
எழுத்தாளர் ரகுவர்மன் எழுதிய,'பிரபலமானவர்களின் நகைச்சுவைகள்' நுாலிலிருந்து: ஒரு பணக்காரர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், நாதஸ்வர சக்கரவர்த்தி, டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, அருமையாக கச்சேரி செய்தார். இருப்பினும், கச்சேரியை ஏற்பாடு செய்த பணக்காரர்,
சங்கீத ரசனை இல்லாதவர். டி.என்.ராஜரத்தினம் பிள்ளையிடம், சில சினிமா பாடல்களை வாசிக்க கேட்டார்.
பொறுமையை இழக்காமல், ஒத்து ஊதும் வித்வானிடம், 'ஏம்பா... கச்சேரிக்கு வரும்போது, சினிமா பாட்டு வாசிக்க தேவையான, சினிமா நாதஸ்வரத்தை எடுத்து வரலையா... இப்போ, ஐயா கேட்கிறாரே, நான் என்ன பதில் சொல்வது...' என்று, பொய்யாக கடிந்து கொண்டார், ராஜரத்தினம் பிள்ளை.
பிறகு, அந்த பணக்காரரிடம், 'மன்னித்து விடுங்கள், ஐயா... புது பையன் மறந்து விட்டான். அடுத்த முறை வரும்போது, மறக்காமல், சினிமா குழாயையும் எடுத்து வந்து, நீங்கள் கேட்டதை எல்லாம் வாசிக்கிறேன்...' என்றார், சிரிக்காமல்.
'அந்த பணக்காரரின் தவறை, நேரடியாக சுட்டிக் காட்டியிருந்தால், கதை கந்தலாகி இருக்கும். ஆகவே, எந்த விஷயத்தையும் மறைமுகமாக சுட்டிக் காட்டி, நிலைமையை சரி செய்ய வேண்டும்...' என்று, பிறகு, ஒத்து ஊதும் வித்வானிடம் விளக்கம் அளித்தார்.
டாக்டர் சிவசிதம்பரம் எழுதிய, 'சீர்காழி கோவிந்தராஜன்' நுாலிலிருந்து: உறவுக்கு கை கொடுப்போம் என்று, ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார், இயக்குனர், கே. எஸ். கோபால கிருஷ்ணன். திடீரென, உடல் நலம் குன்றினார்.
அவரை பார்க்க, சென்றார், சீர்காழி கோவிந்தராஜன்.
அச்சமயம், 'அபிராமி அந்தாதி' பாடி, இசைத்தட்டை வெளியிட்டிருந்தார், சீர்காழி.
குளிர் காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்த, கே.எஸ்.கோபால கிருஷ்ணன், சீர்காழியிடம், அதில் ஒரு பாட்டை பாடும்படி கேட்டார்; சீர்காழியும் பாடினார்.
பாட்டை கேட்டு மகிழ்ந்த, கே.எஸ்.ஜி., மீண்டும் மீண்டும் அந்த பாடலை பாடச் சொன்னார்; சீர்காழியும் அசராமல் பாடினார்.
ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது... கே.எஸ்.ஜி.,யின் காய்ச்சல் தணிந்து, குணம் அடைந்தார்.
காய்ச்சலை, பாட்டு குணப்படுத்தியதை அறிந்து, இருவரது கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
எழுத்தாளர் அறந்தை நாராயணன் எழுதிய, 'சினிமாவுக்கு போன இலக்கியவாதிகள்' என்ற கட்டுரையிலிருந்து: பிரபல எழுத்தாளர், ஜெயகாந்தனின் சிறுகதைகள், குறு நாவல்களும், பத்திரிகைகள் வாயிலாக, லட்சோப லட்சம் வாசகர்களை கவர்ந்தவை. இவரை பற்றி, கவிஞர் கண்ணதாசன் கூறியது...
'... வளைந்தும், குழைந்தும், நேரத்துக்கு தக்கபடி அனுசரித்து போகும் உலகத்தில், அவர், ஒரு நிமிர்ந்த தென்னை. தனக்கு சரியென்று படும் ஒரு விஷயத்தை, மற்றவர்களுக்கு தவறென்று படுமாயினும், பல்லாயிரம் மக்கள் அடங்கிய சபையில், தைரியமாக சொல்லக்கூடிய ஆற்றல் உடையவர், ஜெயகாந்தன்.
'அவரது நிலத்தில் தோன்றிய விளைச்சல்களுக்கு, அவரே விதை, அவரே நீர், அவரே உரம். 'பிடிவாதக்காரர்; எதையும் எடுத்தெறிந்து பேசுபவர்...' என்று, அவரைப் பற்றி கூறுவர். இந்த சுபாவம், புதுமைப்பித்தனிடம் கூட இருந்தது. ஜெயகாந்தனிடம் கொஞ்சம் அதிகம். அவ்வளவு தான்...
'ஆனால், முன்னொருவர் இல்லை, பின்னொருவர் இல்லை என்ற இடத்தை, ஜெயகாந்தன் பிடித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
நடுத்தெரு நாராயணன்