PUBLISHED ON : செப் 02, 2018

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 26 வயது ஆண்; எம்.ஏ., பட்டம் பெற்று, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என், 10 வயதில், எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். அதன் பின், பெண் தன்மை இருப்பதாக உணர்ந்து, பெற்றோரிடம் தெரிவித்தேன்; அவர்கள், மருத்துவரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். ஹார்மோன் குறைபாட்டை தீர்ப்பதற்காக, சிறு அறுவை சிகிச்சை செய்து, மருந்து, மாத்திரை கொடுத்தார்; ஆனாலும், ஆணுக்குரிய சரியான வளர்ச்சி இதுவரை இல்லை; தாடி, மீசை கூட வளரவில்லை.
பெண் தன்மையுடன் இருக்க விருப்பமில்லை; ஆணாக இருக்கவே விரும்புகிறேன். அதற்காக, 'ஸ்பெஷலிஸ்ட்' ஒருவரிடம் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறேன்.
என் பிரச்னை தீருமா... சராசரி ஆணாக மாற முடியுமா... மற்ற ஆண்களை போல், நானும் திருமணம் செய்து கொள்ள முடியுமா... என்னால், நிம்மதியாக துாங்க முடியவில்லை; மன உளைச்சலால் தவிக்கிறோன். என்னை பார்த்து, பெற்றோரும் வருத்தமடைகின்றனர்.
எனக்கு, கல்லுாரியில் படிக்கும் ஒரு தம்பி இருக்கிறான். என் பிரச்னை அவனுக்கு தெரியும்; என்னுடன் அதிகம் பேச மாட்டான். அவனது நண்பர்கள் வீட்டுக்கு வருவதை அனுமதிக்க மாட்டான்.
என்னால், அவனும் பாதிக்கப் படுகிறானோ என, அஞ்சுகிறேன்.
என் பிரச்னை தீருமா... நானும், மற்ற ஆண்களை போல மாறுவேனா... நான் என்ன செய்ய வேண்டும்; ஆலோசனை தாருங்கள் அம்மா...
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
மரபியல் அணு குறைபாடும், ஹார்மோன் குழப்பத்தால் மனித மூளையில் ஏற்படும் மாறுபாடுகளுமே, இது போல், மூன்றாவது பாலினம் உருவாக காரணம். திருநங்கைகளில் இருவகையினர் உண்டு; ஆணாக பிறந்து, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறுவோர் ஒரு வகை.
பெண்ணாக பிறந்து, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு ஆணாக மாறுவோர் இன்னொரு வகை. ஆனால், ஆணாக பிறந்து, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு, பெண் தன்மையை அகற்றி, ஆயுளுக்கும் ஆணாகவே தொடர்ந்து வாழ விரும்புவோர், 'சிஸ் ஜென்டர்' என அழைக்கப்படுவர். இது, திருநங்கைக்கு எதிர் பதம்.
உனக்கு ஆண்மை தனத்தை ஊக்குவிக்கும், 'ஆன்ட்ரோஜென் ஹார்மோன்' தொடர்ந்து செலுத்தி வருகின்றனர் என, நினைக்கிறேன்.
மருத்துவர் ஆலோசனைபடி, சிகிச்சையை தொடர்வது நல்லது. தகுதியான, திறமையான மருத்துவரிடம் தான் நீ சிகிச்சை பெற்று வருகிறாயா என்பதை உறுதி செய்து கொள். மற்றொரு மருத்துவரிடம் இரண்டாம் அபிப்ராயம் பெறு.
உடல் மற்றும் மனதளவில் நீ எப்படி சராசரி ஆணாக மாற வேண்டும் என்பது குறித்தும், உன் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் தணிக்கும் விதம் பற்றி, உன் தேவைகளை நிறைவேற்றும் விதம் பற்றி பெற்றோருக்கும், உன் தம்பிக்கும் மனநல ஆலோசனை தரப்பட வேண்டும்.
ஆணுறுப்பு செயல்பாடு, விந்தணு உற்பத்தி இவற்றை மருத்துவ பரிசோதனை செய்துதான் நீ சராசரி ஆணாக மாறி வருகிறாயா என்பதை மருத்துவர் உறுதி செய்வார்.
உனக்கு சில ஆலோசனைகள்:
* பணியிட நண்பர்களுடனோ மருத்துவ ஆலோசனைகள் பெற்று வரும் சகாக்களுடனோ இயற்கைக்கு புறம்பான தாம்பத்யத்தில் ஈடுபட்டு, 'எய்ட்ஸ்' நோயாளி ஆகிவிடாதே
* உன் பிரச்னையை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதே! ஆண் - பெண் பால் சிக்கலிலிருந்து விடுதலையாகு
* மிகுந்த நம்பிக்கையுடன், தகுதியான மருத்துவரிடம் சிகிச்சையை தொடரவும். மருந்து, 50 சதவீதம் என்றால், நம்பிக்கை, 50 சதவீதம்
* பெற்றோரிடமும், தம்பியிடமும் மனம் விட்டு பேசி, பழகு. அவர்களின் அன்பும் மருந்து தான். உன்னால், உன் தம்பி ஒருபோதும் பாதிக்கப்பட மாட்டான். வீட்டை விட்டு வெளியேற துணியாதே
* ஆண்மையை வெளிப்படுத்தும் விதமாய் ஆடை அணி; ஆண்கள் பயன்படுத்தும் நறுமணத்தை பூசு. பேச்சில் ஆண்மை தன்மை இருக்கட்டும்
* நீ சராசரி ஆணாக மாறவில்லை என்றால், திருமணத்திற்கு அவசரப்படாதே. திருமணம் - தாம்பத்யம் - குழந்தை பெறுதல் என்பதையும் தாண்டியும், இவ்வுலகில் ஆயிரம் சந்தோஷங்கள் உள்ளன. சமூக நியதி மீறாத அந்த சந்தோஷங்களை அனுபவிக்க கற்றுக்கொள்
* திருநங்கையாக இருப்பதோ, 'சிஸ்ஜென்டராக' இருப்பதோ சாபக்கேடு அல்ல. ஆண் - பெண் போல இது மூன்றாவது பாலினம்; மற்றவர்களுக்கு இவ்வுலகில் வாழ என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அனைத்தும் உனக்கும் உள்ளது
* உன் பிரச்னையை நினைத்து கவலைப்படாமல், வேறெந்த விதத்திலாவது உன் வாழ்நாளில் முத்திரை பதிக்க முனைப்போடு செயல்படு.
மனமிருந்தால், மார்க்கம் உண்டு!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
