
தியோடர் பாஸ்கரன் எழுதிய, 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து: தென் மாநில சினிமா வரலாற்றில், முதல், 20 ஆண்டுகளில், வர்த்தக ரீதியாக ஒரு படமும் தயாரிக்கப்படவில்லை. இன்று, பரந்து விரிந்து வளர்ந்துள்ள சினிமாத் துறையை, தயாரிப்பு, வினியோகம், காட்சிப்படுத்துதல் என்று பிரித்தால், காட்சிப்படுத்துதல் மட்டுமே முதல், 20 ஆண்டுகளில் வளர்ந்தது எனலாம். மற்ற இரு அம்சங்களும் அப்போது ஆரம்பமாகவில்லை.
வேகமாக பரவி வந்த சலனப் படத்துறை, சென்னை, அண்ணாசாலையில், 'போட்டோ ஸ்டுடியோ' வைத்திருந்த வெங்கையா என்பவரை ஈர்த்தது. சென்னையில், இரண்டு நிரந்தர கொட்டகைகளும், பல, 'டூரிங் டாக்கீஸ்'களும், சலனப் படங்களை, வெற்றிகரமாக திரையிட்டுக் கொண்டிருந்தன.
'கிராமபோன்' ஒன்றுடன் இணைக்கப்பட்ட, 'புரொஜக்டர்' ஒன்றை வாங்கி, விக்டோரியா ஹாலில் படங்களை திரையிட ஆரம்பித்தார், வெங்கையா. அவை, 500 அடி நீளமே உடைய, அமெரிக்க துண்டுப் படங்கள். படம், திரையில் விழ ஆரம்பித்ததும், ரெக்கார்டு சுழல ஆரம்பித்து, ஒலி பிறந்து, படங்கள் பேசுவது போன்ற பிரமை ஏற்படும்.
வசூல் நன்றாகவே இருந்தது. பின், இலங்கைக்கும், பர்மாவிற்கும் சென்று படங்களை திரையிட்டு, கணிசமான தொகையுடன் திரும்பிய வெங்கையா, ஒரு நிரந்தர சினிமா கொட்டகையை கட்டி, சென்னையிலேயே தங்க முடிவு செய்தார்.
அண்ணாசாலையில், 1913ல், 'கெயிட்டி' தியேட்டரை கட்டினார். முதன் முதலாக, இந்தியர் ஒருவரால், தென் மாநிலத்தில் கட்டப்பட்ட இந்த திரையரங்கு தான், தியேட்டர்களுக்கு எல்லாம் முன்னோடி. அதுமட்டுமல்ல, முதலில் வைத்த, 'கெயிட்டி' என்ற பெயரே, இறுதி வரை நிலைத்திருந்தது.
தற்சமயம், அந்த தியேட்டர் இருந்த இடம், வணிக வளாகமாகி விட்டது.
பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து: கடந்த, 1967ல் நடந்த பொதுத் தேர்தலில், தி.மு.க., அடைந்த வெற்றிக்கு காரணமே, அண்ணாதுரை தான். 51 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டுகளை பெற்ற காங்கிரஸ், ஆட்சியை பிடிக்க, அக்கட்சியின் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிப் போவதால் தான் என்பதை அறிந்த அண்ணாதுரை, அந்த கணக்கையே ஆயுதமாக்கி, காங்கிரசை வீழ்த்தினார்.
முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட், சுதந்திரா கட்சி மற்றும் ம.பொ.சி.,யின் தமிழரசு கழகம் ஆகிய கட்சிகளை, தி.மு.க.,வின் தலைமையில், காங்கிரஸ் எதிர்ப்பு கூட்டணியாக உருவாக்கினார், அண்ணாதுரை.
ஒவ்வொரு கட்சியும், தன் கொள்கை எதையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். காங்கிரஸ் எதிரியான ராஜாஜி, இந்த கூட்டணி அமைவதற்கு, அண்ணாதுரைக்கு உற்ற துணையாக இருந்தார்.
தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று, எந்த தலைவருமே எதிர்பார்க்கவில்லை. முன்னாள் முதல்வராக இருந்த பக்தவத்சலம், சில, பல தவறுகள் செய்திருந்தாலும், குறைந்த பெரும்பான்மையுடன், கட்டாயம் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று நம்பினார், காமராஜர்.
ஆனால், காமராஜரின் தனிப்பட்ட செல்வாக்கே, விருதுநகர் தொகுதியில், அவரையே காப்பாற்ற முடியாத அளவுக்கு, காங்கிரஸ் எதிர்ப்பு அலை வேகமாக வீசியது.
தி.மு.க.,வுக்கு, கூட்டணி தான் பெரும்பான்மை பலம் பெறுமே தவிர, தனிப் பெரும்பான்மை கிடைக்காது என, நினைத்தார், ராஜாஜி. ஆனால், தமிழக வாக்காளர்கள், தி.மு.க.,வுக்கு தனிப்பெரும்பான்மை அளித்து, ராஜாஜியின் வியூகத்தை பொய்யாக்கினர்.
தி.மு.க., தனிப் பெரும்பான்மை பெறும் என்பதில், அண்ணாதுரைக்கும் சந்தேகம் இருந்திருக்க வேண்டும். இல்லையெனில், தென் சென்னை, எம்.பி., தொகுதியில், அவர் போட்டியிட்டிருக்க மாட்டார்.
நடுத்தெரு நாராயணன்

