
மதுரை காமராஜர் பல்கலைக் கழக மாணவர் ஒருவர், எம்.பில்., பட்ட ஆய்வுக்கு, குடுகுடுப்பைக்காரர்கள் பற்றி, அளித்த ஆய்வறிக்கையில்:
கோரைப் பாயில் படுத்து உறங்குவது கிடையாது
* தங்கள் ஜாதியினருக்கு, ஜாதகம் எழுதி தருவது கிடையாது. ஆனால், பிற ஜாதியினருக்கு எழுதி தருகின்றனர்
*தங்கள் இனத்தில் இறந்தவர்களை புதைக்கும் போது, அவர்களின் உள்ளங்கையை கத்தியால் கீறிய பின், புதைக்கின்றனர்
* கரும் பாசிமணிகள் கோர்த்த மணிமாலையை, தாலியாக அணிகின்றனர்
* திருமணம் முடிந்த மறுநாள் நடக்கும் விருந்துக்கான ஆட்டுக் கிடாயை, மாப்பிள்ளை தான் அறுக்க வேண்டும்.
— இப்படி இன்னும் பல விசித்திர பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர், குடுகுடுப்பைக்காரர்கள்.
சதாசிவம் எழுதிய, 'கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை' நுாலிலிருந்து: கணேச பிள்ளை என்பவர், சரித்திர கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஆர்வம் உடையவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பக்கத்து வீட்டுக்காரருக்கு, உறவினர், கணேச பிள்ளை. சற்று கமுக்கமான பேர்வழி; யாரிடமும் மனம் விட்டு வெளிப்படையாக பேச மாட்டார்.
ஒருநாள், கையில் ஒரு பெரிய காகித கட்டுடன் வந்தார், கணேச பிள்ளை. அவரிடம், 'தாள் கட்டெல்லாம் இருக்கிறதே... என்ன விஷயம்...' என்று கேட்டார், கவிமணி. சரியான பதில் கூறாமல், ஏதோ சொல்லி சமாளித்தார், கணேச பிள்ளை.
கணேச பிள்ளையின் மைத்துனரிடம், அந்த கட்டுக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து வரச்சொன்னார், கவிமணி. அவன், அந்த தாள் கட்டையே எடுத்து வந்து விட்டான்.
அதில், சுங்கான் கடை என்னும் இடத்துக்கு பக்கத்தில் தொன்மையான கோட்டை ஒன்று இருப்பதும், அதற்கான வரலாற்று ஆதாரங்களும் என, தெரிய வந்தது. அதை பற்றி சில குறிப்புகள் எடுத்து, காகித கட்டை திருப்பி கொடுத்து விட்டார், கவிமணி.
ஒரு வாரம் தங்கி, திருவனந்தபுரம் போய் சேர்ந்தார், கணேச பிள்ளை. ஆனால், அவர் போய் சேரும் முன்பே, 'திருவனந்தபுரம் டைம்ஸ்' எனும் ஆங்கில வார இதழில், ஆராய்ச்சி கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதை பார்த்ததும், திடுக்கிட்டு போனார், கணேச பிள்ளை.
தாம் பல நாள் முயன்று செய்த ஆராய்ச்சி, அப்படியே தக்க சான்றுகளுடன் கட்டுரையாக வெளிவந்திருக்கிறதே... என்ன ஆச்சரியம்! இதை எழுதிய, 'நாஞ்சில் நாடன்' என்பவர் யார் என்று, கடைசி வரை திகைப்பு தான்.
கவிமணியின் இளைமை குறும்புகளுள் இதுவும் ஒன்று.
வெ.சாமிநாத சர்மா எழுதிய, 'நான் கண்ட நால்வர்' நுாலிலிருந்து: திருநெல்வேலியில் கலெக்டர், 'ஆஷ்' கொலை செய்யப்பட்ட பின், அதில், வ.வே.சு., ஐயர் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதி, போலீஸ் தொந்தரவு அதிகரித்தது. போலீஸ் கண்காணிப்பிலிருந்து தப்ப, எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ, கெய்ரோவிலிருந்து பம்பாய், பம்பாயிலிருந்து, இலங்கை - கொழும்பு, கொழும்பிலிருந்து கடலுாருக்கு கப்பலிலேயே வந்தார், வ.வே.சு., ஐயர்.
கடலுாரில் கப்பலை விட்டு இறங்கி, புதுச்சேரிக்கு நடந்தே வந்து, பாரதியார் மற்றும் அரவிந்தருடன் சேர்ந்து கொண்டார், வ.வே.சு., ஐயர்.
ஒருநாள் இரவு, 8:00 மணியளவில், சாப்பிட்டுக் கொண்டிருந்தார், ஐயர். தெரு கதவு, உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது, அவரது குழந்தை சுபத்ரா, தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்தாள். போலீசாரால் ஏவப்பட்ட சிலர், வீட்டை சூழ்ந்து, 'ஐயரே... வெளியில் வா... உன்னை வெட்டி போடுகிறோம்...' என்று அட்டகாசம் செய்ய ஆரம்பித்தனர்.
ஏதேனும் ஆபத்து நேரிடக் கூடும் என்று உணர்ந்த, ஐயர், குழந்தையை துாக்கி, மனைவியையும் அழைத்து, கொல்லைப்புற மதில் சுவர் ஏறி குதித்தார். பக்கத்து வீட்டு மாடி வழியாக நான்கு வீடு தள்ளியிருந்த தன் நண்பரின் வீட்டில் பாதுகாப்பாக அவர்களை விட்டு திரும்பி, தன் வீட்டின் கூடத்து முன் பகுதிக்கு வந்து நின்றார்.
'என்னடா சொல்கிறீர்கள்... இப்போதே ஓடிப் போகிறீர்களா இல்லையா...' என சொல்லியபடி, கையில் இருந்த துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி சுட்டார். அவ்வளவு தான்... நொடியில் அந்த கும்பல், ஓடி மறைந்தது.
நடுத்தெரு நாராயணன்