
அன்பு சகோதரிக்கு —
என் வயது, 68. கணவர் உயிருடன் இல்லை. எனக்கு ஒரே மகன். அவனுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.
நான் திருமணமாகி, புகுந்த வீட்டுக்கு வந்தபோது, கணவருக்கு, 1 ஏக்கர் நிலம் இருந்தது. நாங்கள் இருவரும் கடுமையாக உழைத்து, கண்ணும் கருத்துமாக விவசாயம் செய்து வந்தோம். மகனுக்கு, 16 வயதான போது, நாங்கள், 20 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் ஆனோம்.
மகன், டிகிரி படித்து, விவசாய வேலைக்கே வந்தான். மேலும் உழைத்து, எங்கள் ஊரில் அனைவரும் மதிக்கும்படி வாழ்ந்தோம். சொந்தத்தில் பெண் பார்த்து, மகனுக்கு திருமணம் செய்து வைத்தோம். வாழ்வு சந்தோஷமாக சென்றது.
இந்நிலையில், திடீரென்று மாரடைப்பால் இறந்தார், கணவர். அவரின் விவசாய கணக்கு வழக்குகளை, நான் பார்க்க ஆரம்பித்தேன். யார் துாண்டுதலோ தெரியவில்லை, என்னிடமிருந்த பொறுப்புகளை, மகன் எடுத்துக் கொண்டான்.
சரி... படித்தவன், என்னை விட திறமையாக பார்த்துக் கொள்வான் என்று, நானும் விட்டு விட்டேன். அதன்பின், அவன் மனைவியின் போதனையால், சொத்துக்களை தன் பெயரில் எழுதி தருமாறு கேட்க, மகன் கைவிட மாட்டான் என்று நம்பி, எழுதி கொடுத்து விட்டேன்.
இப்போது, நிலைமை தலைகீழாகி விட்டது. தனியாக சொகுசு பங்களா ஒன்று கட்டி, அதில் குடியேறினர். என்னை, பழைய ஓட்டு வீட்டிலேயே தங்கும்படி கூறிவிட்டாள், மருமகள்.
மூன்று வேளையும் சமைத்து தர முடியாது என்று, அவள் கூறியவுடன், தினமும், ஓட்டலில் வாங்கி தருகிறான், மகன்.
ஊரில், ஆல மரமாக வாழ்ந்த என்னால், இந்த அலட்சிய போக்கு, மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலருக்கும் படி அளந்த எனக்கு, வயிறு நிறைய சாப்பிட முடியவில்லையே என்று ஏக்கமாக உள்ளது. யார் வீட்டுக்கும் சென்று, ஒரு வாய் சோறு போடச் சொல்லி கேட்கவும் மனசு வரவில்லை. விரைவில் இறந்து விட மாட்டோமா என்று தோன்றுகிறது. நான் என்ன செய்யட்டும் சகோதரி.
— இப்படிக்கு,
சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
மகனுக்கு, தற்சமயம், 45 வயது இருக்கும் என்று யூகிக்கிறேன். அவன் இரு குழந்தைகளில், மூத்தது மகளாய் இருந்தால், அவளுக்கு வயது, 19 இருக்கலாம்; கல்லுாரியில் படித்துக் கொண்டிருப்பாள் என நம்புகிறேன். இளையது மகனாக இருந்தால், 17 வயதாகலாம்; பிளஸ் 2 படித்துக் கொண்டிருப்பான்...
மருமகள், இல்லத்தரசியாக, தன் குடும்பத்தை சிறப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறாள்; அவள், உன் உறவு பெண்ணும் கூட.
மகனின் எல்லா செயல்பாடுகளுக்கும், மருமகளை குற்றம் சாட்டுவது, அர்த்த பொருத்தமில்லாத விஷயம். புதிதாய் திருமணமான வாலிபன் அல்ல, மகன். வயதுக்கு வந்த இரு பிள்ளைகளின் எதிர்காலத்தை யோசித்து தான், 20 ஏக்கர் நிலத்தை, உன்னிடமிருந்து எழுதி வாங்கி இருக்கிறான்.
நீ வயதானவள், பாரம்பரிய முறையில் விவசாயம் செய்வாய். மகனோ, படித்தவன். புதுமையான முறைகளை கையாண்டு, விவசாயத்தை லாபகரமாக்குவான்.
தாய்க்கும் - மனைவிக்கும், உறவு விரிசல் பெரிதாகி விடக்கூடாது என்ற, 'சென்டிமென்ட்'டில், உன்னை பழைய வீட்டில் தங்க சொல்லியிருக்கிறான். மனைவியை சிரமப்படுத்த விரும்பாமல், விடுதியிலிருந்து உணவு வாங்கி தருகிறான்.
மகனின் விஷயத்தை, எதிர்மறையாக அணுகக் கூடாது. உன்னை, முதியோர் இல்லத்தில் சேர்க்கவில்லை; உணவு வாங்கி தராமல் பட்டினி போடவில்லை. வாழ்நாளில் முக்கால்வாசி கரைந்து விட்டது. இனி, சுயத்தை பற்றியே யோசிக்காமல், மூன்றாவது தலைமுறையின் எதிர்காலத்தை பற்றி யோசி.
'அன்பாய் கேட்டால், என் உயிரையும் தருவேன்... வலுக்கட்டாயப்படுத்தி சொத்துகளை எல்லாம் என்னிடமிருந்து, மகன் எழுதி வாங்கிக் கொண்டதை, இன்னும் என் மனம் ஒப்பவில்லை...' என்கிறாயா?
சகோதரி... ஒரு காரியம் செய். மகனை அழைத்து, 'தன்னந்தனியாய் பழைய ஓட்டு வீட்டில் தங்க, பயமாய் இருக்கிறது. உணவு விடுதி சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை. ஆகையால், உன் வீட்டிலேயே ஒரு அறை ஒதுக்கி கொடு. அங்கேயே சாப்பிட்டுக் கொள்கிறேன் அல்லது ஓட்டு வீட்டை மராமத்து பண்ணி கொடு, சமையல் செய்யவும், எனக்கு உதவியாகவும் ஒரு ஆளை ஏற்பாடு செய்.
'நான் உயிருடன் இருக்கும் வரை, எனக்கான மரியாதையை கொடு. விவசாய வேலைகளில் எனக்கும் சிறு பங்கு தா. இதெல்லாம் செய்ய தவறினால், காவல் நிலையத்தில் உன் மீது புகார் செய்வதை தவிர, வேறு வழியில்லை.
'பாட்டனார் சொத்து, 1 ஏக்கர் தான். மீதி, 19 ஏக்கர், உன் அப்பா உழைத்து சம்பாதித்தது. அவரின் சொத்துகளை எழுதி கொடுத்தேன்; எழுதி கொடுத்த நான், உயிருடன் இருக்கிறேன். உன் நடவடிக்கைகள் திருப்தி கரமாய் இல்லை எனக் கூறி, எழுதி கொடுத்ததை ரத்து செய்ய, 'வக்கீல் நோட்டீஸ்' அனுப்பலாம்...
'உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நிலத்தை உன்னிடமிருந்து பிடுங்கி, சுயமாய் நானே அனுபவிக்கலாம்.
10 ஏக்கர் நிலத்தை, பள்ளிக்கூடம் கட்ட தானமாய் தரலாம். மீதி, 9 ஏக்கரை விற்று, பணத்தை வங்கியில் போட்டு வரும் வட்டியில், நான் ராஜ வாழ்க்கை வாழலாம்...' எனக் கூறி, பேச்சை பாதியில் நிறுத்து.
கதறிக் கொண்டு காலடியில் வந்து விழுவான், மகன்.
'சுயநலம் பிடிச்சவளாக இருந்தால், மேற்சொன்னவைகளை செய்து, உன்னிடமிருந்து, 20 ஏக்கர் விவசாய நிலத்தை பிடுங்குவேன். பேரன் - பேத்திகளுக்கு கல்யாணம் செய்து, கொள்ளு பேரன் - பேத்திகளை கொஞ்ச ஆவலாய் இருக்கிறேன்.
'நீ, பொண்டாட்டிதாசனாகவே இரு... அதற்காக உன்னை, காவல் நிலையம், நீதிமன்றம் என, அலைய வைக்க மாட்டேன். என் ஆவலாதிகளை கொட்டி புலம்பினேன், அவ்வளவு தான். ஒரு விரோதி போல் என்னிடம் நடக்காதே; அன்பாய் இரு...' என, மகனுக்கு அறிவுறுத்து.
மருமகளை கண்டால் புன்முறுவல் செய். பேரன் - பேத்திகளுடன் அளவளாவு. விவசாய நிலத்தில் அமர்ந்து, சுகந்த காற்றை சுவாசி. பிறக்கும் போது நாம் எதையும் எடுத்து வரவில்லை; இறக்கும் போது எதையும் எடுத்து போகப் போவதில்லை என்ற, கீதை வரிகளை நினைவில் வைத்துக் கொள்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.