தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மே 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு —

என் வயது, 38; கணவர் வயது, 42. ஒரே மகன், கல்லுாரியில் படிக்கிறான். பெற்றோருக்கு நான் ஒரே மகள் என்பதால் வயதான அவர்களை என் வீட்டில் தங்க வைத்து, கவனித்துக் கொள்கிறேன். என் கணவருடன் பிறந்தவள் ஒரு சகோதரி; திருமணமாகி விட்டது. மாமியாரும், மாமனாரும் சொந்த ஊரில் உள்ளனர்.

வீட்டிற்கு வரும் நாத்தனார் மற்றும் துாரத்து உறவினர்கள், என் பெற்றோரை நான் கவனித்து வருவதை, பெருங்குற்றமாக கூறி வருகின்றனர். 'பெற்றோரை கிராமத்தில் விட்டு, மனைவியின் பெற்றோரை காப்பாற்றி வருகிறாயே... கேவலமாக இல்லையா...' என்று என் கணவரை கேட்டு, பிரச்னைக்கு வழி வகுக்கின்றனர்.

இத்தனைக்கும், மாமனார் - மாமியார் ஆண்டுக்கு இருமுறை, 15 நாட்களுக்கு மேல் எங்களுடன் தங்கியிருந்து செல்வர். அவர்களுக்கு வேண்டிய பண உதவி மற்றும் மருத்துவ உதவிகளை எந்தவித குறையும் இல்லாமல் செய்து கொடுக்கிறேன்.

நாத்தனார் அடிக்கடி வந்து இந்த விஷயத்தை பேசி, என் கணவர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறாள். இதனால், நானும், என் பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.

பெற்றோருக்கு ஒரே மகன் இருந்தால், எப்படி தன் பெற்றோரை பராமரிப்பானோ, அதே போல், ஒரே மகளான நானும், என் பெற்றோரை பராமரிக்கிறேன்; இதில் என்ன தவறு இருக்கிறது.

குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தும் உறவினர்களை எப்படி சமாளிப்பது... தக்க ஆலோசனை தாருங்கள்.

இப்படிக்கு,

உங்கள் சகோதரி.


அன்பு சகோதரிக்கு —

ஏறக்குறைய, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, உன் பெற்றோரை சிறிதும் மனம் கோணாது பார்த்துக் கொள்கிறாய் என்றால், அது பெரிய விஷயம் தான். அதற்காக, உன்னை பாராட்டுகிறேன். ஒரு மகனை போல, பெற்றோரை பார்த்துக் கொள்கிறேன். என எழுதியிருக்கிறாய். ஆயிரத்தில் ஒரு மகன் கூட, தன் பெற்றோரை கவனித்துக் கொண்டதாக சரித்திரம் இல்லை. மகள்கள், அவர்களது பெற்றோரை திருமணத்திற்கு முன் எவ்வளவு நேசித்தார்களோ அதைவிட பல மடங்காய் திருமணத்திற்கு பின் நேசிக்கின்றனர். பெரும்பாலான பெண்களுக்கு தாயின் அருமை திருமணத்திற்கு பின்தான் தெரிகிறது.

உன் மாமனார் - மாமியார் விஷயத்தில் ஓரவஞ்சகம் காட்டுகிறாய் என குற்றச்சாட்டு எழுவது இயல்பே. இப்பிரச்னைக்கு தீர்வு காண, கீழ்க்கண்ட உபாயங்களை நீ மேற்கொள்ளலாம்.

நீங்கள் தற்போது இருக்கும் வீடு பெரியது என்றால், உன் மாமனார் - மாமியாரை வரவழைத்து, தனி அறையில் தங்க வை; பொதுவாக, ஒரே வீட்டில் தங்கியிருக்கும் சம்பந்திகள் முட்டிக்கொள்ள மாட்டார்கள். கிராமத்தில் இருக்கும் உன் மாமனார் - மாமியார், கிராமத்து வாழ்க்கையை விட்டு, உங்கள் வீட்டில் வந்து தங்க சம்மதிக்க மாட்டார்கள்.

'மாமனார் - மாமியாரை, ஒரே வீட்டில் தங்க அழைத்தேன்; அவர்கள் வரவில்லை. இனி, என் மீது குற்றம் சுமத்தாதீர்கள்...' என, அவதுாறு பரப்புவோருக்கு கூறு.

அத்துடன், உன் பெற்றோரை, தனி வீடு பார்த்து குடி அமர்த்தி, மாத செலவுக்கு சிறு தொகை கொடுத்து விடலாம் எனக் கூறு. உடனே, உன் வீட்டில் சுனாமி எழும்; உன் கணவரும், மகனும், உன் யோசனைக்கு எதிராக கொடி பிடிப்பர்.

ஒரு நாடோடி கதை உண்டு. தந்தையும் - மகனும், ஒரு கழுதையை கூட்டிக்கொண்டு செல்வர். வழியில் தென்படுவோர் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்ல, கடைசியில், தந்தையும் - மகனும் கழுதையை துாக்கி செல்வர். நாம் எதை செய்தாலும், உறவு, நட்பு வட்டம் ஏதாவது மாற்றுக் கருத்தை சொல்லும்.

இறைவனை விட முக்கியமானது மனசாட்சி; நீ செய்வது சரியா என மனசாட்சியிடம் கேட்டு பார்; அது சரியான தீர்ப்பை தரும். உறவினர்களின் அமில விமர்சனங்களை இன்முகத்துடன் எதிர்கொள்; விமர்சன அம்புகள் முனை மழுங்கி விடும்.

மாமனார் - மாமியார், உன் வீட்டில், 15 நாள் தங்குவது போல, நீ, கணவன், மகன் மற்றும் உன் பெற்றோருடன், 10 நாட்கள் மாமனார் - மாமியார் வீட்டில் தங்கி, உறவை பலப்படுத்துங்கள்.

நீ, உன் பெற்றோரை பராமரிப்பதை பார்த்து, நுாறு பெண்கள் தங்களது பெற்றோரை பராமரிக்கட்டும். நீ ஒரு அழகிய முன்மாதிரி. பெற்றோருக்கு செய்யும் பணிவிடை, இறைவனுக்கு செய்யும் தொண்டு. இந்த புண்ணியம்எல்லாம் உன் மகனை போய் சேரும்.

உன் பெற்றோருக்கு அன்பான நல விசாரிப்புகளை சமர்ப்பிக்கிறேன்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us