தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது, 26; படிப்பு, பி.ஏ., கணவர் வயது, 30; விடுதி வார்டனாக பணிபுரிகிறார். நான், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். எங்களுடையது, காதல் திருமணம். என் மீது அன்பை பொழிவார், கணவர்.

இருவரது பெற்றோருமே எங்களுடன் பேசுவதில்லை.

நான், காலையில் வேலைக்கு சென்று மாலையில் திரும்புவேன். கணவருக்கு, இரவு நேர பணி. அவர், எல்லா நாளுமே வேலைக்கு செல்ல வேண்டும்; விடுமுறை கிடையாது. எனவே, இருவருமே தனிமையை உணர்ந்தோம்.

என் வேலையை விடும்படி, கணவர் கூறினார். ஆனால், நான் மறுத்து விட்டேன். எங்களை ஒதுக்கி வைத்தவர்கள் முன் தலைநிமிர்ந்து நடக்க, கொஞ்ச நாள் வேலைக்கு சென்றால் தான், ஓரளவுக்கு வசதியாக இருக்க முடியும் என்று கூறினால், ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இதனால், என்னுடன் பேசுவதை தவிர்க்கிறார்.

ஒரே வீட்டில் இரு துருவங்களாக, அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எந்தவித நிம்மதியோ, சந்தோஷமோ இல்லை.

மன இறுக்கத்திலிருந்து விடுபட, எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

இருதரப்பு பெற்றோரின் எதிர்ப்புகளையும் மீறி நடந்த, ஜாதிய மறுப்பு திருமணம் என, யூகிக்கிறேன். இருவரின் பெற்றோரும், உங்களுடன் பேசாமல் இருப்பது பெரிய விஷயமல்ல; ஆள் வைத்து ஆணவ கொலை செய்ய முயற்சிக்காமல் இருப்பதே பெரிய விஷயம்.

ஜாதிய மறுப்பு திருமணம் செய்து கொள்வது வெற்றியல்ல. திருமணத்திற்கு பின், பூரணமான மண வாழ்க்கையை வாழ்ந்து காட்டி, காதல் திருமணம் செய்வோருக்கு முன்னுதாரணமாய் திகழ்வதே வெற்றியாகும்.

காதலிக்கும்போது, நீ வேலை பார்ப்பது, உன் காதலனின் கண்களை உறுத்தவில்லை; உன் காதலன், ஒரு விடுதி வார்டனாக இரவு பணி செய்வது, உன் கண்களை உறுத்தவில்லை. ஆனால், திருமணத்திற்கு பின் கணவர், உன் வேலையை விட சொல்கிறார். நீயோ, இரவு பணி செய்யும் விடுதி வார்டனை காதலித்து மணந்தோமே என, வருத்தப்படுகிறாய்.

இந்த கருத்து வேற்றுமை தான், உங்கள் காதல் திருமணத்தில் முளைத்திருக்கும் புற்றுநோய்; வளர விட்டால், பெரும் ஆபத்து.

இனி, நீங்கள் இருவரும் செய்ய வேண்டியவைகளை பட்டிலிடுகிறேன்...

* கணவர், தினமும் இரவு பணிக்கு போனால், நீ, வீட்டில் தனியாக இருப்பது பாதுகாப்பானது அல்ல. கல்லுாரியிலோ, ஒரு பல்கலை கழகத்திலோ தான், விடுதி வார்டனாக இருப்பார். நிர்வாகத்திடம் கேட்டு, கல்லுாரி குடியிருப்புக்கு மாறுங்கள்

* நீயும், கணவரும், கல்லுாரி நிர்வாகத்தை அணுகி, ஒரு வாரம் இரவு பணி, ஒரு வாரம் பகல் பணி என, மாற்றித்தர வேண்டுங்கள் அல்லது பகல் நேர எழுத்தர் பணிக்கு மாற்றித்தர இறைஞ்சுங்கள்

* உன் மாத வருமானத்தையும், கணவருடைய மாத வருமானத்தையும் கூட்டி, மாதந்திர செலவினங்களை கழியுங்கள். பட்ஜெட்டில் துண்டு விழுகிறதா... உபரியை சேமித்து வைத்தால், எதிர்காலத்தில் என்னென்ன செய்ய முடியும் என்பதை விளக்கு

* ஒரு மாதம், சம்பளமில்லா விடுப்பு போட்டு, அது, மாதந்திர பட்ஜெட்டில் என்னென்ன சிக்கல்களை உருவாக்குகிறது என்பதை, கணவருக்கு படம் பிடித்து காட்டு

* கருத்து வேற்றுமைகள் சிறிதாய் இருக்கும்போதே, பேசி களைந்து விடுங்கள். பூதாகரமாய் வளர விட்டால், உங்களது வீழ்ச்சியை எதிர்பார்த்திருப்போருக்கு பெரும் கொண்டாட்டமாகி விடும்

* எது வந்தாலும் போனாலும், தினசரி வாழ்வில், உங்களின் இதயங்களில் பூத்திருக்கும் காதல் செடியை கருகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

* 'ஈகோ' வேண்டாம். சமாதான கொடியை யார் வேண்டுமானாலும் உயர்த்தி பிடிக்க தயாராகுங்கள். அன்றன்றைய கருத்து மோதல்களை, அன்றே தீர்த்து விடுங்கள். ஒருவர் மீது ஒருவர் புகார் பட்டியல் வாசிக்காதீர்

* பணி இடத்தில், கணவருக்கு, பகல் பணியோ, எழுத்தர் பணியோ கிடைக்கா விட்டால், வேறொரு இடத்தில், பகல் பணிக்கு மாற பாருங்கள்

* கணவரின் கைபேசி எண்களை மாற்று, எந்த உறவுகளையும் நம்பி தொலைபேசியில் பேசாதே, வாழும் வாழ்க்கை, பிறர் கண்களை உறுத்தக் கூடாது

* பணத்தை மட்டும் வைத்து யாரும் தலைநிமிர்ந்து வாழ்ந்திட முடியாது. பேராசையில்லாத, கண்ணியமான, விட்டுக்கொடுத்து வாழும், ஒருவர் இருப்பை ஒருவர் மதிக்கிற ஒழுக்கமான தம்பதியர் மட்டுமே, இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதை உணர் மகளே!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us