
தகுதியும், துாய்மையும் இருந்தால், நாம் அடையும் உயர்வை யாராலும் தடுக்க முடியாது; தெய்வம் கூடவே இருந்து வழிகாட்டும்.
அனந்தபூர் நாட்டு மன்னர், குந்திபோஜனிடம், விதர்ப்ப நாட்டை சேர்ந்த, ரகுவீரன் என்பவன், மெய்க்காப்பாளனாக இருந்தான். உடல் துாய்மை மட்டுமல்லாது, உள்ளத் துாய்மையும் நிறைந்தவன்.
ஒருநாள் நள்ளிரவு நேரத்தில், நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டு, திடுக்கிட்டு விழித்தார், மன்னர். நாய்களின் குரைப்புக்கு நடுவே, ஒரு பெண்ணின் அழுகை குரலும் கேட்டது.
உடனே, அறைவாசலில் இருந்த மெய்க்காப்பாளன் ரகுவீரனை கூப்பிட்டு, 'ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கிறதே... என்ன என்று பார்த்து வா...' என்றார்.
அரண்மனையில் இருந்து வெளியேறி, குரல் வந்த திசையை நோக்கி நடந்தான், ரகுவீரன். அவன் அறியாமல், பின் தொடர்ந்தார், மன்னர்.
காளி கோவிலில் இருந்து தான், அழுகுரல் கேட்டது.
கோவிலுக்குள் பெண் ஒருத்தி, தலைவிரி கோலமாக அமர்ந்து, அழுது கொண்டிருந்தாள்.
அவளை நெருங்கி, 'தாயே... இந்த நேரத்தில் தன்னந்தனியாக அழுது கொண்டிருக்கும் தாங்கள் யார்... ஏன் அழுகிறீர்...' எனக் கேட்டான், ரகுவீரன்.
'அப்பா, வீரனே... இந்நாட்டு மன்னன், குந்திபோஜனையும், அவன் நல்லாட்சியையும் காப்பாற்றும் காவல் தெய்வம், நான். இன்னும் ஓரிரு நாட்களில், குந்திபோஜன் இறக்கப் போகிறான். அதை நினைத்தே அழுகிறேன்...' என்றாள்.
திடுக்கிட்ட ரகுவீரன், 'அம்மா... அந்த ஆபத்திலிருந்து, மன்னரை காப்பாற்ற வழியேதும் இல்லையா?' என்றான்.
'எதற்கும் பயப்படாத வீரன் ஒருவனின் மகனை, இந்த காளிக்கு பலியிட்டால், ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவான், குந்திபோஜன்...' என்றாள்.
'நான், வீரன் என்பது உண்மையானால், என் மகனை பலி கொடுத்து, மன்னனை காப்பாற்றுவேன்...' என்று கூறி, கோவிலை விட்டு வெளியேறி, வீடு சென்றான்.
உறங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பி, நடந்த விபரத்தை தெரிவித்தான். மகனும் சம்மதிக்கவே அவனுடன், காளி கோவிலுக்கு திரும்பினான், ரகுவீரன்.
'தேவி... எங்கள் மன்னர் உயிரை காப்பாற்று...' என்று கூறியபடியே, மகனை பலி கொடுக்க, வாளை உருவினான். அதற்கு மேல், காளிக்கு இருப்பு கொள்ளவில்லை.
'ரகுவீரா... உன் துாய்மையான அன்பும், வீரமும் கண்டு மகிழ்கிறேன்; வேண்டிய வரங்களை கேள்...' என்றாள்.
'தேவி... எங்கள் மன்னருக்கு, நீண்ட ஆயுளையும், நிலைத்த புகழையும் தர வேண்டும்...' என வேண்டினான், ரகுவீரன்.
'அப்படியே ஆகும்...' என்ற கூறி மறைந்தாள், காளிதேவி.
தன் மகனுடன் கோவிலை விட்டு வெளியேறினான், ரகுவீரன்.
அவ்வளவு நேரமும் நடந்தவைகளை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த, மன்னர், அரண்மனை திரும்பியதும், ரகுவீரனை, தலைமை சேனாதிபதியாக ஆக்கினார்.
மனத்துாய்மையும், அதற்கு தகுந்த செயல்பாடுகளும் இருந்தால், வாழ்வில் உயர, தெய்வம் துணை செய்யும் -என்பதை விவரிக்கும் கதை இது.
பி. என். பரசுராமன்