PUBLISHED ON : மே 20, 2018

எழுத்தாளர் புதுமைப்பித்தன், 'காற்றாடி' என்ற புனைப் பெயரில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து:
அந்நிய பாஷையில் எழுதப்பட்டுள்ள நுால்களை ஆதாரமாக வைத்து, அதையொட்டி தமிழிலோ, இதர பாஷைகளிலோ எழுதுவதற்கு, 'தழுவல்' என்று பெயர்; தழுவல் வேண்டாம் என்று மணிக்கொடி பத்திரிகையில் ஒரு சர்ச்சை நடந்தது. தமிழ் எழுத்தாளர் உலகத்தில் அனுபவம் உள்ள பல நண்பர்கள் இதற்கு சாதக, பாதகமாக தங்கள் வாதங்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.
தழுவல் கூடாது என்ற கட்சியின் தலைவரை சந்தித்து, 'ஏன் தழுவல் கூடாது?' என்று கேட்டேன்.
'பிறருடைய குழந்தையைத் தன் குழந்தை என்று சொல்வது எப்படி பொருந்தும்?' என்று அவர் பதிலளித்தார்.
நியாயம்; பிறர் எழுதியதை, தன் சொந்த சரக்கைப் போல் எடுத்துக் காட்டுவது தவறு தான். ஆனால், ஷேக்ஸ்பியரின் நாடகத்தைத் தழுவி எழுதப்பட்டது என்று ஒப்புக்கொண்டு விட்டால், இந்தக் குற்றச்சாட்டுக்கு இடமில்லாமல் போய் விடுகிறது. அது கூட பிசகு; தழுவல் கூடாது என சொல்கின்றனர் கட்சியினர்.
இது, வாதத்துக்கு பொருத்தமானதாய் இல்லை; பிள்ளை இல்லாத ஒருவன், வேறொரு குழந்தையை சுவீகாரம் எடுத்துக் கொள்வதில் என்ன தவறு... அதைப்போல, தாமே சொந்தமாக கற்பனை செய்து, எழுத முடியாதவர்கள், பிற பாஷைகளில் உள்ள உயர்ந்த நுால்களை தழுவி எழுதுவதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. தழுவி எழுதுவோருக்கு சொந்தமாக கற்பனா சக்தி இல்லையென்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளட்டும்; அதை, நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
ஏனெனில், மொழி பெயர்ப்பை விட தழுவலில் தான் ஆசிரியரின் கற்பனா சக்திக்கு அதிக வேலை ஏற்படுகிறது. மொழி பெயர்ப்பவன் மூலத்தில் உள்ளதை அப்படியே எழுதி விடலாம். ஆனால், தழுவி எழுதுபவர்கள் மூலத்திலுள்ளதை மனதில் கிரகித்து, தன் நாட்டு பழக்க வழக்கங்களுக்கு ஏற்றாற் போல அதை மாற்ற வேண்டியிருக்கும்.
உதாரணமாக, வெள்ளைக்காரர்களைப் பற்றிய ஒரு நாவலை எடுத்துக் கொள்வோம்; இரவு சாப்பாட்டை முடித்து, ஒயின் அருந்துவதற்காக, வேறு அறைக்கு சென்றனர் என, புத்தகத்திலிருந்தால், மொழி பெயர்ப்புக்காரன், அதை அப்படியே எழுதி விடலாம். ஆனால், தழுவி எழுதுபவன் அப்படி செய்ய முடியாது. சாப்பாட்டை முடித்து, தாம்பூலம் போட்டுக் கொள்வதற்காக மாடிக்கு சென்றனர் என்று எழுதியாக வேண்டும். ஆகவே, தழுவி எழுதுபவனுக்குதான் அதிக வேலையிருக்கிறது.
ப.உ.சண்முகம் எழுதிய, 'அண்ணாவுடன் சிறையில் சில நாட்கள்' நுாலிலிருந்து:
விலைவாசி உயர்வு போராட்டத்தில் ஈடுபட்டு, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார், அண்ணாதுரை. சிறை வாசத்தின் போது, ஒரு நாள், சிறையில் இருந்த ஒரு மரப்பொந்தில் இருந்து, ஒரு பறவை குஞ்சு தவறி கீழே விழுந்து விட்டது.
பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த குஞ்சை கையில் எடுத்த அண்ணாதுரை, அதை, தன் கொட்டடிக்கு எடுத்துச் சென்று வளர்க்க முடிவு செய்தார்.
குருவிக் குஞ்சு, 'கிறீச் கிறீச்' என்று ஈன ஸ்வரத்தில் கத்தியது; தன் வலுவற்ற அலகினால் அண்ணாதுரையின் விரலை கொத்தியது; பின் சோர்ந்து, துவண்டது.
இந்நிலையில், இரை தேடச் சென்ற தாய் பறவை, பொந்துக்கு திரும்பியது; வேகமாக பொந்துக்குள் நுழைந்தது. அடுத்த கணம், 'கிறீச்' என்று கத்திக் கொண்டே வெளியே வந்தது. கிளையின் அருகே சுற்றிச் சுற்றி வட்டமிட்டது; அங்கும் இங்கும் தேடியது. மீண்டும் பொந்துக்குள் போய் பார்த்தது; வெளியே வந்தது; குஞ்சை காணாமல் வேதனையும், பரபரப்பும், கோபமும் கலந்த குரலில் கூவியது.
தாய் பறவையின் ஆவேசத்தை கண்டு, தன் கையில் உள்ள குஞ்சை தாய்ப் பறவை கண்டால், கோபத்தில், பறந்து வந்து தன் கண்ணை கொத்தி விடுமோ என்று பயந்தார், அண்ணாதுரை. ஆனால், குஞ்சோ, தன் தாய்ப் பறவையின் குரலை கேட்டு அச்சத்தை விட்டு, ஆறுதல் அடைந்து, மறு குரல் கொடுத்தது.
'நான் இதோ இருக்கிறேன்; இங்குள்ள ஒரு சிறை கைதியின் உள்ளங்கையில் சிறைபட்டுக் கிடக்கிறேன்...' என்று தன் தாய்க்கு சேதி சொல்வது போல் இருந்தது, அதன், 'கிறீச்' குரல். தன் கையிலிருந்த குஞ்சை, சிறை கம்பிகளுக்கு வெளியே எடுத்து விட்டார் அண்ணாதுரை.
அதைக் கண்ட தாய் பறவை, உடனே, 'சரேல்' என்று பறந்து வந்து, தன் குஞ்சை பக்குவமாக துாக்கிச் சென்று, பொந்தில் விட்டது. அடுத்த கணம், குஞ்சு மகிழ்ச்சிக் குரல் கொடுக்க, தாய் பறவையும் பாசக் குரல் எழுப்பியது. அந்த காட்சியை கண்டு மனம் நெகிழ்ந்தார், அண்ணாதுரை.
- நடுத்தெரு நாராயணன்
