
அருணா பப்ளிகேஷன்ஸ் வெளியீடான, 'நரேந்திர மோடி' நுாலிலிருந்து: ஆர்.எஸ்.எஸ்.,சில், முழு நேர ஊழியராக இணைந்து விட்டோருக்கு, சொந்த குடும்ப வாழ்க்கை, இரண்டாம் பட்சம் தான்; இயக்கம் தான் அவர்களது ஒரே குடும்பம். மோடியும், இயக்கத்துக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
இருப்பினும், மோடிக்கு, ஜசோதா பென் என்ற மனைவி உண்டு. இந்த உண்மையை, நரேந்திர மோடி, தன் அரசியல் வாழ்வு முழுவதும் மறைத்தே வைத்திருந்தார். தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் கூட, திருமணம் ஆனவரா... என்ற கேள்விக்கு, பதிலை நிரப்பாமல் காலியாகவே விட்டு வந்தார். அதனால், ஒரு ரகசியத்தை, மூடி மறைக்கிறார் மோடி என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது; இது சம்பந்தமான வதந்திகளும் முளைத்தன.
கடந்த, 2007ல் நடந்த, குஜராத் மாநில சட்டசபை தேர்தலின் போது, 'நரேந்திர மோடியின் மனைவி' என்ற தலைப்பில், ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. பின், 2009ல், 'ஓபன்' என்ற பத்திரிகையில், மோடி மனைவி பற்றிய விரிவான கட்டுரை வெளியானது. இவை இரண்டும் சேர்ந்து, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வீடியோவில் இருந்த விஷயம்...
ஒரு நடுத்தர வயது பெண்மணி, தனக்கும், நரேந்திர மோடிக்கும், 1968ல், திருமணம் நடந்ததாகவும், அதன்பின், அவர்கள் சிறிது காலம் சேர்ந்து வாழ்ந்ததாகவும், பின், திடீரென்று, அவரை விட்டு மோடி பிரிந்து சென்று விட்டதாகவும் சொல்கிறார்.
இதன் பின் வந்த தேர்தலில், மோடி, வேட்பாளராக மனு செய்த போது, அதில், அவர் திருமணம் ஆனவர் என்றும், மனைவி பெயர், ஜசோதா பென் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
'நரேந்திர மோடிக்கு சிறுவயதிலேயே அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்து விட்டனர்; ஆனால், அவர், தன் மனைவியுடன் ஒருபோதும் வாழவில்லை...' என்கின்றன பத்திரிகைகள்.
பள்ளி ஆசிரியையாக பணி புரியும் ஜசோதா பென், இதுவரை வேறு யாரையும் மணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், நரேந்திர மோடிக்கும், இந்த பெண்மணிக்கும் எப்போது திருமணம் நடந்தது... இவர் சொல்லும், 1968ல், மோடிக்கு வயது, 18. அப்போது, இவர் கல்லுாரியில் படித்து வந்தார். இவர்களுக்குள் நடந்தது காதல் திருமணமா... எல்லாம் மர்மமாகவே உள்ளது.
கவிஞர் கண்ணதாசன் பிறந்தது, சைவ குலம். சைவர்கள், சிவபெருமானையே துதிப்பர். கண்ணதாசனின் இயற்பெயர்: முத்தையா. பின்னாளில் வேலை தேடி, சென்னை வந்தபோது, வேலை கொடுப்போர், பெயரை கேட்க, கண்ணதாசன் என்று சொன்னார்.
காரணம், அந்த நாட்களில், பாரதிதாசன், இலக்கியதாசன் போன்ற பெயர்கள் பிரபலமாக இருந்தன. பின்னாளில் கண்ணதாசன் என்ற பெயரே நிலைத்து விட்டது. மேலும், கண்ணதாசன் எழுதிய பாடல்கள் பெரும்பாலும், கண்ணனை பற்றியதாகவே இருந்தது.
தன் படைப்புகளில் சிறந்ததாக கருதப்படும், 'அர்த்தமுள்ள இந்து மதம்' ௧௦ பாகங்களிலும், அதிகப்படியாக, மகாபாரதத்தை சொல்லி, அதிலும், பகவத் கீதையின் மேற்கோள்களே நிரம்பி இருக்கும். சைவராக பிறந்தாலும், வைணவ கடவுள் கிருஷ்ணனையே கொண்டாடினார் எனலாம்.
கண்ணதாசன், வாழ்க்கையில் திறந்த மனதுடனே வாழ்ந்து காட்டினார். அவரின் பாடல்களும், நுால்களும், திறந்த புத்தகம் மட்டுமல்லாது, சிறந்த புத்தகமாகவும் இருந்துள்ளது.
ஒரு முறை, வாசகர் ஒருவர், கண்ணதாசனிடம், 'காந்திஜி, சுய சரிதையான, 'சத்ய சோதனை' எழுதியுள்ளார். தாங்கள், 'வனவாசம்' எனும் சுயசரிதை எழுதியுள்ளீர். நான் எதை படிக்க...' என்றாராம்.
அதற்கு, 'ஒரு மனிதன், எப்படி வாழ வேண்டும் என தெரிந்துகொள்ள, காந்திஜியின், 'சத்ய சோதனை' படியுங்கள். மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள, என், 'வனவாசத்தை' படியுங்கள்...' என்றாராம், கண்ணதாசன்.
- நடுத்தெருநாராயணன்

