
பழனி ஜி.பெரியசாமி எழுதிய, இதய ஒலி - என் வாழ்க்கை அனுபவங்கள், என்ற நுாலிலிருந்து: எம்.ஜி.ஆரின் கண்ணியத்துக்கு ஓர் உதாரணம்: நான், அப்போது அமெரிக்காவில் வசித்து வந்தாலும், தமிழ் மீது கொண்ட காதலால், 'வாழும் தமிழ் உலகம்' எனும் பத்திரிகையை நடத்தி வந்தேன்.
வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களிடையே பிரபலமாகி இருந்தது, அப்பத்திரிகை. ஆனால், நான் நடத்தி வந்த பத்திரிகையில், எம்.ஜி.ஆர்., மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோரின் வெற்றி செய்தியை வெளியிட வேண்டும் என நினைத்து, அதற்காக, ஒரு அட்டை படத்தை தயாரித்தேன்.
அதில், பரந்த இந்திய வரைப்படத்தில், எங்கும் மக்கள் இருப்பதை போன்று வரைந்து, அதன் மையப் பகுதியில், எம்.ஜி.ஆரின் படத்தை பெரிதாகவும், ராஜிவ் படத்தை, சிறியதாகவும் சித்தரித்திருந்தேன்.
அட்டை படத்துடன் தயாரித்திருந்த சிறப்பிதழை, அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, எம்.ஜி.ஆரிடம் காட்டினேன். பார்த்ததும், சந்தோஷப்படுவார் என்ற நினைப்போடு அவர் அருகில் நின்றேன்.
அட்டை படத்தை பார்த்த, எம்.ஜி.ஆரின் முகம், உடனே சுருங்கியது. அருகில் நின்றிருந்த என்னை, ஏற இறங்க பார்த்தார். பின், புத்தகத்தை என்னிடம் கொடுத்து, அமைதியானார்.
புத்தகத்தை பார்த்து மகிழ்ச்சியடைவார் என்று எதிர்பார்த்த எனக்கு,எம்.ஜி.ஆரின் இந்த செயல், புரியாத புதிராக இருந்தது.
எம்.ஜி.ஆரை மிக அழகாக சித்தரித்து, அட்டை படம் போட்டுள்ளோம். ஆனால், அவரோ, அதை பார்த்து ஒன்றும் கூறவில்லையே என்று நினைத்து, 'ஐயா... அட்டை படம் எப்படி இருக்கிறது...' என்று, கேட்டேன்.
சிறிது நேரம் பேசாமல் இருந்த, எம்.ஜி.ஆர்., பின், என்னை பார்த்து, 'டாக்டர்... இந்த அட்டை படத்தில், எனக்கு கொஞ்சம் கூட ஒப்புதல் இல்லை. நான், ஒரு மாநிலத்தின் முதல்வர்... ராஜிவ்வோ, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பிரதமராக உள்ளார்.
இந்நிலையில், ராஜிவ்வின் படத்தை பெரிதாகவும், முதல்வரான என் படத்தை சிறியதாகவும் அமைத்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் அப்படி செய்யவில்லை. என் படத்தை பெரிதாக சித்தரித்துள்ளீர்.
இது தவறல்லவா...' என, மென்மையாக கேட்டார், என்னிடம்.
அப்போது தான், என் தவறை உணர்ந்தேன்.
அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் சிறிதும் கர்வம் இன்றி, தான் என்ற பெருமை கொள்ளாமல், ராஜிவ்வின் படத்தை தான் பெரிதாக போட வேண்டும் என கூறுகிறாரே... எவ்வளவு பெரிய மனதிருந்தால், அவர் இவ்வாறு கூறியிருப்பார் என்று நினைத்து, வியந்தேன்.
இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த, எம்.ஜி.ஆர்., அவராக எதையும் செய்வதில்லை என்றும், புரியாமல், அடுத்தவர் சொல்வதை கேட்டு அவர் செயல்படுகிறார் என்றும் ஒரு வதந்தி, அப்போது நிலவி வந்தது. ஆனால், நான் காட்டிய அட்டை படத்தை பார்த்து, அதிலிருந்த குறையை அவர் சுட்டிக் காட்டிய விதம், என்னை வியக்க வைத்தது.
உடல் நலமின்றி இருந்த நிலையிலும், அவர் மனநிலை, சிந்தனை ஆகியவை சிறப்பாக இருந்தன என்பதற்கு, இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம்.
எம்.ஜி.ஆர்., முதலமைச்சராக இருந்தபோது, நலிவுற்ற நெசவாளர்களுக்கு உதவ, நன்கொடைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் அலுவலகத்திற்கு, நன்கொடை கொடுக்க, பலர் வரிசையில் நின்றிருந்தனர். ஆனால், ஒரு நபர், தன் கைப்பட எழுதிய கடிதத்துடன், 150 ரூபாயை இணைத்து, எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார். கடிதத்தை பிரித்து படித்ததும், எம்.ஜி.ஆர்., கண்களில் ஆறாக கண்ணீர்.
கையில் காசில்லாத சமயத்தில், ரத்த தானம் செய்து, அதற்கு சன்மானமாக, மருத்துவமனையல் கொடுத்த, 150 ரூபாயை, 'நலிவுற்ற நெசவாளர்கள் நல திட்டத்திற்கு அன்புடன் ஏற்றுக்கொள்ளவும்...' என்று கடிதத்தில் எழுதியிருந்தது தான், அவரது கண்ணீருக்கு காரணம்.
இருக்கையை விட்டு எழுந்த, எம்.ஜி.ஆர்., நேராக, அந்த பணத்தை கொடுத்த நபரை இறுக கட்டித் தழுவி, பாராட்டி, தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். அந்த நபர், நீதியரசர் எம்.கற்பகவிநாயகம்.
நடுத்தெருநாராயணன்

