/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
படிக்க போகலாமா, 'பால்டிக்' நாடுகளுக்கு (2)
/
படிக்க போகலாமா, 'பால்டிக்' நாடுகளுக்கு (2)
PUBLISHED ON : அக் 13, 2019

எஸ்தோனியா, லிதுவேனியா, லாட்வியா போன்ற குட்டி குட்டி நாடுகளில், இன்ஜினியரிங் படிப்புகளை படித்தால், பிற ஐரோப்பிய நாடுகளில் வேலை பார்ப்பது சுலபம் என, தெரிய வந்தது. இதனால், தமிழகம் மட்டுமல்லாது, நம் நாட்டில் உள்ள பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், அங்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.
லாட்வியாவில், ரிகா தொழில்நுட்ப பல்கலை, லாட்வியா பல்கலை மற்றும் இஸ்மா பல்கலை ஆகியவற்றில், இந்திய மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். லிதுவேனியாவில், வில்லினஸ் கெட்மினாஸ் தொழில்நுட்ப பல்கலை, கவுனாஸ் தொழில்நுட்ப பல்கலை, கலைபேடா பல்கலை ஆகியவற்றில், இந்திய மாணவர்கள் அதிகம் உள்ளனர்.
ஒவ்வொரு கல்லுாரியிலும், குறைந்தது, 500 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், தமிழகத்தை சேர்ந்தவர்கள், 200 பேராவது இடம் பெற்றுள்ளனர்.
மெக்கானிகல், சிவில், கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பம், கட்டமைப்பு இன்ஜினியரிங் மற்றும் லாஜிஸ்டிக் சப்ளை அண்ட் மேனேஜ்மென்ட் என, அனைத்து வகையான இன்ஜினிரியங் மற்றும் 'பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்' படிப்புகளும் உள்ளன.
செலவு:
இன்ஜினியரிங் முதுநிலை படிப்புகளை, இந்த கல்லுாரிகளில், 5 லட்சம் ரூபாய்க்குள் படித்து முடித்து விடலாம். இளநிலை படிப்புகளுக்கு, ஆண்டுக்கு, குறைந்தது, 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்கின்றனர். இதுதவிர, விடுதி கட்டணமாக, மாதத்துக்கு, அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் செலவாகும்.
இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர விரும்பும் மாணவர்களிடம், சம்பந்தபட்ட கல்லுாரி மற்றும் பல்கலை நிர்வாகிகள், 'ஸ்கைப்' தொழில்நுட்ப வசதி மூலமாக, கேள்விகள் கேட்பர். மேலும், 'ஆன்லைன்' மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு, தேர்வு எழுத வேண்டியிருக்கும். இந்த இரண்டிலும் தேர்வு பெற்றால், கல்லுாரியில் இடம் கிடைத்து விடும்.
விசா நடைமுறை:
வெளிநாடுகளில் இருந்து படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு, கல்விக்கான விசா, இந்த நாடுகளில் வழங்கப்படுகிறது. முதலில், 90 நாட்களுக்கு மட்டும், இந்த விசா வழங்கப்படும். கல்லுாரியில் முதலாமாண்டு படிப்புக்கான கட்டணம் செலுத்தியதும், மாணவர்களுக்கு, ஒரு ஆண்டுக்கு, அங்கு வசிப்பதற்கான, 'ரெசிடென்ட் பெர்மிட் கார்டு' வழங்கப்படும்.
விசாவை, கார்டாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், கல்வி கட்டணம் செலுத்தி முடித்ததும், அதற்கான சான்றிதழை சமர்ப்பித்து, 'பெர்மிட் கார்டை' புதுப்பிக்கலாம்.
படிப்பை முடித்ததும், வேலை தேடுவதற்கான விசா, ஒன்பது மாதங்கள் அல்லது ஒரு ஆண்டுக்கு, மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த குறிப்பிட்ட காலத்துக்குள் வேலை கிடைத்து விட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அளித்த சம்பள சான்றிதழை சமர்ப்பித்து, விசாவை, 'பெர்மிட் கார்டாக' மாற்றிக் கொள்ளலாம். மாதத்துக்கு குறைந்தது, 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினால் மட்டுமே, இந்த கார்டு கிடைக்கும்.
அதேபோல், படிப்பை முடித்ததும், இந்த நாடுகளிலேயே பலர், தொழில்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்றவர்கள், தாங்கள் நடத்தும் தொழிலுக்கான அனுமதி சான்றிதழை சமர்ப்பித்து, கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மூன்று நாடுகளிலுமே, நமக்கு தனியாக துாதரக வசதி இல்லை. பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள துாதரகங்களின் உதவியை தான் சார்ந்திருக்க வேண்டும். எனவே, பாஸ்போர்ட் போன்ற விவகாரங்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அந்த சட்டச் சிக்கலில் இருந்து மீள்வது, சற்று கடினமான விஷயம்.
பகுதி நேர வேலை வாய்ப்பு:
கல்லுாரி, பல்கலைகளில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பகுதி நேரமாக பணியாற்றவும் அனுமதி அளிக்கப்படுகிறது. முதுநிலை பட்டம் படிக்கும் மாணவர்கள், வாரத்துக்கு, 40 மணி நேரமும், இளநிலை பட்டம் படிக்கும் மாணவர்கள், 20 மணி நேரமும், பகுதி நேரமாக பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.
நிரந்தர குடியுரிமை :
லாட்வியாவிலும், லிதுவேனியாவிலும், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முறையாக வருமான வரி செலுத்தியிருந்தால், நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து, அதற்கான சான்றிதழை பெற முடியும். ஆனால், இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள், மற்ற ஐரோப்பிய நாடுகளான, ஸ்வீடன், போலந்து, பின்லாந்துக்கு சென்று விடுகின்றனர்.
லாட்வியா மற்றும் லிதுவேனியாவில் இருந்து, பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது எளிது என்பதால், பெரும்பாலான மாணவர்கள், அதையே விரும்புகின்றனர்.
ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், நம் நாட்டுக்கு வந்தால், இங்கு தனியாக தேர்வெழுதி, அதில் தேர்வானால் மட்டுமே, மருத்துவ தொழிலில் ஈடுபட முடியும் என்ற விதி உள்ளது.
அதேபோல், ஐரோப்பிய நாடுகளில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் கட்டுப்பாடு உள்ளதா என விசாரித்தபோது, அப்படி எதுவும் இல்லை என்கின்றனர், நம் தமிழக மாணவர்கள். அங்கு இன்ஜினியரிங் படித்த பல மாணவர்கள், இந்தியாவில், பல தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதாக கூறுகின்றனர்.
உஷார்:
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் சுதந்திரமான கலாசாரம், இதமான பருவநிலை, நம் மாணவர்களுக்கு மிகவும் பிடித்து விடுகிறது. இதனால், படிப்பை முடித்ததும், அந்த நாடுகளிலேயே நிரந்தரமாக குடியேற பலரும் விரும்புகின்றனர்.
இந்த நாடுகளில், சில ஆபத்துகளும் உள்ளன. மது, புகை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில், பால்டிக்குக்கு முக்கிய இடம் உண்டு. அதேபோல், தற்கொலைகளும் இந்த நாடுகளில் அதிகம் நடப்பதாக, புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இன வேறுபாடு:
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருப்பதை போன்று, கறுப்பு - வெள்ளை இன வேறுபாடு, இங்கு இல்லை. இந்த நாடுகள், ஒரு காலத்தில், சோவியத் ரஷ்யாவின் அங்கங்களாக இருந்தவை. சோவியத் ரஷ்யாவை பூர்வீகமாக உடையவர்கள், கணிசமாக இங்கு வசிக்கின்றனர். அவர்களில் சிலர் மட்டும், இன வேறுபாடு காட்டுவதுண்டு.
பாதுகாப்பு :
இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு, இங்கு எந்த குறையும் இல்லை. மக்கள் தொகை மிகவும் குறைவு என்பதால், குற்றச் செயல்களும் அதிகம் நடப்பது இல்லை. லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளில் உள்ளவர்களின் தாய் மொழி வேறாக இருந்தாலும், பெரும்பாலானோர், ஆங்கிலம் பேசினால், எளிதில் புரிந்து கொள்கின்றனர்.
பழக்க வழக்கம்:
லாட்வியா மற்றும் லிதுவேனியா மக்கள், மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுடன், அன்புடன் பழகுகின்றனர். தேவையில்லாமல், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது இல்லை. ஆண்கள், அப்பாவிகளாகவும், பெண்கள், விபரமானவர்களாகவும் இருக்கின்றனர்.
பெரும்பாலான பெண்கள், ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் அக்கா போலவோ, தங்கை போலவோ தோற்றமளிக்கின்றனர்.
லிதுவேனியா தலைநகர், வில்லினசில் உள்ள கல்லுாரியில் இன்ஜினியரிங் படிக்கும் மதுலா ஜெயசந்திரன், சேலத்தை சேர்ந்தவர். எங்களை பார்த்ததும், 'நீங்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளீர்களா?' என, ஆங்கிலத்தில் கேட்டார். தமிழகத்திலிருந்து வந்திருப்பதை அறிந்ததும், அவரது முகத்தில், ஆயிரம் வாட்ஸ் வெளிச்சப்பூக்கள் பூத்தன.
அவர் கூறியதாவது: லிதுவேனியாவைச் சேர்ந்தவர்கள், நம்மிடம் எந்த பாகுபாடும் காட்டுவது இல்லை; அன்பாக பழகுகின்றனர். பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டையும், மக்களையும் எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது.
படிப்பை முடித்ததும், இங்கே குடியேறும் ஆசை உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் தமிழில், அதிக நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது, சந்தோஷமாக உள்ளது.
இவ்வாறு கூறிய மதுலா, கடைசியாக சில திருக்குறள்களையும் மனப்பாடமாக கூறி, தமிழ் மீது தனக்குள்ள பற்றை வெளிப்படுத்தினார்.
உதவும் கரங்கள்!
லாட்வியா நாட்டில், இந்தியாவுக்கென தனியாக துாதரகம் இல்லை. எனவே, அந்த நாட்டுக்கு அருகே, ஸ்வீடனில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் தான், இந்திய விவகாரங்களை கவனித்துக் கொள்கின்றனர். இங்கு, 'மெசெஞ்சர்' ஆக பணியாற்றும், மாலினி, சேலத்தை பூர்வீகமாக உடையவர்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாகவே, ஸ்வீடனில் தான் வசிக்கிறார். லாட்வியாவில் படிக்கும் தமிழக மாணவர்களின் பெயர்கள், அவர்களை பற்றிய விபரங்கள் எல்லாம், மாலினிக்கு அத்துபடி.
'பாஸ்போர்ட் உள்ளிட்ட என்ன பிரச்னை என்றாலும், எங்களுக்கு மாலினி அக்கா தான் உதவி செய்வாங்க...' என்கின்றனர், அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள்.
- முற்றும்
சி. சண்முகநாதன்