PUBLISHED ON : செப் 02, 2018

'ரீடர்ஸ் டைஜஸ்ட்' இதழிலிருந்து: 'உங்கள் மதிப்பு உயர வேண்டுமா... உங்கள் காதலியுடன், எங்கள் ஓட்டலுக்கு விஜயம் செய்யுங்கள்...' என்ற விளம்பரத்தை பார்த்து, தன் காதலியுடன் சென்றான், ஓர் இளைஞன். இளைஞனிடம் ஒரு, 'மெனு' கார்டையும், அந்த பெண்ணிடம் ஒரு, 'மெனு' கார்டையும் நீட்டினார், சர்வர்.
விஷயம் இது தான்... இளைஞனிடம் உள்ள, 'மெனு' கார்டில், தின்பண்டங்களின் சரியான விலை குறிப்பிடப்பட்டிருக்கும்; பெண்ணிடம் உள்ள கார்டில், ஒவ்வொன்றின் விலையும் நான்கு மடங்காக இருக்கும்.
'அட, நமக்கு இவ்வளவு செலவு செய்கிறாரே...' என்று நினைத்து மகிழ்வாள், காதலி. உடனே, காதலனின் மதிப்பு உயரும்!
ஹென்றி மிலர் எழுதிய, 'ரீடிங் டெக்னிக்ஸ் - வேகமாக படிக்க என்ன வழி?' நுாலிலிருந்து: நீங்கள், மிக நிதானமாக படிப்பவரா... வேகமாக படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உண்டா... கீழ்கண்ட குறிப்புகளை கொஞ்சம் படியுங்கள்:
* படிக்கும்போது, வார்த்தைகளின் உச்சரிப்புக்கு ஏற்ப, நாக்கு அசைந்து கொண்டே இருப்பதை மனதுக்குள் முதலில் நிறுத்துங்கள்; வேகமாக எதையும் படிக்க முடியாமல் தடுக்கும் எதிரி, நம் நாக்கு
* பார்வையை ஒவ்வொரு எழுத்தின் மீதும் செலுத்தாமல், வார்த்தைகள் மீது தாவ விடுங்கள்
* இப்படி பழகியதும், வார்த்தைகளின் மீது பார்வையை பதிக்காமல், ஒரே சமயத்தில், ஒரே பார்வையில், மொத்தமாக இரண்டு அல்லது மூன்று வரிகளை படிக்க பழகுங்கள்
* வேகமாக படிக்க முடிகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டு விட்டால், கடைசியாக செய்ய வேண்டியது, அனாவசியமான வரிகளை ஒரே பார்வையில் புரிந்து, அவற்றை படிக்காமலேயே விட்டு, முக்கியமான விஷயங்கள் கொண்ட வரிகளின் மீது லாவகமாக உங்கள் பார்வையை பாய விடுங்கள்.
'தெரிந்து கொள் தம்பி!' என்ற நுாலிலிருந்து: 'உருப்படாத பயல்' என்று நாமாகவே யாரையும் தீர்மானித்து விடக்கூடாது; சரித்திரம் அப்படித்தான் சொல்கிறது.
தன், ஒன்பதாவது வயதில், இத்தாலியில் பெனன்ஜா என்ற போர்டிங் ஸ்கூலில், முசோலினி படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளி ஆசிரியர் மீது, 'இங்க்' பாட்டிலை வீசியதற்காக, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்; கேலி செய்த ஒரு மாணவனை, இடுப்பில் கத்தியால் குத்தியுள்ளார்.
எட்கர் ஆலன் போ என்ற அமெரிக்க எழுத்தாளர், சரிவர பள்ளிக்கு வராத காரணத்தால், பள்ளியிலிருந்து வெளியேற்றப் பட்டார்.
ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர், டிராட்ஸ்கியும், தன், 10வது வயதில், பள்ளியிலிருந்து வெளியேற்றப் பட்டார்.
விமானம் கண்டுபிடித்த, ஆர்வில் ரைட், 1833ல் அவரது மோசமான நடத்தை காரணமாக, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
'அறிவுச் செய்திகள் ஆயிரம்' என்ற நுாலிலிருந்து: அமெரிக்காவை சேர்ந்த, வால்ட் டிஸ்னி, எர்னஸ்ட் ஹெமிங்வே, மற்றும் சாமர்செட் மாம் ஆகிய மூவரிடையே ஒரு ஒற்றுமை உள்ளது. அது, முதலாம் உலகப் போரின்போது, இவர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர்களாக பணியாற்றியவர்கள் என்பது தான்.
நடுத்தெரு நாராயணன்
