகள்.
'ஏன் சலிச்சுக்கறே?'
'பிறந்த உடனேயே அவனுக்கு நோய் வந்துடுச்சா... போயும் போயும் எனக்கு ஒரு நோயாளி தம்பியா பிறந்திருக்கிறான்...' என்றாள், வருத்தமாக!
நடுத்தெரு நாராயணன்
