
எஸ்.கிருபாகரன் எழுதிய, 'அம்மாவின் கதை' நுாலிலிருந்து: கடந்த, 1965ல் வெளியான, ஸ்ரீதரின், வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம், தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார், ஜெயலலிதா.
'முதல் படத்திலேயே, இளமையான, துறுதுறுப்பான நடிப்பால், ரசிகர்களை அசத்தியிருக்கிறார், சந்தியாவின் புதல்வி...' என, பத்திரிகைகள், அந்நாளில் பாராட்டி எழுதியிருந்தன.
ஜெயலலிதா, மெட்ரிக்குலேஷன் இறுதியாண்டு படித்து வந்தபோது, சந்தியாவுக்கு, சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கின. இதனால், வருமானத்துக்காக, சில நாடக குழுக்களிலும் நடித்து வந்தார். அதில் ஒன்று, 'யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழு!'
நாடக உலகில், பிரபலமான இந்த குழுவின் நிறுவனர், ஒய்.ஜி.பி., என்றழைக்கப்பட்ட, ஒய்.ஜி.பார்த்தசாரதி. ஒய்.ஜி.பி.,யின் மனைவி ராஷ்மி, சென்னை நாட்டிய சங்கத்தின் தலைவராக இருந்ததோடு, பத்மா சேஷாத்ரி பள்ளியையும் நடத்தி வருகிறார்.
நடிகை என்பதை தாண்டி, சந்தியா குடும்பத்துடன், ஒய்.ஜி.பி., தம்பதி, நட்புடன் இருந்தனர். ஒருமுறை, ராஷ்மி பொறுப்பேற்றிருந்த, சென்னை நாட்டிய சங்கம், தி ஹோல் ட்ரூத் என்ற ஆங்கில நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டது. அந்த, 'த்ரில்லர்' நாடகத்தில், வில்லனால் கொல்லப்படும் மூன்று பெண்களில், ஓர் இளம்பெண் கதாபாத்திரம் இருந்தது.
எதையும் நவீனமாக செய்ய நினைக்கும் ராஷ்மிக்கு, இளம்பெண் வேடத்துக்கு, வயதான அல்லது நடுத்தரமான வயதில் உள்ள நடிகையை நடிக்க வைப்பதில் மனமில்லை. அதேநேரம், ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால் மட்டுமே நாடகம் எடுபடும். இந்த தகுதிகளுடன் பொருத்தமான ஓர் இளம்பெண்ணை, தேடி வந்தார்.
அப்போது, ஒரு குடும்ப நிகழ்வுக்காக, சந்தியா, தன் மகள் ஜெயலலிதாவுடன், ராஷ்மி வீட்டுக்கு வந்திருந்தார். ஜெயலலிதாவை பார்த்ததும், ராஷ்மிக்கு, அவரது நடை, உடை, பாவனை யாவும் பிடித்து போனது. 'கண்டேன் சீதை'யை என்று ராஷ்மி கத்தாத குறை தான். 'ஜெயலலிதாவே, அந்த இளம்பெண்' என்று முடிவானது. ஒப்புக்கொண்டார், சந்தியா.
நாடகத்தில் வில்லனாக நடித்தவர், சோ. ஆம்... திரைத்துறைக்கு வரும் முன், ஒய்.ஜி.பி.,யின் நாடக குழுவில், 'அமெச்சூர்' நடிகராக இருந்தார். வழக்கறிஞர் தொழிலோடு, நாடகங்களின் மீதான காதலால், வீட்டுக்கு தெரியாமல், நாடகங்களில் நடித்து வந்தார், சோ.
தி ஹோல் ட்ரூத் நாடக ஒத்திகையின் போது, சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. கதைப்படி, வில்லனான சோ, மூன்றாவது இளம்பெண்ணை, கழுத்தை நெரித்து கொல்ல வேண்டிய காட்சி. அதற்கு முன், பார்வையாளர்களை மிரட்சிக்குள்ளாக்கும் வகையில், அச்சம் தரும்படியான நீளமான வசனத்தை, பேசுவார்.
ஒத்திகையில் நடந்ததோ வேறு. வில்லனான சோ, நீளமான வசனத்தை பேசும் வரை அஞ்சி, நடுங்கியபடி இருந்த ஜெயலலிதா, சோ, தன்னை கழுத்தை நெரிக்க முயலும்போது, தன்னையும் அறியாமல், பெரும் சத்தத்துடன் சிரித்து விடுவார். ஒருமுறை, இருமுறை அல்ல; 10 முறைக்கு மேல், இப்படியே நீண்டது.
கடுப்பான ராஷ்மி, 'அம்மு... என்ன இது... கொலை செய்ய வருபவனை பார்த்து சிரிப்பாயா... பயப்படுவது போல் நடி...' என்றார்.
அதற்கு ஜெயலலிதா, 'ஆன்ட்டி... முடிந்தால், இந்த கேரக்டருக்கு வேறு ஆளை போடுங்கள்... சோ, இந்த கேரக்டரில் நடித்தால், நான் சிரிக்க தான் செய்வேன்...' என்றார்.
'ஏன் சிரிக்கிறாய்...' என, கேட்டார், ராஷ்மி.
'சோ, என் கழுத்தை நெரிக்கும்போது, அவரது முட்டை கண்கள், பிதுங்கி நிற்கின்றன. அது, பயத்துக்கு பதிலாக சிரிப்பை வரவழைத்து விடுகிறது...' என்றார்.
இதைக் கேட்டு, அங்கிருந்த அனைவருமே சிரித்தனர்.
ஆனால், அரங்கேற்றத்தின்போது, இந்த சிக்கல் இல்லை. தன்னை கட்டுப்படுத்தி, பயந்தவாறே சிறப்பாக நடித்தார், ஜெயலலிதா. ஆம்... 'திறமையான நடிகை' என, ராஷ்மியிடம் பாராட்டு பெற்றார்.
அந்த நாடகத்தில், ஜெயலலிதாவின் நடிப்பு, புதுவிதமாக இருந்ததால், தொடர்ந்து தங்கள் நாடகங்களில் நடிக்க வைத்தனர், ஒய்.ஜி.பி., தம்பதி. சோவுடன், தி ஹவுஸ் ஆப் தி ஆகஸ்ட் மூன் உள்ளிட்ட சில ஆங்கில நாடகங்களில் இணைந்து நடித்தார். சோவுக்கும், அவருக்குமிடையே நல்ல நட்பு உருவானது, இந்த கால கட்டத்தில் தான்.
இளம்பெண்ணாக, சோவுக்கு அறிமுகமான ஜெயலலிதா, தன் வாழ்வின் இறுதி காலம் வரை, அவருடன் ஆரோக்கியமான நட்பு பாராட்டினார். தனக்கு பிடித்த நான்கு ஆண்கள் என, 1970களின் மத்தியில், ஒரு சினிமா பத்திரிகை கட்டுரையில் எழுதிய ஜெயலலிதா, அதில், முதலில் சோவை தான் குறிப்பிட்டிருந்தார். இளமை காலத்தில், நாடகத்தில் துவங்கிய இவர்களின் நட்பு, சினிமா, அரசியல் என, இருவரின் அந்திம காலம் வரையிலும் தொடர்ந்தது. இருவரது இறப்பும், அடுத்தடுத்து நிகழ்ந்ததும் ஆச்சரியமானது.
ஒருமுறை படப்பிடிப்புக்காக, கொடைக்கானலில் தங்கியிருந்தார், ஜெயலலிதா. அதை கேள்விப்பட்ட பெரும்புள்ளி ஒருவர், கடை திறப்பு விழாவில், ஜெயலலிதா கலந்து கொள்வதாக, அவரிடம் அனுமதி பெறாமல், ஊரெல்லாம், 'போஸ்டர்' அடித்து ஒட்டினார். நடிகைதானே என்ற இளக்காரம். பின், ஜெயலலிதாவை அணுகியபோது, 'வர முடியாது...' என, மறுத்தார்.
'வரவில்லை என்றால் எனக்கு அவமானம் ஆகிவிடும்...' என்ற பெரும்புள்ளி, 'வேண்டுமானால், நீங்கள் கேட்கும் தொகையை தந்து விடுகிறேன்...' என, கெஞ்ச ஆரம்பித்தார்.
கொதித்து போன ஜெயலலிதா, 'அனுமதியின்றி பெயரை போட்டதோடு, பணம் தருவேன் என்கிறீர்கள். நடிகை என்றால் இளக்காரமா... எத்தனை லட்சம் கொடுத்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டேன். உங்கள் தவறுக்கு, நீங்கள் அவமானப்படுவது தான், சிறந்த தண்டனை. மீறி வற்புறுத்தினால், காவல்துறைக்கு தகவல் சொல்வேன்...' என்றதும், ஓடிப்போனார், பெரும்புள்ளி.
ஜெயலலிதாவின் துணிச்சலை வெளிப்படுத்தும், இன்னொரு சம்பவமும் உண்டு. 1972ல், கர்நாடக மாநிலம், பெங்களூருவில், ஒரு நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்ட ஜெயலலிதா, நிகழ்ச்சி நடத்துவோர், மொழி வெறியாளர்கள் என்பது தெரிய வந்ததும், அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
'கன்னடச்சியாக இருந்தும், எங்களை அவமானப்படுத்திய ஜெயலலிதாவை விடமாட்டோம்...' என, கொதித்தனர்.
இதுகுறித்து பத்திரிகை ஒன்றின் கேள்விக்கு, 'நான், மைசூரில் பிறந்திருந்தாலும், தமிழ் குடும்பத்தை சேர்ந்தவள். என் தாய்மொழி, தமிழ். நான் ஒரு தமிழச்சி...' என்று பதிலளித்திருந்தார்.
இது, அங்குள்ள கன்னட மொழி உணர்வாளர்களை உசுப்பி விட்டது. இந்த சமயத்தில், கங்கா கவுரி என்ற படத்தின், படப்பிடிப்புக்காக, மைசூரில் உள்ள, 'பிரீமியர் ஸ்டுடியோ'வுக்கு சென்றிருந்தார், ஜெயலலிதா.
விஷயமறிந்து, 'கன்னட சலுவாலியர்' என்ற அமைப்பை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், ஸ்டுடியோவை முற்றுகையிட்டு, தகராறில் ஈடுபட்டனர்.
'கன்னடர் என, ஜெயலலிதா ஒப்புக்கொள்ளவில்லை எனில், யாரும் வெளியேற முடியாது...' என, அவர்கள் மிரட்டினர். பயந்துபோன தயாரிப்பாளர், பந்துலு, பிரச்னையை சமாளிக்க, ஜெயலலிதாவை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார்.
'மிரட்டுகின்றனர் என்பதற்காக, இல்லாத ஒன்றை சொல்ல மாட்டேன்...' என, தன் கருத்தில் உறுதியாக இருந்தார், ஜெயலலிதா.
ஜெயலலிதாவை சிலர் தாக்க முயன்றனர்.
'என்ன நடந்தாலும் சரி... நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்...' என, அப்போதும், தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டார், ஜெயலலிதா.
வேறு வழியின்றி, 'எங்கள் முன், கன்னடத்திலாவது பேசிக் காட்ட வேண்டும்...' என, போராட்டக்காரர்கள் இறங்கி வந்தனர்.
அப்போதும், 'எனக்கு, எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும், அதை என் தேவைக்காக மட்டுமே பேசுவேன்; என்னை மிரட்டி பேச வைக்க முடியாது...' என, விடாப்பிடியாக நின்றார்.
நிலைமை விபரீதமாவதைக் கண்டு, படக்குழுவை சேர்ந்த ஒருவர், தந்திரமாக வெளியேறி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், காவல்துறை அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, சென்னையில் இருந்த, எம்.ஜி.ஆருக்கு போனில் தகவல் தெரிவித்தார், தயாரிப்பாளர் பந்துலு.
உடனடியாக, கர்நாடக முதல்வரிடம், எம்.ஜி.ஆர்., விஷயத்தை கூற, அதன் பிறகே சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டக்காரர்களை விரட்டியடித்தது, போலீஸ்.
உயிருக்கே ஆபத்து உருவான இக்கட்டான நேரத்திலும், தன் துணிச்சலை வெளிப்படுத்திய ஜெயலலிதாவின் குணம், திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
நடுத்தெருநாராயணன்

