sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : டிச 02, 2018

Google News

PUBLISHED ON : டிச 02, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது: 40, கணவர் வயது: 48. நான், கல்லுாரியில் பேராசிரியையாக உள்ளேன். கணவர், மத்திய அரசில் பணிபுரிகிறார். 20 வயதில், எனக்கு திருமணம் ஆனது. எங்களுக்கு ஒரு மகன்; கல்லுாரியில் படிக்கிறான்.

அழகும், குணமும் உடைய எனக்கு, நேர்மாறான குணம் கொண்டவர், என் கணவர். தாழ்வு மனப்பான்மையும், சந்தேக குணமும் நிறைந்தவர். திருமணம் ஆன நாளிலிருந்து, எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டு, வார்த்தை அம்புகளால் கொன்று வருகிறார்.

காலையில் கல்லுாரி போகும்போது, நெற்றியில் இருக்கும் குங்குமம், மாலை வரை அப்படியே இருக்க வேண்டும்; சிறிதும் கலையக்கூடாது. அப்படி கலைந்து விட்டால், அவ்வளவு தான். அன்று இரவு வசவும், அடியும் தான் கிடைக்கும். என் மகனுக்காக, இவரது கொடுமைகளை சகித்துக் கொண்டேன்.

வெளியூரில் வசிக்கும் பெற்றோர், என்னை பார்க்க வந்து விட்டால், இவர், ஓட்டலில் போய் தங்கிக் கொள்வார். அவர்கள், ஊருக்கு போன பின் தான், வீட்டுக்கு வருவார். இவரது குணம் தெரிந்து, என் பெற்றோர் வருவதே இல்லை.

என் மகனும், அவரது போக்கு தெரிந்து, விலகிப் போகிறான். அவனது மனநிலையும் பாதிக்குமோ என்று அஞ்சுகிறேன்.

தினமும் மன வருத்தத்துடன் இல்லறத்தை ஓட்டி வருகிறேன்; நான் என்ன செய்ய வேண்டும்.

இப்படிக்கு,

அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —

ஆண்மை இல்லாதவன், தாழ்வு மனப்பான்மை மிகுந்தவன், மிதமிஞ்சிய குடிப்பழக்கம் உள்ளவன், இரவு பணி உள்ள ஒரு சில ஆண்கள் மற்றும் தனக்கு சிறிதும் பொருத்தமில்லாத பேரழகியை மனைவியாக கொண்டவர்கள், சந்தேக பிராணியாக உழல்வர்.

ஒரு பெண், தவறு செய்ய நினைத்தால், ஏழு கடல், ஏழு மலை தாண்டிய, அகழி சூழ் மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருந்தாலும், தடம் புரள்வாள். பத்தினியாக இருக்கும் பெண்ணை கூட, தொடர்ச்சியாக சந்தேகப்பட்டு காயப்படுத்திக் கொண்டிருந்தால், அவளது மனம், கெட்டதை நாடும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

காலையில் வைத்து செல்லும் குங்குமம் கலைந்து போய், வீடு திரும்பும் நேரத்தில், மீண்டும் புதிதாய் குங்குமம் வைத்து திரும்பினால், உன் கணவர் என்ன செய்வார்...

மாமனார் - மாமியார் பெற்ற அழகு மகள், தாம்பத்யம் செய்ய தேவை; ஆனால், அவர்கள் வீட்டுக்கு வந்தால், உன் கணவர், ஓட்டலில் போய் தங்குவது எந்த ஊர் நியாயம்...

பல ஆண்கள், பணி இடத்தில் கொடுக்கும் சம்பளத்துக்கு ஒழுக்கமாகவும், நல்ல பெயர் சம்பாதிக்க வேண்டி, பொது இடங்களில் பதவிசாக நடந்து கொள்வர். பகைத்து கொள்ளக் கூடாது என்பதற்காக, சொந்த பந்தங்களை கூட அனுசரித்து போவர். அவர்கள் வாலாட்டுவது, கட்டின மனைவியிடம் தான்.

தங்களின் மன அழுத்தங்களை, அவமானங்களை, மன விகாரங்களை, வக்கிரங்களை, மனைவி மீது காட்டுவர். எங்கெங்கோ, யார் யாருக்கோ அடிமையாக இருக்கும் ஆண், எஜமானனாக துடிப்பது, கட்டின மனைவியிடம் தான். அவர்களை பொறுத்தவரை, மனைவி, ஒரு இடி தாங்கி.

ஒரு சந்தேக பிராணியை, 20 ஆண்டு சகித்து, வாழ்ந்து விட்டாய்.

இனி, உன் முழு கவனமும், மகன் மீது தான் குவிய வேண்டும். மகனுடன், தகவல் தொடர்பை வளர்த்துக் கொள். வாழ்வின் பல நிலைகளில் சந்திக்கப் போகும் பெண்களுடன், அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி மரியாதை செலுத்த வேண்டும், அவர்களது இருப்பை எப்படி அங்கீகரிக்க வேண்டும் என்பதை, இதம் பதமாய் கற்றுக்கொடு.

ஆண் - பெண் உறவு சிக்கல் ஏற்படாமல், நுட்பமாய் செயல்படும் வித்தையை சொல்லித் தா.

ஆணுக்கென்று ஒரு மனம் இருப்பது போல், பெண்ணுக்கென்று ஒரு மனம் இருக்கிறது. அதை காயப்படுத்தாமல் வாழ, உன் மகனுக்கு தெளிவாக கூறு. உறவுகளின் மீது சந்தேகப்படுவது, குடம் பாலில், ஒரு துளி விஷம் கலப்பதற்கு சமம். அந்த கொடிய குற்றத்தை ஒருபோதும் செய்யாதே என்று அறிவுறுத்து. மொத்தத்தில், உன் மகனை, ஓர் நல்ல ஆணாக மாற்றிடு.

இன்னும் செய்ய வேண்டியவைகளை பட்டியலிடுகிறேன்...

* பிறரின் கண்ணை உறுத்தும் அளவுக்கு, உன் அலங்காரம் இருக்கிறதா என்று சுயபரிசோதனை செய்து கொள். அப்படி இருந்தால், அலங்காரத்தை மிதமாக்கு

* உன் கணவர், தேள் மாதிரி கொட்டினால், கோபத்தை காட்டாது திருப்பி அடி. 'எனக்கு, 40 வயதாகிறது. இளமை திரும்புவதில்லை. என்றைக்காவது, உங்களை, நான் சந்தேகப்பட்டிருக்கிறேனா... உங்களை பார்த்து, உங்கள் மகன், சந்தேகப்பிராணி ஆனால், அவனது எதிர்கால திருமண வாழ்க்கை என்னாகும்... கெட்ட குணங்களுக்கு ஓய்வு கொடுங்கள். தொடர்ந்து, 20 ஆண்டுகள் என்னை காயப்படுத்தி விட்டீர்கள்... அடுத்த, 20 ஆண்டுகளுக்கு, காயங்களுக்கு மருந்து போடுங்கள்...' எனக் கூறு

* 'நீங்கள் திருந்தா விட்டால், உங்களை விவாகரத்து செய்ய மாட்டேன்; உதாசீனப்படுத்துடுவேன். நானும், மகனும், உங்களிடமிருந்து விலகி, வெகுதுாரம் போய் விடுவோம்...' என, சொல்

* கல்விப் பணியில், முழு கவனத்தை திருப்பு. ஓய்வு நேரங்களில் இசை கேள். வேறு உபயோகமான பொழுது போக்குகளில் ஈடுபடு

* உன் மகனுடன் நில்லாது, வகுப்பு மாணவ - மாணவியருக்கும், ஆண் - பெண் உறவு சிக்கல்களை அவிழ்க்கும் சூத்திரத்தை கற்றுக்கொடு.

உன் கணவரின் அடாவடிகளை பொருட்படுத்தாது, உபயோகமான வாழ்க்கையை வாழப் பார் மகளே!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us