
குகன் எழுதிய, 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' எனும் நுாலிலிருந்து:திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில், காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...
'பாபுஜி... ஒரு காலத்தில் அகிம்சை சிறந்த ஆயுதம். அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால், இப்போது, எனக்கு அகிம்சையில் நம்பிக்கை இல்லை. அமைதியான போராட்டம் என்று சொல்லி, நாம் தான், நம் அமைதியை இழக்கிறோம்.
'இன்று, உலகமே யுத்தத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. இன்னும் நாம் அகிம்சையை பற்றி பேசிக் கொண்டிருப்பது, நமக்கு நன்மை தராது. நம்மை கோழை என்று தான் நினைப்பர்...' என்றார் நேதாஜி.
'இந்த கருத்துக்காக தானே, உன்னை கட்சியில் தடை செய்தோம். நீ, அதை மறந்து விட்டாயா...' என்றார், காந்திஜி.
'நான் மறக்கவில்லை. ஆனால், நடக்கும் உலக யுத்தம், வெள்ளையர்களை தோல்வியடையச் செய்யும் என்பதை, நீங்கள் உணரவில்லையா...' என்றார், நேதாஜி.
'எதிரி, இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது, அதை பயன் படுத்தி, நாம் பலனடைவது தவறு. உலக யுத்தம் முடியட்டும். பிறகு, நம் தேசத்துக்கு நல்லது நடக்கும்...' என்றார், காந்திஜி.
'முதல் உலக யுத்தம் நடக்கும்போது, இப்படித்தான் நம்பினோம். ஆனால், நடந்தது என்ன... ரவுலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, நம் ஒப்பந்தங்களை மதிக்காமல் இருப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன. இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால், வாழ்நாள் முழுவதும், வெள்ளையர்களுக்கு, இனி, நாம் அடிமையாக இருக்க வேண்டியது தான்...'
'அதற்காக தான், நாம் ஒத்துழையாமை போராட்டம் நடத்துகிறோம்...' என்றார், காந்திஜி.
'இன்னும் எவ்வளவு நாட்களுக்கு அமைதி போராட்டம். இதுவரை, நாம் அதில் என்ன பயன் அடைந்திருக்கிறோம்...'
'சரி... அகிம்சையை ஏற்காதபோது, இனி, உன்னுடன் விவாதிப்பதில் எந்த பலனுமில்லை. நம் இருவருடைய கொள்கைகளும் வெவ்வேறாக இருப்பதால், நாம் பிரிவது தான் சரியாக இருக்கும்...' என்றார், காந்திஜி.
'பாபுஜி... கொள்கை வேறாக இருக்கலாம். நம் இருவரின் லட்சியமும் ஒன்று தான். அது, இந்தியாவின் சுதந்திரம். என்னை ஒதுக்கி வைப்பதில் ஏன் தீவிரம் காட்டுகிறீர்கள் என்பது புரியவில்லை...' என்றார், நேதாஜி.
'என் அன்பு, சில சமயம், கரடு முரடாக தெரியலாம். என் கொள்கையை நீ ஏற்காமல் போனாலும், உன் மீது எனக்கு இருக்கும் அன்பு என்றும் மாறாது; நாம், தனித்தனியாக இருந்தால் கூட...' என்றார், காந்திஜி.
'பாபுஜி... ஒருவன், தனியாக இருந்தாலும், நேர்மையாக இருந்தால், அவன் முன்னேறும்போது, எதை கண்டும் அஞ்சத் தேவையில்லை என்று நீங்கள் தான் அடிக்கடி சொல்வீர்கள். அதன்படியே, நானும் நடந்து கொள்கிறேன்...'
'நான், உன் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை, உன் பாதையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தால், உன்னை பாராட்டும் முதல் மனிதனாக நான் இருப்பேன்...'
'அப்படியென்றால், நான் வெற்றி பெற, என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள், பாபுஜி...' என்றார், நேதாஜி.
காந்திஜியிடம் அமைதி. சில நிமிட காத்திருப்புக்கு பின், அந்த அறையை விட்டு வெளியேறினார், நேதாஜி.
க.பன்னீர்செல்வம் எழுதிய, 'இந்திய தேசிய சின்னங்கள்' என்ற நுாலிலிருந்து:இந்திய அரசியலமைப்பு குழு, ஜன., 24, 1950ல், 'ஜன கண மன' கீதத்தை, நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. டிச., 27, 1911ல், கோல்கட்டாவில் நடந்த, இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், முதல் முதலாக தேசிய கீதம் பாடப்பட்டது.
கடந்த, 1950ல் நடந்த அரசியலமைப்பு நிர்ணய சபை கூட்டத்தில், இப்பாடல், தேசிய கீதம் என்னும் அந்தஸ்துடன் முதன் முதலில் பாடப்பட்டது.
டிச., 27, 1911ல், முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம், டிச., 27, 2011ல், 100 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
தேசிய கீதத்தை பாடுவதற்கு, நேரக்கட்டுப்பாடு வரையறை செய்யப்பட்டுள்ளது. முழுமையாக, 52 வினாடிக்குள் பாடி முடிக்க வேண்டும். சுருக்கமாக, முதல் அடியும், இறுதி அடியும், 20 வினாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
இந்திய தேசிய ராணுவத்தில், தேசிய கீதம் இசைப்பதற்கான இசைக்குழு இருக்கிறது. சீருடை பணியாளர் அமைப்புகளில், தேசிய கீதம் இசைப்பதற்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நடுத்தெரு நாராயணன்

