
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 26 வயது பெண். பி.எஸ்சி., படித்து, நர்சிங்கும் முடித்துள்ளேன். எனக்கு ஒரு அக்கா, அவளுக்கு திருமணமாகி விட்டது.
என் தந்தை, அரசு பணியில் உள்ளார்; தாய், இல்லத்தரசி. கல்லுாரியில் அறிமுகமான ஒரு இளைஞனை காதலித்தேன். வீட்டுக்கு ஒரே மகன். என் வயது தான் அவனுக்கும். எங்கள் ஜாதியை சேர்ந்தவனல்ல.
இரண்டு ஆண்டுக்கு முன், வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த போதே, என் காதலை பெற்றோரிடம் தெரிவித்தேன். அதிலிருந்து ஆரம்பித்தது தொல்லை. சொந்த வீடே அந்நியமானது; இங்கேயே நரகத்தை பார்த்து வருகிறேன்.
வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். அரும்பாடுபட்டு தடுத்து நிறுத்தினேன். அதனால், பெற்றோருக்கு, என் மீது தீராத கோபம். அதிலிருந்து, யாரும் என்னுடன் பேசுவதில்லை. எனக்கு வேலை கிடைத்தும், போக விடவில்லை.
அனைத்து ஆண்களுடன் ஒப்பிட்டு, தரக்குறைவாக பேசி, நாரசமாக திட்டுகின்றனர். 'எத்தனை முறை அபார்ஷன் செய்தாய்...' எனக் கேட்டு, நோகடிக்கின்றனர்.
இந்த கொடுமை தாங்க முடியாமல், காதலித்தவனும் வேண்டாம், வேறு ஒருவனுடன் திருமணமும் வேண்டாம் என்று முடிவெடுத்த என்னை, கடந்த ஆறு மாதங்களாக, வீட்டு சிறையில் வைத்துள்ளனர். என்னை பார்க்கும்போதெல்லாம் கெட்ட வார்த்தைகளை கூறி, வேதனைப் படுத்துகின்றனர், என் பெற்றோர்.
இதை எதிர்த்து, உண்ணாமல் இருந்தேன். அக்கா தான், என்னை சமாதானப்படுத்தி, சாப்பிட வைத்தாள்.
'உனக்கு நல்ல சாவே வராது. உன் உடலை, நாய், நரி தான் சாப்பிடும்...' என்று, சாபம் வேறு கொடுக்கின்றனர், பெற்றோர்.
'நான் காதலித்தவன், எனக்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்க தயார்...' என்கிறான். மொபைல் போனையும் பிடுங்கி வைத்து விட்டனர், அவனுடன் பேசவும் முடியவில்லை.
வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை; அதேசமயம், சொந்த வீட்டில் நடைபிணமாக இருக்கவும் முடியவில்லை.
எனக்கு விடிவு காலம் உள்ளதா, நல்ல வழி காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
பல பெற்றோர், காதல் திருமணம் செய்திருந்தாலும், தங்கள் விருப்பத்துக்கு, ரசனைக்கு, ஜாதிக்கு, பணத்துக்கு பொருத்தமான வரனை தான், மகன் - மகளுக்கு பார்ப்பர்.
காதல் என்பது, தடை செய்யப்பட்ட கெட்ட வார்த்தை அல்ல. 100 காதல்களை தணிக்கை செய்தால், குறைந்தபட்சம், 10 காதல்களாவது முழுமையானதாக, கண்ணியமானதாக கிடைக்கும்.
மகனோ - மகளோ காதலித்தால், நிர்தாட்சண்யமாக அவர்களின் காதலை மறுக்காமல், காதல் எத்தகையது என, ஆற அமர நிதானமாக ஆராய வேண்டும். உடல் இச்சைகளை மீறிய, மனப்பொருத்தம் கூடிய கண்ணிய காதல் என்றால், முழு மனதுடன் அங்கீகரிக்க வேண்டும்.
தவறான காதல் என்றால், சொல்லித் திருத்த வேண்டும். பிடிவாதம் பிடித்தால், 'விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு...' என்ற நிபந்தனையுடன், அவர்கள் வழியில் போக அனுமதிக்க வேண்டும். பணிக்கும் அனுப்பாமல், வீட்டுச் சிறை வைப்பது, காட்டுமிராண்டித்தனம்.
மகளே... உன், இளங்கலை செவிலியர் நர்சிங் படிப்புக்கான சான்றிதழ்களை பத்திரப்படுத்திக் கொள். பட்டப் படிப்பை, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து விட்டாயா... காதலில் ஏதாவது, 'நெகட்டீவ்' அம்சங்கள் உள்ளனவா என அலசி, ஆராய்ந்து, தெளிவு பெறு.
இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, நீங்கள் இருவரும் திருமணம் செய்து, சிறப்பான வாழ்க்கை வாழ முடியுமா என்பதை, நன்கு யோசி.
தங்கள் விருப்பத்துக்கு எதிராக, காதலில் மகள் ஈடுபட்டு, வீட்டுக்குள் சத்யாகிரகம் செய்கிறாளே என்கிற ஆவேசத்தில், உன் பெற்றோர், கேவலமான வார்த்தைகளில் உன்னை துாஷிக்கின்றனர். ஊமையாக இருந்து, சதி திட்டத்தில் இறங்காமல், வெளிப்படையாக திட்டி தீர்க்கின்றனரே என, சந்தோஷப்படு.
அடுத்தடுத்து நீ செய்ய வேண்டியது என்னவென்றால்...
பெற்றோர் நல்ல மூடில் இருக்கும்போது, 'நான், காதலித்தவரை தான் மணந்து கொள்வேன் என்பதில், பிடிவாதமாய் இருக்கிறேன். 100 ஆண்டு, வீட்டு சிறையில் வைத்தாலும், என் முடிவில் ஒரு மாற்றமும் வராது. தற்கொலை செய்து கொள்ள மாட்டேன், ஊரை விட்டு ஓடிப்போய் மணம் செய்து கொள்ள மாட்டேன்.
'காதல் திருமணத்தின், சாதக பாதகங்களுக்கு, நான் முழு பொறுப்பேற்கிறேன். 18 வயதை தாண்டிய, 'மேஜர்' பெண். என்னை நீங்கள் வீட்டு சிறையில் வைத்திருப்பது, சட்டப்படி குற்றம்...' என, நிதானமாக கூறு.
பெற்றோரின் பிடிவாதம் தொடர்ந்தால், வீட்டிற்கு வரும் யார் மூலமாவது, காதலனுக்கு செய்தி அனுப்பு.
'26 வயதான என் காதலியை, அவள் பெற்றோர், சட்டவிரோதமாய் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர்; அவளை விடுவியுங்கள். காவல் நிலையத்திலேயே, எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்...' என, மனு கொடுக்க சொல்.
உன்னையும், பெற்றோரையும், காவல் நிலையம் வரவழைத்து விசாரிப்பர். உன் பெற்றோருக்கு, தகுந்த அறிவுரை கூறி, உனக்கும், காதலனுக்கும் திருமணம் செய்து வைப்பர்.
காவல் நிலையத்தில், உங்களுக்கு, நீதி கிடைக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தில், 'ஹேபியஸ் கார்பஸ்' எனப்படும், ஆட்கொணர்வு மனுவை, காதலன், தாக்கல் செய்யட்டும். காவல் துறையினர், நீதியரசர் முன் அழைத்து போய் உங்களை நிறுத்துவர்.
உன் தரப்பு நியாயங்களை, நீதியரசர் முன் வைத்து, விமோசனம் பெறலாம். திருமண பதிவு அலுவலகத்தில், பதிவு திருமணம் செய்து கொள். செவிலியர் நங்கையர், மருத்துவருக்கு சமமானவர்கள். எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும். வேலையில் சேர், உன் காதலனும் வேலைக்கு போகட்டும்.
காதலின் வெற்றி, மண வாழ்க்கையை, வெற்றிகரமாக நடத்தி காட்டுவதில் தான் உள்ளது.
திருமண வாழ்க்கையை, சீராக, கண்ணியமாக, எளிமையாக, ஒற்றுமையாக நடத்துங்கள். வாழ்த்துக்கள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.