
மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்' நுாலிலிருந்து: மும்பையில் உள்ள ஏரவாடா சிறையில், காந்திஜி இருந்தபோது, அவரை நேரில் பார்த்து பேசுவதற்காக, அன்னை கஸ்துாரிபாய் அங்கே வந்தார். கஸ்துாரிபாயை கண்டதும், அவரை, காந்திஜியிடம் பேச அனுமதித்து, அங்கிருந்து நகர்ந்து விட்டார், ஜெயில் வார்டன்.
சில நிமிடங்கள் சென்றதும், வார்டன் திரும்பி வந்து பார்த்தபோது, காந்திஜியும், கஸ்துாரிபாயும், அமைதியாக சிலை போல நின்றிருந்தனர்.
'காரணம் என்ன?' என, வார்டன் கேட்டபோது, இருவரும், 'இந்த சிறையின் விதிப்படி, வார்டன் முன்னிலையில் தான், கைதியோடு பேச வேண்டும். எனவே, நீங்கள் வருவதற்காக காத்திருந்தோம்...' என்றனர். அதன்பின், வார்டன் அருகிலேயே காந்திஜியும், கஸ்துாரிபாயும் பேசினர்.
சுயநலமின்மைக்கு மாபெரும் எடுத்துக் காட்டு தான் இச்சம்பவம். சட்ட விதிகளை சரியாக புரிந்து கொண்டவர்களால் தான், அதில் உள்ள குறைகளுக்காகவும் குரல் கொடுக்க முடியும்.
அருணா பப்ளிகேஷன், ஆர்.பிரசன்னா எழுதிய, 'சுவையான சம்பவங்கள் 100' நுாலிலிருந்து: காந்திஜி, மும்பையில் உள்ள ஏரவாடா சிறையில் இருந்தபோது, அவரை காண வந்த சிறை அதிகாரி, காலில் செருப்புடன், அவர் இருந்த அறைக்குள் வந்து, பேசி விட்டு சென்றார்.
சிறை அதிகாரி சென்றதும், அந்த அறையை தண்ணீரால் கழுவ ஆரம்பித்தார், காந்திஜி. அருகில் இருந்த நண்பர், காரணம் கேட்டார். 'அந்த அதிகாரி, தன் செருப்பை கழற்றாமல் உள்ளே வந்து விட்டார். அவர் செருப்பில் இருந்த அழுக்கு, அறையில் படித்து விட்டது. எனவே தான் அறையை கழுவுகிறேன்...' என்றார், காந்திஜி.
'பாபுஜி... அந்த அதிகாரி, உங்கள் அறைக்குள் நுழையும் முன்பே, செருப்பை வெளியில் கழற்றி வரும்படி சொல்லி இருக்கலாமே...' என்று கேட்டார், நண்பர்.
'ஆமாம்... கூறியிருக்கலாம். ஒருவேளை நான் அப்படி கூறியிருந்தால், அவரது மனம் புண்பட்டிருக்கலாம். எனவே தான் கூறவில்லை. அதற்கு பதிலாக, இந்த அறையை ஒரு தடவை கழுவி விடுவதற்கு, இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டேன்...' என்றார், காந்திஜி.
அவரது பெருந்தன்மையை கண்டு வியந்தார், நண்பர்.
ஒரு சமயம், காந்திஜியை சந்தித்த ஆங்கிலேயர் ஒருவர், அர்த்தமற்ற, கேலித்தனமான சில கவிதைகளை எழுதி, அவரிடம் கொடுத்து, 'இதை படித்து பாருங்கள்...' என்று சொல்லி சென்றார்.
அந்த கவிதைகளை படித்து பார்த்தார், காந்திஜி. அதில் பாராட்டத்தக்க எந்த விஷயமும் இல்லை என்பதை புரிந்து கொண்டார். உடனே, அந்த காகிதங்களில் இருந்த குண்டூசிகளை மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொண்டார், காந்திஜி.
மறுநாள் காலை, காந்திஜியை சந்தித்த அந்த ஆங்கிலேயர், 'நான் எழுதிய கவிதைகளை படித்தீர்களா... அதில், பயன்படக்கூடியவை இருந்தனவா...' என, ஆவலுடன் கேட்டார்.
புன்னகையுடன், 'ஓ... தங்கள் கவிதைகள் முழுவதையும் படித்தேன். அதில், பயன்படக்கூடிய அம்சங்கள் இருந்தன. பயன்படக்கூடிய அந்த அம்சங்களை எல்லாம் எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறேன்...' என்று கூறியவாறே, தான் எடுத்து வைத்திருந்த குண்டூசிகளை காட்டினார், காந்திஜி.
உடனே, அந்த ஆங்கிலேயர், தலை கவிழ்ந்தார்.
நடுத்தெரு நாராயணன்