தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை

திண்ணை

திண்ணை


PUBLISHED ON : மார் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்!' எனும் நுாலிலிருந்து: 'ஒன்பது குதிரைகள் பூட்டிய வண்டியில், இந்திய மன்னர்கள் பயணம் செய்யக் கூடாது. அப்படி மீறி பயணம் செய்தால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்...' -இது, அந்நாளைய, ஆங்கிலேயர் சட்டம்.

அந்த சட்டத்தை முதலில் எதிர்த்தவர், குவாலியர் மன்னர். அவர், கைதாகி, குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டார். அவருக்காக வாதாட, முன் வந்தார், வழக்கறிஞரான, மோதிலால் நேரு.

'யுவர் ஆனர்... குவாலியர் மன்னர் பயணம் செய்தது, எட்டு குதிரைகளில் தான்; ஒன்பதில் அல்ல...' என்று கூறவும், நீதிபதி உள்ளிட்ட அனைவரும் வியப்படைந்தனர்.

அவர் பயணம் செய்த வண்டியை எடுத்து வந்து நிறுத்த உத்தரவிட்டு, நேரில் சென்று குதிரைகளை எண்ணி பார்த்தார், நீதிபதி. ஒன்பது குதிரைகள் நின்றிருந்தன.

'மிஸ்டர் மோதிலால், ஒன்பது குதிரைகள் இருக்கின்றனவே... பொய் சொல்கிறீர்களே...' என்றார், நீதிபதி.

'குதிரைகள், எண்ணிக்கையில் வேண்டுமானால், ஒன்பதாக இருக்கலாம். அதை மறுக்கவில்லை. ஆனாலும், ஒன்பது குதிரைகளில், எட்டு குதிரைகள் மட்டும் ஆண் குதிரைகள், ஒன்று பெண் குதிரை. பெண் குதிரையை கணக்கில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது, சட்டப் பிரிவில் உள்ள விதி என்பதை, கனம் நீதிபதிக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...' என்றார்.

மோதிலால் நேருவின் சாமர்த்தியமான விவாதத்தால், குவாலியர் மன்னர் விடுதலையானார்; துாக்கு மேடையிலிருந்து மீட்கப்பட்டார்.

மதுரை, தமுக்கம் திடலில், 1962ல் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பொன் முத்துராமலிங்க தேவர், கடைசியாக பேசியது: ஓட்டு போடுகிற வகையில், மக்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள், அது மகாபாவம். ஒரு கிராமத்தில் முளைப்பாரி என்றால், இரண்டு ரூபாய் எடுத்து போய் பார்க்கிறீர்கள்.

ஜல்லிக்கட்டு என்றால், நான்கு ரூபாய் எடுத்து சென்று வேடிக்கை பார்த்து வருகிறீர்கள். சினிமாவுக்கு, ஐந்து ரூபாய் செலவிட்டு, பார்த்து வருகிறீர்கள்.

ஆனால், தேர்தலில் ஓட்டு போடுவதற்கு மட்டும், யாராவது பணம் தருவரா என்று எதிர்பார்க்கலாமா... உங்கள் தலைவிதியை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமையல்லவா, ஓட்டு போடுவது!

காசுக்காக காத்திராமல், நம் சொந்த தேசிய திருவிழாவுக்கு என்று நினைத்து, அவரவர் வசதி, துாரத்திற்கு தக்கவாறு, சொந்த பணத்திலிருந்து, இரண்டோ, மூன்றோ எடுத்து போய் செலவிட்டு, ஓட்டு போடுங்கள்... அது தான், நல்ல மக்களுக்கு அடையாளம்!

டாக்டர்.மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்' எனும் நுாலிலிருந்து: உலகின் பல்வேறு நாடுகளையும் வெற்றி கண்டவர், அலெக்சாண்டர். உலகம் முழுவதையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வர விரும்பிய, அவர், தான் வென்ற பகுதிகளை, நண்பர்களிடம் பிரித்து கொடுத்து, ஆள சொல்லி, புறப்பட்டார்.

அப்போது, அவரது நண்பன், பெர்டிகர்ஸ், 'உன் சொத்துக்களையும், வெற்றி பெற்ற நாட்டையும் இப்படி கொடுத்து விட்டால், உனக்கு என்ன தான் மிஞ்சும்...' என்று கேட்டான்.

அதற்கு, 'நம்பிக்கை...' என்று பதில் சொன்னார், அலெக்சாண்டர். அதாவது, தன் மீதும், உழைப்பின் மீதுள்ள நம்பிக்கையும், நிச்சயம் தன்னை காப்பாற்றும் என்பதே, அவரது ஆழமான எண்ணமாக இருந்தது.

வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளவரை, சாதிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்று உணர்ந்தவர், அலெக்சாண்டர். உலகம் வெல்வதற்கே என்று சிந்தித்து, அதில், பெரும் வெற்றியும் பெற்றதால் தான் அவர், மகா அலெக்சாண்டர் என்று போற்றப்பட்டார்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us