
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 28 வயது பெண். எனக்கு, இரு அக்காக்கள் உள்ளனர். ஏழ்மையான குடும்பம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார், அப்பா. கம்பெனியில் நஷ்டம் ஏற்படவே, மூடி விட்டனர். அப்பாவின் வேலை பறிபோனதால். மனம் நொடிந்து, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு ஆளானார்.
சொந்த வீடு மற்றும் நிலம் அனைத்தையும் விற்று, எங்களை படிக்க வைத்தார். தன் வைத்திய செலவுக்கு பணம் போதாமல், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் திடீரென ஒருநாள், மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார். சமையல் வேலை, வீட்டு வேலை, பூ கட்டி விற்பது என்று, பல வேலைகள் அம்மா செய்தும், பற்றாக்குறை தான்.
வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டோம். மூவருமே படிப்பை நிறுத்தி, அம்மாவுக்கு உதவியாக இருக்க ஆரம்பித்தோம்.
துாரத்து உறவினர் ஒருவர், எங்கள் நிலை அறிந்து, தன் மகனுக்கு, என்னை பெண் கேட்டு வந்தார். மூத்தவர்கள் இருக்கும்போது, எனக்கு திருமணம் செய்வதா என்று யோசித்தார், அம்மா.
நான் ஒரு ஆள் குறைந்தால், அவர்கள் சிறிது சமாளித்துக் கொள்வரே என்று, நானே வலிய சம்மதம் தெரிவித்து, திருமணம் செய்து கொண்டேன்.
இரண்டொரு ஆண்டுகளில், அக்காக்களின் திருமணம் எளிமையாக நடந்தது. மூவருமே வெவ்வேறு ஊர்களில் உள்ளோம்.
ஒரு விபத்தில் சிக்கி, நடக்க முடியாமல் அவதிப்பட்டார், அம்மா. மூன்று மாப்பிள்ளைகளுமே, அம்மாவை தங்களுடன் வைத்து, பராமரிக்க அனுமதி தரவில்லை.
அக்கம்பக்கத்து வீட்டினரை கெஞ்சி கூத்தாடி, அம்மாவை கவனித்து கொள்ள வேண்டினோம். அவர்களும் எவ்வளவு நாளைக்குதான் பார்த்துக் கொள்வர். சரியாக சாப்பிடாமலும், உதவிக்கு ஆள் இல்லாமலும் கஷ்டப்படுகிறார், அம்மா.
அம்மா இருப்பது சிறிய ஊர் என்பதால், முதியோர் இல்லம், ஆசிரமம் ஏதும் இல்லை.
எங்களுக்காக வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்ட அம்மாவுக்கு, உதவ முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
இதற்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
தங்களுக்காக உழைத்து, ஓடாய் தேய்ந்த அம்மாவை பராமரிக்க, மூன்று மகள்களும் விருப்பப்படுவது, பாராட்டுக்குரிய விஷயம். உங்களின் அன்புக்கு, தலை வணங்குகிறேன்.
* உன் அம்மாவை பராமரிக்க மறுக்கும் மருமகன்களை வழிக்கு கொண்டு வர, மூவரும், ஒத்துழையாமை இயக்கம் நடத்துங்கள். நாள் முழுக்க கணவனுடன் பேசாதிருந்து, தாம்பத்யத்துக்கு ஒத்துழைக்க மறுங்கள். உப்பு, சப்பில்லாத சமையல் செய்து போடுங்கள். அழுது மூக்கை சிந்துங்கள். பாட்டி சார்பாக போராட, பேரன் - பேத்திகளை துாண்டி விடுங்கள். அம்மா சார்பாக பேச, கணவன்மார் வீட்டு பெரியவர்களை முடுக்கி விடுங்கள். இறுதியாக, உங்கள் கணவர்கள் சமாதான உடன்படிக்கைக்கு இறங்கி வருவர்
* தாயாருக்கு பண பிரச்னை தான் பிரதானம் என்றால், ஒவ்வொரு மகளும், 2,000 வீதம், 6,000 ரூபாயை மாத செலவுக்கு தாருங்கள். அம்மாவுக்கு ஒத்தாசையாக, சிறு சிறு வேலைகள் செய்ய, 1,000 ரூபாய் சம்பளத்தில் ஆள் அமர்த்துங்கள். இந்த பணத்துக்கு, கட்டாயம், கிராமத்திலிருந்து வேலையாள் கிடைப்பாள்
* ஆண்டின் முதல் நான்கு மாதங்கள், ஒரு மகள் வீட்டில், அடுத்த நான்கு மாதம், இரண்டாவது மகள் வீட்டில், அடுத்த நான்கு மாதம், மூன்றாவது மகள் வீட்டில், அம்மா தங்கட்டும். இந்த ஏற்பட்டால், அம்மாவை நேரடியாக பார்த்துக் கொள்ளலாம். அம்மாவின் அனுபவ அறிவு, மகள்களின் குடும்பங்களுக்கு உதவும். பேரன் - பேத்திகளுக்கு, பாட்டியின் பேரன்பும், வைத்தியமும் கிட்டும். வேண்டா வெறுப்பாய், மாமியாரை வீட்டில் தங்க வைத்த, மருமகன்கள், மாமியாரின் அன்பு முகம் பார்த்து மனம் மாறுவர். வீட்டில் ஒரு சீனியர் சிட்டிசன் பெண்மணி இருப்பது, எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் என உணர்வர்
* அம்மா இருக்கும் ஊரில், முதியோர் இல்லம் இல்லையென்றால் என்ன... நன்கு விசாரித்து, பணம் வாங்கி பராமரிக்கும் சிறப்பான ஒரு முதியோர் இல்லத்தில் உங்கள் அம்மாவை சேர்க்கலாம். முதியோர் இல்லத்தில் அம்மாவை சேர்க்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி தேவையில்லை. வீட்டில் வைத்து பராமரிக்க மறுக்கும் மருமகன்கள், இந்த யோசனைக்காவது சம்மதித்தனரே என, சந்தோஷப்படுங்கள். முதியோர் இல்லத்திற்கான செலவை, ஒரு மாதம் ஒரு மகள் கொடுக்கலாம்
* 'மாதா மாதம் செலவுக்கு பணம் தரமாட்டோம். ஆண்டுக்கு, நான்கு மாதம், வீட்டில் வைத்து பராமரிக்கவும் மாட்டோம். பணம் செலவு செய்து, முதியோர் இல்லத்திலும் பாதுகாக்க மாட்டோம்...' என, உங்கள் கணவன்மார்கள் அடம்பிடித்தால், பராமரிக்க பணம் கேட்காத முதியோர் இல்லத்தில், அம்மாவை சேர்த்து விடுங்கள். மாதா மாதம் குழந்தைகளுடன் சென்று, அம்மாவை குசலம் விசாரித்து வரலாம். இதில், குற்ற உணர்ச்சி தேவையில்லை.
இதெல்லாவற்றையும் உன் அம்மா மறுக்கவும் செய்யலாம். தன்மானமும், சுய கவுரவமும் அவரை தடுக்கும். கிடைத்த வேலையை செய்து, ஊதியம் பெறுவார்.
ரேஷனில் போடும், 20 கிலோ இலவச அரிசியை வைத்து, மாத உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வார். நொண்டி நொண்டியாவது, மகள்களையும், பேரன் - பேத்திகளையும் பார்க்க, பலகாரங்களுடன் உங்களின் வீடுகளுக்கு வந்து போவார். பழுத்த இலைகளுக்கு, ரோஷம் அதிகம் செல்லம்களா.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.