
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் உலகம் நீயாக!
நிமிடத்திற்கு அறுபது நொடிகளல்ல
அதற்கு மேல் ஒன்றைக் கூட்டினாலும்
அங்கேயும் நீதான் வந்து
துடித்துக்கொண்டிருப்பாய்
என் ஞாபக நொடிகளில்...
ஒரு நாளைக்கு
இருபத்தினான்கு மணியல்ல
அதற்கு மேல் எவ்வளவு நீட்டித்தாலும்
என் நினைவுகளின் நிரந்தர வாசியாக
நீதான் இருப்பாய் எப்போதும்!
இரவு பகல்
இரு பொழுதுகளைத் தாண்டி
மூன்றாவதாக ஒன்றைக் கண்டறிந்தாலும்
நீதான் துடித்துக்கொண்டிருப்பாய்
என் இதய கடிகாரத்திற்குள்!
உறக்கம் விழிப்பு
இரண்டையும்
பிரதானமாகக் கொண்டுதான்
இயங்குகிறது இப்பூவுலகம்!
நான் உன்னை மட்டுமே
மையமாகக் கொண்டு
இயங்கிக்கொண்டிருக்கிறேன்!
என் உலகம் நீயாக
சுழன்றுகொண்டிருக்கிறாய்
நான் சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னால்!
— சித்ராதேவி,சென்னை.

