தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அரசு பள்ளிகளுக்கு உயிரூட்டும் ஆசிரியர்கள்!

அரசு பள்ளிகளுக்கு உயிரூட்டும் ஆசிரியர்கள்!

அரசு பள்ளிகளுக்கு உயிரூட்டும் ஆசிரியர்கள்!


PUBLISHED ON : மே 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசு பள்ளி என்றாலே, அடிப்படை வசதிகள் மற்றும் கல்வித் தரம் சுமாராகத் தான் இருக்கும் என்பது, பெரும்பாலோரின் எண்ணம். அதை மாற்றும் விதமாக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலர்.

'கோமா' நிலையில் இருந்த, மூன்று அரசு பள்ளிகள், இவர்களால், இன்று விமோசனம் பெற்றிருக்கின்றன. இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்தவர், ஆசிரியர் ராஜசேகர். தேனி மாவட்டம் கூடலுாரைச் சேர்ந்த இவர், தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, நஞ்சப்பா ஆண்கள் அரசு பள்ளியில், ஆசிரியராக பணிபுரிகிறார்.

எப்படி இது சாத்திய மாயிற்று என்று கேட்ட போது, ஆசிரியர் ராஜசேகர் கூறியது:

கடந்த, 2014ல், நண்பர் சுரேஷ் கண்ணனை சந்திக்க, அவர் ஆசிரியராக பணியாற்றும், தேனி மாவட்டம் காமயகவுண்டன் பட்டி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றிருந்தேன். பள்ளியில், மழைநீர் தேங்கி இருந்தது. அதை இருவரும் சேர்ந்து சுத்தம் செய்தோம். அப்பள்ளியில், 29 மாணவர்கள் மட்டுமே படிப்பது தெரிந்தது. ஏன் என்று விசாரித்தபோது, 'பள்ளியில் அடிப்படை வசதி இல்லாததால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது...' என்றார், நண்பர்.

இதற்கு என்ன செய்யலாம் என யோசித்தோம். உடனே, 'வாட்ஸ் ஆப்' குரூப்பை ஆரம்பித்து, ஆசிரிய நண்பர்களை ஒன்று சேர்க்க ஆரம்பித்தேன். எல்லாரும் கலந்து பேசி, ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, கோடை விடுமுறையில், 10 நாட்கள் அங்கேயே தங்கி, பள்ளியை சீரமைத்தோம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி, சுற்றுச்சுவர் என, மாணவர்கள் விரும்பும்படி பள்ளியின் தோற்றத்தையே மாற்றினோம். மாணவர்கள் ஆர்வமுடன் மீண்டும் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். இன்று, அந்த பள்ளியில், 93 மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்த பணியில் எங்களுடன் ஈடுபட்ட, கூடலுார் - புதுார் ஆசிரியர் ஒருவர், 'நான் பணியாற்றும் பள்ளியும் மோசமாக உள்ளது; அதையும் சீரமைக்கலாமே...' என்றார். அடுத்ததாக, அப்பள்ளிக்கு சென்றோம். பள்ளி படுமோசமாக இருந்தது; அதனால், அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை தேடி ஒன்று சேர்த்து, பள்ளியை சீரமைப்பது குறித்து பேசி, திட்டமிட்டு, காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளியை சீரமைத்தோம். தரை பெயர்ந்து இருந்த ஹாலுக்கு, 'டைல்ஸ்' ஒட்டினோம். இதை கண்ட அப்பள்ளி ஆசிரியர்கள், தாங்களாகவே பண உதவி செய்தனர்.

எங்கள் செலவாக, பள்ளிக்கு தேவையான சில பொருட்களை வாங்கிக் கொடுத்தோம்; விளையாட்டு சாதனங்கள் மற்றும் உடைந்த மர பெஞ்சுகளை புதிதாக்கினோம், பின், விழா ஒன்றை ஏற்பாடு செய்து, 'நாங்கள் சீரமைத்து கொடுத்து விட்டோம்; நீங்கள் அதை பாதுகாப்பதோடு, எங்களை போல் பிற அரசு பள்ளிகளை சீரமைக்க முன்வர வேண்டும்...' என்றோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதைதொடர்ந்து, 20 மாணவர்கள் கொண்ட கீழகூடலுார் அரசு கள்ளர் பள்ளியை சீரமைக்க, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முடிவு செய்து பணியை துவங்கினோம். இன்று, அந்த பள்ளி அனைத்து வசதிகளுடன் மூலிகை தோட்டத்துடன், குழந்தைகளுக்கு பிடிக்கும் வண்ணத்துடன் உள்ளது.

'அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த பணியை அரசு செலவிலேயே செய்யலாமே...' என, சிலர் கேட்கின்றனர்.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் நாங்கள், அதில் இருந்து கிடைக்கும் சம்பளத்தை வைத்துதானே வாழ்கிறோம். அந்த சம்பளத்தின் ஒரு பகுதியை ஏன் பள்ளியை சீரமைக்க ஒதுக்கக்கூடாது என்று எங்களுக்குள் எழுந்த கேள்வி தான், மூன்று பள்ளிகளை சீரமைக்க காரணமாக அமைந்தது.

இன்று, எங்களுடன் கைகோர்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர். அரசு பள்ளியை நம்பி, பல குழந்தைகள் இருக்கின்றனர். அவர்கள் பள்ளியை தேடி வர வேண்டும் என்பதற்காக, அவர்கள் விரும்பும் அழகான பள்ளியாக, தேவையான வசதியுடன் மாற்றி தருவது தான் எங்கள் சேவையின் நோக்கம், என்று நெகிழ்கிறார் ராஜசேகரன்.

இவரை பாராட்ட, தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 86675 58776.

கே.ராம்குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us