
'பெரியோர் வாழ்வில் சுவையான தகவல்கள்' என்ற நுாலிலிருந்து: லோகமானிய பாலகங்காதர திலகர், தன், தலை தீபாவளி சீதனமாக, மாமனாரிடம் ஆடை, அணிகலன்களோ, ஆடம்பர பொருட்களோ கேட்கவில்லை. 'ஐந்து புத்தகங்கள் மட்டுமே, தலை தீபாவளி சீதனமாக போதும்...' என்று, கேட்டு வாங்கிக் கொண்டார்.
100 சுவையான தகவல்கள் நுாலிலிருந்து: இந்தியாவில், பிரிட்டிஷாரின் ஆதிக்கம் இருந்த காலத்தில், மாத சம்பள முறையை அமல்படுத்தினர். நான்கு வாரங்களுக்கு, ஒரு சம்பளம் என கணக்கிட்டு, அதை ஒரு மாத சம்பளமாக கொடுத்தனர். 12 x 4 = 48 வாரங்கள். ஒரு ஆண்டுக்கு, 52 வாரங்கள் வரும். ஆனால், நான்கு வாரத்திற்கு, ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால், ஆண்டுக்கு, 13 சம்பளம் வர வேண்டும்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, ஒரு தொழிற்சங்க ஊழியர்கள், தங்களது ஒரு மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாகவும், அதை தரும்படி, 1930- - 1940களில் போராடினர்.
ஒரு மாத சம்பளத்தை, எப்போது, எப்படி கொடுக்கலாம் என, தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தனர், பிரிட்டிஷார். அப்போது, தீபாவளி மற்றும் தசரா பண்டிகை பிரசித்தி பெற்றது என்பதால், அதையொட்டி கொடுத்தால், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வசதியாக இருக்கும் என, கோரிக்கை வைத்தனர். விளைவு, முதன் முதலில், ஜூன் 30, 1940ல், 'போனஸ்' என்ற பெயரில், ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டது.
பின் நாட்களில், அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது. ஆக, போனஸ் என்பது, விடுபட்ட, கொடுக்கப்படாத, நமக்கு சேர வேண்டிய ஒரு மாத சம்பளம். இப்படித்தான், 'போனஸ்' கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது.
தமிழ் இதழ்களின் தோற்றமும், வளர்ச்சியும் நுாலிலிருந்து: தீபாவளி என்றதுமே புதுத் துணி, பட்டாசு, விதவிதமான இனிப்பு - கார வகைகள், புது திரைப்படங்கள் ஆகியவை நினைவுக்கு வரும்.
இதெல்லாவற்றையும் தாண்டி, மறக்க முடியாத இன்னொரு விஷயம், வார - மாத இதழ்கள் வெளியிடும், பிரமாண்ட தீபாவளி மலர்கள் தான்.
தீபாவளி மலர் இதழ்களுக்காக, மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. 60 வயதானவர்களை கேட்டுப் பார்த்தால், தீபாவளி என்றதுமே, தீபாவளி மலர் இதழ்களை தான் நினைவு கூர்வர். அந்த இதழ்களை வாங்கி, ஆண்டு முழுவதும் நிதானமாக ரசித்து படிப்பர்; சேகரித்தும் வைப்பர்.
அனைத்து வாசகர்களுக்கும் ஏற்ற வகையில், ஏராளமான விஷயங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதே, இதன் சிறப்பு.
தமிழில், தீபாவளி மலர் வெளியிட்டு பிரபலமாக்கியது, ஆனந்த விகடன் தான். அதன்பின், கல்கி, கலைமகள் மற்றும் அமுதசுரபி என்று துவங்கி, இன்று, பல இதழ்களும், தீபாவளிக்கென்று ஸ்பெஷல் புத்தகங்களை வெளியிட்டு வருகின்றன.
கேரளாவில், ஓணம் பண்டிகையின் போது, மலையாள இதழ்கள், சிறப்பிதழ்களை தனியாக வெளியிடுகின்றன. உதாரணமாக, வனிதா, தனம், மாத்ருபூமி மற்றும் கவுமதி ஆகியவை பெரிய அளவில் வெளியிட்டு, அசத்துகின்றன.
மேற்கு வங்கத்தில், துர்கா பூஜா நடைபெறும் சமயத்தில், கூடுதல் பக்கங்களுடன் சிறப்பு இதழ்களாக வெளியிட்டு வருகின்றன. ஆனந்த பஜார் பத்திரிகை நிறுவனத்திற்கு, நான்கு இதழ்கள் உள்ளன. இவை நான்கும், 50 ஆண்டுகளுக்கு மேலாக, துர்கா பூஜா ஸ்பெஷல் பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.
கடந்த, 1979ல், பூஜா ஸ்பெஷல் இதழ் விற்பனை, மூன்று லட்சத்திற்கும் அதிகம். அப்போது, இவை, 12 ரூபாய் முதல், 20 ரூபாய் வரை விற்றன. இன்று, 100 ரூபாய்க்கு மேல் என்றாலும், நான்கிலும், துர்கா பூஜை ஸ்பெஷல் இதழ்களின் விற்பனை அமோகமாக உள்ளது. இவற்றிலும், தமிழகம் போன்றே அனைத்து அம்சங்களும் உண்டு. கூடுதலாக, டிராமா, விமர்சனங்கள் மற்றும் காரசார விவாதங்கள் இடம்பெறும்.
* மஹாராஷ்டிராவில், கணேஷ் பூஜா மிகவும் விசேஷம். இச்சமயங்களில், பல இதழ்கள் தனி சிறப்பிதழ்களை வெளியிடுகின்றன
* தெலுங்கில், கிரஹ ஷோபா, சந்தமாமா, முக்யாலசராலு, நவ்யா உட்பட பல இதழ்கள், ஸ்பெஷல் தீபாவளி மலர்களை வெளியிடுகின்றன.
இது தவிர, ஈநாடு உட்பட, பல நாளிதழ்கள், போட்டி போட்டு, ஸ்பெஷல் தீபாவளி மலர் இதழ்களை வெளியிட்டு வருகிறது.
நடுத்தெரு நாராயணன்