
ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்
டாக்டர். மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்' நுாலிலிருந்து:விவேகானந்தர், இளைஞராக இருந்தபோது, அவர் வீட்டு வாசலில் நின்று, யாசகம் கேட்டார், ஒரு துறவி.
அவர் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்ததைப் பார்த்து, மறுகணமே, தன் ஆடைகளை கழற்றி, துறவிக்கு கொடுத்தார், விவேகானந்தர். மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றார், துறவி.
விவேகானந்தரின் வாழ்க்கையில், அவர், ஏழைகளையும், பசித்தவர்களையும் கண்டு மனமிரங்கி அன்பு காட்டிய சம்பவங்கள் பல உண்டு.
'நம்மில் ஒரு சகோதரன், உணவில்லாமல் இருக்கும்போது, அவருக்கு, உணவு தருவதை தவிர, மேலான விஷயம் இருக்க முடியாது...' என்று கூறியுள்ளார், விவேகானந்தர்.
'அயல் நாடுகளில் பயணம் செய்தபோது, நம் இந்திய குழந்தைகளை எண்ணி, நான் பல சமயம் அழுதுள்ளேன். காரணம், வசதிகள் இல்லாமல், நம் குழந்தைகள் படும் துன்பங்கள், என்னை வெகுவாக உலுக்கியிருக்கிறது...' என்று, ஒரு குறிப்பில் எழுதியுள்ளார், விவேகானந்தர்.
ஆர்.பிரசன்னா எழுதிய, 'பிரபலங்கள் 10, சுவையான சம்பவங்கள் 100' நுாலிலிருந்து: அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு நுாலகத்துக்கு சென்றிருந்தார், விவேகானந்தர். நுாலகரிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை கேட்டார். நுாலகரும், எடுத்து கொடுத்தார். சிறிது நேரத்திலேயே, புத்தகத்தை திருப்பி கொடுத்து விட்டார், விவேகானந்தர்.
'எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி எடுத்து கொடுத்தேன். இவ்வளவு சீக்கிரம் திருப்பி தந்து விட்டீர்களே... இதை, படித்தீர்களா இல்லையா...' என்று கத்தினார், நுாலகர்.
'நான், புத்தகம் முழுவதையும் படித்து முடித்து விட்டேன். வேண்டுமானால் நீங்கள், புத்தகத்திலிருந்து எதையாவது கேளுங்கள்; பதில் சொல்கிறேன்...' என்றார்.
புத்தகத்திலிருந்து சில கேள்விகளை கேட்டார், நுாலகர்; உடனுக்குடன் சரியான பதிலை
கூறினார், விவேகானந்தர்.
'எப்படி இவ்வளவு விரைவாக, இந்த புத்தகத்தை படித்து முடித்தீர்...' என்றார், நுாலகர்.
'சிலர், வார்த்தை வார்த்தையாக படிப்பர்; சிலர், வாக்கியம் வாக்கியமாக படிப்பர்; சிலர், பத்தி பத்தியாக படிப்பர்; சிலர், பக்கம் பக்கமாக படிப்பர். ஆனால், நான், புத்தகம் புத்தகமாக படிப்பவன்...' என, சிரித்தபடியே கூறினார், விவேகானந்தர்.
அமெரிக்காவில், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார், விவேகானந்தர். அப்போது, இரண்டு ஐரோப்பியர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தார்.
விவேகானந்தருக்கு, ஆங்கிலம் தெரியாது என நினைத்த ஒரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு நாய்...' என, ஆங்கிலத்தில் கூறினான். மற்றொரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு கழுதை...' என்று கூறினான்.
இதை கேட்ட, விவேகானந்தர், 'அவை இரண்டிற்கும் இடையிலே தான், நான் அமர்ந்திருக்கிறேன்...' என்று, ஆங்கிலத்தில் கூறினார்.
இதை கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும், அவமானத்தால் தலை குனிந்தனர்.
ஒருமுறை, ராஜஸ்தானுக்கு சென்றிருந்தார், விவேகானந்தர். பாலைவனங்கள் நிறைந்த பகுதியான அங்கு, கடும் வெப்பம் நிலவியது.
வெயிலின் கொடுமையால், 'லுா' என்ற நோய், மக்களை வாட்டிக் கொண்டிருந்தது. அதிலிருந்து காத்துக் கொள்ள, பெரிய தலைப்பாகை கட்டிக் கொண்டனர். அந்நோய் தாக்காமல் இருப்பதற்காக, விவேகானந்தரை தலைப்பாகை கட்டிக்கொள்ள சொன்னதோடு, அரசரே, கட்டியும் விட்டார்; அதோடு, தலைப்பாகை கட்டும் விதம் பற்றியும் சொல்லிக் கொடுத்தார்.
அன்று முதல் தலைப்பாகை கட்ட ஆரம்பித்தார், விவேகானந்தர். பின்பு, அதுவே அவரது அடையாளமாகவும் ஆகி விட்டது.
நடுத்தெரு நாராயணன்