தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மே 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., சந்தித்த முதல் பொதுத் தேர்தலில், (1957), 15 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு நாள், பகல், 12 மணிக்கு, அண்ணாதுரையை காண வந்தார் ம.பொ.சி., பொது மேடைகளில் அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டிருந்த அவரது வருகை, ஆச்சரியமூட்டியது.

வந்தவர், அண்ணாதுரையுடன் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தபின், விஷயத்திற்கு வந்தார். 'சட்டசபை மேலவைக்கான தேர்தல் வருகிறதல்லவா... அது விஷயமாக தங்களிடம் பேசி விட்டுப் போகலாம் என்று தான் வந்தேன்...' என்றார்.

'நான் என்ன செய்யணும்?' என, ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார் அண்ணாதுரை.

'தி.மு.க.,வின், 15 ஓட்டுகளும், எனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும்...'

'சரி... இந்த 15, தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் போதாதே... மீதி ஓட்டுக்கு என்ன செய்வீர்கள்?'

'ராஜாஜியை அணுகலாம் என்றிருக்கிறேன்...' என்றார் ம.பொ.சி.,

'நல்ல யோசனை தான்... அவர் தான் உங்கள் அரசியல் குரு ஆயிற்றே... நிச்சயம் உதவுவார். முதலில் அவருடைய ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கிடையில் நான், எங்கள் கட்சியினரோடு கலந்து பேசுகிறேன்...' என்று, அவரை வழியனுப்பி வைத்தார் அண்ணாதுரை.

அருகிலிருந்த என்.வி.நடராசன், 'என்ன இப்படிச் சொல்லி விட்டீர் கள்? ராஜாஜி இவரை ஆதரித்து விட்டால், தி.மு.க., ஓட்டுக்களை இவருக்கு போடுவதா?' என்று கோபித்தார்.

'பயப்படாதே... அந்த ஆபத்து நிச்சயமாக நமக்கு வராது. இவர் என்னை அணுகிய சேதி, ராஜாஜிக்கு தெரிந்து விடும். அதற்குப் பிறகும் ராஜாஜி இவரை ஆதரிப்பார் என்றா நம்புகிறாய்?'

ம.பொ.சி., வந்து போன சில நாட்களில், தி.மு.க., அலுவலகத்திற்கு, பி.டி.ராஜன் வந்தார். 'போன வாரம் ம.பொ.சி., வந்தார், சமாளித்து விட்டேன்; இந்த வாரம் இவர் வருகிறார். என்ன சொல்லி சமாளிப்பது?' என்று சொல்லிக் கொண்டிருந்தார் அண்ணாதுரை.

பி.டி.ராஜன் வருகிறார் என்பதால், அலுவலகத் தில் ஒரே பரபரப்பு. முகமலர்ச்சியோடு அவரை வரவேற்று, 'ஏன் இப்படி சிரமப்பட்டு வந்தீர்கள்? தொலைபேசியில் பேசியிருக்கலாமே...' என்றார் அண்ணாதுரை.

'இல்லை அண்ணாதுரை... இது டெலிபோனில் பேசுற விஷயமல்ல... அதனால், நேரில் வந்து விட்டேன்!'

தேனீர் வந்தது; அனைவரும் அருந்தினர். இடையில் அண்ணாதுரை என்னைப் பார்த்து, 'வெங்கடாசலம்... அந்த, 'புரூப்'பைக் கொண்டு வா!' என்றார்.

நான் விழித்தேன். காரணம், அந்த வாரத்து, 'ஹோம் லேண்ட்' இதழ், அப்போது அச்சாகி முடிந்திருந்தது. இப்போது போய், புரூப் கொண்டு வரச் சொல்கிறாரே என குழம்பினேன். அண்ணாதுரை, 'அதான் ஐயா... நீ எழுதியிருக்கியே துணைத் தலையங்கம்; அதைக் கொண்டு வா!' என்றார்; கொண்டு வந்து கொடுத்தேன். அதை, ஆழ்ந்து படிப்பதைப் போல் படித்தார். நெற்றியைத் தடவிக் கொண்டார். நான்கைந்து இடங்களில், எதை எதையோ அடித்தார், திருத்தினார்; எனக்கு எதுவும் புரியவில்லை.

பிறகு என்னைப் பார்த்து, 'என்ன ஐயா இது... 'புரூப்'பை நுணுக்கமாகப் பார்க்கிறது இல்லையோ? இத்தனைத் தவறுகள் இருந்தால், நம் பத்திரிகையைப் பற்றி வாசகர்கள் என்ன நினைப்பர்?' என்றார்.

நான் ஒன்றும் பேசவில்லை; மற்றவர்கள் என்னைப் பரிதாபத்துடன் பார்த்தனர்.

திடீரென்று பி.டி.ராஜன் எழுந்தார். 'சரி, அண்ணாதுரை... இப்போது உங்கள், 'மூடு' சரியில்லை; நான், பிறகு பார்க்கிறேன். வரட்டுமா?' என்று புறப்பட்டார்.

'பரவாயில்லை... நீங்கள் ஏதோ அவசரமான வேலையா புறப்படுறீங்க போலிருக்கு. ஏதேனும் செய்தி இருந்தால், நீங்கள் நெடுஞ்செழியனிடமே சொல்லி அனுப்பலாம்...' என்று, அவருக்கு விடை கொடுத்தார் அண்ணாதுரை.

கலங்கிய கண்களுடன், 'நான் என்ன புரூப் தப்பு செய்தேன்...' என்றேன்.

'நீ ஒன்றும் தப்பு செய்யல... உன்னிடம் காட்டிய கோபத்தில், பத்தில் ஒரு பங்கு காண்பித்திருந்தால் கூட, பி.டி.ராஜன் என்னை தன் ஜென்ம விரோதி ஆக்கியிருப்பார்; தப்பித்தேன்...' என்றார் அண்ணாதுரை.

— அண்ணாதுரை நடத்திய

ஆங்கில இதழான, 'ஹோம் லேண்ட்!' இதழில், துணை ஆசிரியராகப் பணியாற்றிய எம்.எஸ்.வெங்கடாசலம் எழுதிய, 'நான் கண்ட அண்ணா!' நூலிலிருந்து...

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us