
திரைப்பட இயக்குனர், அழகேசன் எழுதிய, 'தோற்றுப் போனவனின் கதை!' எனும் நுாலிலிருந்து: தாய் சொல்லை தட்டாதே படத்திற்கான பூஜை நடத்தி, படப்பிடிப்பு துவங்கிய நாள். வாகினி ஸ்டுடியோவுக்கு காரில் வந்து இறங்கினார், எம்.ஜி.ஆர்.,
தொழிலாளர்கள் அனைவரும், நான்காவது மாடியில் வரிசையாக நின்று, 'வணக்கம் அண்ணே... வணக்கம் அண்ணே...' என, எம்.ஜி.ஆருக்கு, வணக்கம் தெரிவித்தனர்.
படப்பிடிப்பு தள வாசல் அருகே, எம்.ஜி.ஆர்., வந்தபோது, உதவி இயக்குனரான நான் மட்டும், 'வணக்கம் அய்யா...' என்றேன்.
தலை நிமிர்ந்து, ஒரு வினாடி என்னை பார்த்து, உள்ளே சென்று விட்டார்.
'ஷூட்டிங்' முடிந்து, மாலை, எல்லாரும் புறப்பட்ட போது, 'மேக் - அப்' அறையில் இருந்த, எம்.ஜி.ஆர்., என்னை அழைத்தார்.
திகைத்த நான், அங்கு சென்றேன். அப்போது, அறையில் இருந்த சபாபதியை வெளியே அனுப்பி, என்னுடன் பேச ஆரம்பித்த, எம்.ஜி.ஆர்., 'தம்பிக்கு, எந்த ஊரு...' என்றார்.
'காரைக்குடி...' என்றேன்.
'நாடக கம்பெனியில், நடிகனா இருந்தீங்களா...'
'ஆமாம் அய்யா...'
'நீங்க செட்டி நாட்டுலே பொறந்தவரு... உங்க ஊருலே எல்லாம் தாத்தாவைத்தானே அய்யான்னு கூப்பிடுவாங்க...' என்றார், எம்.ஜி.ஆர்.,
'ஆமாம்... அய்யா...' எனக் கூறி, சங்கோஜத்தில் திணறினேன்.
உடனே, எம்.ஜி.ஆர்., என்னை நெருங்கி, தோளில் கை போட்டு, 'இப்ப நான் உங்களை தம்பின்னு கூப்பிடுவேன்... என்னை, நீங்க என்னன்னு கூப்பிடுவீங்க...' என, கேட்க... 'அண்ணே... என்று தான் கூப்பிடுவேன்...' என்றேன்.
உடனே, என்னை தட்டிக்கொடுத்த, எம்.ஜி.ஆர்., 'இனிமே, நான் அண்ணே... நீங்க தம்பி... இதையே தொடர்ந்து வச்சுக்குங்க... சந்தோஷமா இருங்க... நான் கூப்பிட்டு அனுப்பியதுக்காக பயப்படாதீங்க...
நாளை சந்திப்போம்...' எனக் கூறி புறப்பட்டார்.
'கல்வி உலகம்' பதிப்பகம், த.வ.சிவசுப்பிரமணியன் எழுதிய, 'சிந்தனை சிறகுகள்' எனும் நுாலிலிருந்து: தேர்வில் தோற்ற மகள், மறு மதிப்பீடு செய்ய தந்தையிடம் கேட்டாள்.
'அவசியமில்லை. மீண்டும் படித்து, தேர்வு எழுது...' என கூறி விட்டார், தந்தை.
'மறு மதிப்பீட்டில், என் மகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால், அதிகாரத்தில் உள்ள நான், அதை தவறாக பயன்படுத்தி, கூடுதல் மதிப்பெண் பெற்று விட்டதாக நினைப்பர்...' என, விளக்கம் கூறினார், அந்த அரசியல்வாதி.
அவர் யார் என்கிறீர்களா... முன்னாள் பிரதமர், மொரார்ஜி தேசாய் தான்!
'போர்டு' கார் நிறுவனர், ஹென்றி போர்டு, லண்டன் சென்றிருந்தபோது, ஒரு சாதாரண அறையில் தங்கினார். இதை கண்டு திகைத்த ஓட்டல் மேனேஜர், 'இன்னும் கொஞ்சம் ஆடம்பர அறையில் தங்கியிருக்கலாமே...' என்றார்.
'எனக்கு தேவையான எல்லா வசதிகளும் இந்த அறையிலேயே கிடைக்கும்போது, எனக்கு எதற்கு அதிக செலவான, ஆடம்பர அறை...' என்றார், ஹென்றி போர்டு.
உடனே அந்த மேனேஜர், 'கடந்த மாதம், உங்கள் மகன் வந்தபோது, ஆடம்பர அறையில் தான் தங்கினார்...' என்றார்.
'அவன், கோடீஸ்வரரின் மகன். நான் ஒரு நடுத்தர குடும்பத்து மகன்...' என, ஹென்றி போர்டு கூற...
'கப்சிப்' ஆனார், ஓட்டல் மேனேஜர்.
நடுத்தெருநாராயணன்