PUBLISHED ON : அக் 21, 2018

'கொய்த மலர்கள்' என்ற நுாலிலிருந்து: இந்தியாவில், இரண்டாவது பொதுத் தேர்தல், 1957ல் நடைபெற்ற சமயம். தி.மு.க., அலுவலகமான, அறிவகத்திற்கு ஆங்கிலேய பெண் ஒருவர் வந்தார். அப்போது, அலுவலக மாடியில் துாங்கிக் கொண்டிருந்தார், அண்ணாதுரை. அந்த அம்மையார், அண்ணாதுரையை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அண்ணாதுரையோ, பொதுச் செயலர் நெடுஞ்செழியனை பார்க்கும்படி கூறினார். நெடுஞ்செழியனும் அப்போது அலுவலகத்தில் இருந்தார். அந்த அம்மையார் பொதுச் செயலர் மட்டுமின்றி, அண்ணாதுரையையும் பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.
அவரை, வருமாறு அழைத்தார், அண்ணாதுரை.
அந்த பெண்ணுக்கு, 40 வயதிருக்கும். இங்கிலாந்திலிருந்து வெளிவரும் முக்கியமான சில பத்திரிகைகளுக்கு, இந்தியாவின் நிருபராக அவர் பணியாற்றி வந்தார். தி.மு.க.,வின் செயல்பாடுகள் பற்றி அண்ணாதுரையிடம் கேட்டறிந்தார்...
'இவ்வளவு விஷயங்களில் ஈடுபட்டு வரும் உங்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், அதன் வரலாற்றை புரிந்துகொள்ளக் கூடிய வகையில் ஏதேனும் புத்தகம் இருக்கிறதா... இருந்தால் கொடுங்கள்...' என்று கேட்டார்.
அண்ணாதுரை, நெடுஞ்செழியன் முகத்தை பார்த்தார். அப்படிப்பட்ட புத்தகம் இருந்தால் தானே கொடுப்பதற்கு? இருந்தாலும், அண்ணாதுரையோ, கவுரவத்தை விடாமல், 'எல்லா புத்தகங்களும் தீர்ந்து விட்டன. மீண்டும் அச்சடிக்க கொடுத்திருக்கிறோம். உங்கள் முகவரியை கொடுத்து விட்டுப் போங்கள். அனுப்பி வைக்கிறேன்...' என்று கூறினார்.
பின், அந்த பெண், 'உங்கள் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றிற்கு நிறைய மக்கள் கூட்டம் வருவதாக கேள்விப்பட்டேன். அதை படம் பிடித்து வைத்திருப்பீர்களே... அந்த போட்டோக்களை கொடுக்க முடியுமா?' என்று கேட்டார்.
'புகைப்பட தொகுப்பு, இருந்தால் காட்டுங்கள்...' என்றார், அப்பெண் ஆர்வத்துடன்.
அந்த அம்மையார், அப்படி கேட்ட பிறகுதான், அண்ணாதுரைக்கே, அப்படி ஓர், 'ஆல்பம்' தயாரிக்க வேண்டும் என்ற யோசனை வந்தது. கட்சி சம்பந்தமான நிகழ்ச்சிகள் சிலவற்றை, அவ்வப்போது சிலரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பிரேம் போட்டு அறிவகத்தில் மாட்டப்பட்டிருந்தன. அண்ணாதுரை அவற்றை காட்டி, 'இது, பேரணி நடந்த போது, இது, மாநாடு நடந்த போது...' என்று விளக்கினார்.
'இதிலே ஒன்றிரண்டு எனக்கு தர முடியுமா?' என்று கேட்டார், அப்பெண்.
விக்கித்து போனார் அண்ணாதுரை. அந்த படங்களை எடுத்தது யார், எவர் என்று கூட தெரியாதே. அதனால், 'நீங்கள் தான் முகவரி கொடுத்திருக்கிறீர்களே... புத்தகத்துடன் இதையும் சேர்த்து அனுப்பி வைக்கிறேன்...' என்று சொல்லி, அம்மையாரை அனுப்பி வைத்தார்.
'அறிய வேண்டிய அரிய மனிதர்கள்' என்ற நுாலிலிருந்து: ரஷ்ய முன்னாள் அதிபர், ஸ்டாலின் இறந்த பின், குருேஷவ், ரஷ்யாவின் அதிபரானார். அவர், கட்சி செயற்குழு கூட்டத்தில் பேசும்போது, 'ஸ்டாலின் கொடூரமான சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்...' என்று குறிப்பிட்டார்.
'இதை, ஸ்டாலின் இருக்கும்போதே ஏன் சொல்லவில்லை...' என்றொரு குரல் கேட்டது.
கோபத்துடன், தன் கோட் பாக்கெட்டிலிருந்து கைத் துப்பாக்கியை எடுத்து, கூட்டத்தை பார்த்து, 'யார் கேட்டது?' என்றார், குருஷேவ்.
பதில் இல்லை.
'இதே நிலையில் தான் அன்றைக்கு நானும் இருந்தேன்...' என்றார், குருஷேவ்.
நடுத்தெரு நாராயணன்
