
அன்புள்ள அம்மா —
நான், 30 வயது பெண். படிப்பு, பி.காம்., தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனக்கு, இரு தங்கைகள் உள்ளனர். முதல் தங்கைக்கு, சமீபத்தில் திருமணமானது. கடைசி தங்கை, கல்லுாரியில் படித்து வருகிறாள். என் அப்பா, ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர். 'பென்ஷன்' வருகிறது.
என் கணவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருடன் கூட பிறந்த ஒரே அக்கா. திருமணமாகி, வெளி மாநிலத்தில் உள்ளார்.
எங்கள் இருவரது சம்பளமும் சேர்த்து, மாதம், 60 ஆயிரம் வரும். வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். எங்களுக்கு ஒரு மகள், 6 வயது. வீட்டு வாடகை, மளிகை, மின்சார பில், மருத்துவ செலவு, பள்ளி கட்டணம், இதர செலவுகள் என்று, 'பட்ஜெட்' போட்டு குடும்பம் நடத்தினாலும், கடைசியில் கையில் மிஞ்சுவது சொற்ப பணம் தான்.
ஒரு வசதியும் செய்து தராமல், வாடகை மட்டும் கறாராக வசூலிக்கிறார், வீட்டு உரிமையாளர். அவர் தரும் தொல்லையிலிருந்து விடுதலை பெற, சொந்த வீடு வாங்கலாம் என்றால், கைக்கும், வாய்க்குமே சரியாக இருக்கிறது.
சொந்த வீடு வாங்க, எந்தவித முயற்சியும் எடுக்காத கணவர் மீது ஆத்திரமாக வருகிறது. ஏதாவது முயற்சித்தால், நான் ஆதரவாக இருக்கவும் தயாராக இருக்கிறேன். 'சொந்த வீடு' என்ற பேச்சை எடுத்தாலே, 'சென்னையில் சொந்த வீடு வாங்கவே முடியாது...' என்று எதிர்மறையாக பேசி, சென்று விடுகிறார்.
குழந்தையின் எதிர்காலம் மற்றும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் அலைபாய, மன உளைச்சல் தான் அதிகமாகிறது.
என்ன செய்வது, எப்படி செயல்படுவது என, ஆலோசனை கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு, அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
புதிதாக திருமணம் ஆன ஆணுக்கும், பெண்ணுக்கும் எல்லாவற்றிலும் அவசரமோ அவசரம். வங்கி கடனில் வீடு கட்ட வேண்டும்; இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் வாங்கி, வீட்டின் முன் நிறுத்த வேண்டும்; வீட்டு உபயோக பொருட்களை வாங்கி குவிக்க வேண்டும் என்கிற தீராத ஆசை, அவர்களுக்குள் தலைவிரித்து ஆடுகிறது.
வாங்கும் சம்பளத்தில், 80 சதவீதத்தை, ஈ.எம்.ஐ.,யாக கட்டி விட்டு, வயிற்றில் ஈரத்துணியை போட்டு, வீட்டுக்குள் சுருண்டு கிடக்கின்றனர். வங்கி, தனி நபர் மற்றும் 'கிரெடிட் கார்டு' கடன்கள், இளைய தலைமுறையை, மலை பாம்பாய் சுற்றி வளைத்து, கபளீகரம் பண்ணத் துடிக்கின்றன.
வங்கியில், 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு வீடு வாங்குகிறாய் என, வைத்துக்கொள். 20 ஆண்டுகளுக்கு, 240 தவணைகளில் பணத்தை திரும்ப கட்ட வேண்டும். மாதாந்திர தவணை, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, வட்டி மட்டும், 30 ஆயிரத்திற்கு மேல் கட்ட வேண்டும்.
வீட்டின் அடக்க விலையை கணக்கிட்டால், வட்டியுடன், 50 - 60 லட்சம் ரூபாய் வரும். ஒரு பொருளை, இரண்டு மடங்கு கொடுத்து வாங்க வேண்டுமா... சம்பாதிப்பதும், வீடு கட்டுவதும், உங்களுக்காக அல்ல... வங்கியின் நலனுக்காக என்றாகி விடும்.
மேலும், அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாங்கும் வீடுகளுக்கு, மறு விற்பனை வாய்ப்பு மிக குறைவு. அதற்காக தான் கடன் வாங்கி, வீடு வாங்க வேண்டாம் என்கிறேன்.
திருமணம் ஆகி, ஏழு ஆண்டுகள் ஆகின்றன. எவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாய்... சேர்த்துள்ள பணம் லட்சக்கணக்கில் என்றால், ஒரு வீட்டு மனையை வாங்கிப் போடு. வீட்டு மனை, உங்கள் பணியிடத்திலிருந்து வெகு துாரத்தில் இருக்கக் கூடாது.
இரண்டு, மூன்று ஆண்டுகளில் வளர்ச்சியடைந்து விடும் ஏரியாவில், மனை வாங்குவது புத்திசாலித்தனம். மனைக்கு, மாநகராட்சியின், 'அப்ரூவல்' கட்டாயம் தேவை. தங்கத்தை விட, வங்கி வட்டியை விட, மனையில் முதலீடு செய்வது, நல்லது.
நீயும், உன் கணவரும் பிறந்த இடம் வேறாகவும், பிழைக்க வந்த இடம் சென்னையாகவும் இருக்கக் கூடும். உங்கள் இருவருக்கும் பணியிட மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என பாருங்கள். ஓய்வுக்கு பின், எங்கு குடியேறப் போகிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள்.
சென்னையில் தான் என்றால், வைத்திருக்கும் நகையை விற்று, பணம் சேகரியுங்கள். 900 சதுர அடி வீடு கட்ட, ஒரு பட்ஜெட் தயாரியுங்கள். பட்ஜெட் மிக சிக்கனமாய் இருக்கட்டும். நகை விற்ற பணத்தையும், இரு தரப்பு பெற்றோரிடம் கைமாத்து பெற்ற பணத்தையும் வைத்து, வீடு கட்டுங்கள்.
அடுக்கு மாடி குடியிருப்பில், வீடு வாங்காதீர், தொகையும் அதிகம். புழக்கத்துக்கு தண்ணீர் கிடைக்காது; பராமரிப்பிற்காக கட்டணம் வசூலிப்பர்.
வீடு வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என, நீ, அவசரப்படவும் கூடாது. கணவரை போல, சென்னையில் சொந்த வீடு வாங்கவே முடியாது என, பொறுப்பில்லாமலும் பேசக் கூடாது. இருவரும் ஆக்கப்பூர்வமாக பேசி, ஒரு முடிவுக்கு வாருங்கள். வரும் சம்பளத்தை, வங்கி கடனுக்கு செலுத்தி, செலவுக்கு வெளியில் கடன் வாங்கி, மூழ்கி போகும் அவலம் கூடாது.
சென்னையிலிருந்து, 30 - 40 கி.மீ., துாரத்தில் மனை வாங்கி, வீடு கட்ட தயாரில்லை; 15 - 20 கி.மீ., துாரத்தில், அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டை வாங்கி, கடனில் மூழ்க தயாரில்லை என்கிற நிலை வந்தால், கணவரின் சொந்த ஊரில், சொற்ப செலவில் வீடு கட்டி, அந்த வீட்டை வாடகைக்கு விடுங்கள். வாடகையை மாமனார் - மாமியார் வசூலித்து, உன் வங்கி கணக்கில் சேர்க்கட்டும்.
சொந்த வீடு கட்டா விட்டால், தெய்வ குற்றம் ஆகிவிடுமா... சந்தோஷத்தை தொலைத்து, வீடு கட்டாதே, வாங்காதே... யோசித்து செயல்படு மகளே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

