PUBLISHED ON : ஏப் 05, 2020

கல்கி எழுதிய, 'படித்தேன், ரசித்தேன்...' நுாலிலிருந்து: பல ஆண்டுகளுக்கு முன், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில், தமிழிசை மாநாடு நடந்தது. அதில், நானும் கலந்து கொண்டேன்.
மாநாடு முடிந்து, சபை கலையும் சமயத்தில், திடீரென ஒரு இளைஞர், என் முன், வழி மறிப்பவர் போல் நின்று, 'ஐயா... பாரதியார் உயிரோடு இருந்த காலத்தில், அவரை சரிவர மதிக்கவில்லை என்ற பழி, தமிழகத்திற்கு உண்டு என்பது தெரியுமல்லவா...' என்று கேட்டார்.
'ஆம்... தெரியும்; ஆனால், அதற்கு பொறுப்பாளி நாம் இருவரும் அல்ல...' என்றேன்.
'அது, உண்மை தான். ஆனால், இன்றைய தினம், நம்மிடையே நாமக்கல் கவிஞர் உயிரோடு இருக்கிறார் அல்லவா... பாரதியார் விஷயத்தில் ஏற்பட்ட பழி, நாமக்கல் கவிஞர் விஷயத்திலும் தமிழகத்திற்கு ஏற்படக் கூடாதல்லவா...' என்று கேட்டார்.
'கூடாது தான்...' என்றேன்.
'அப்படியானால், அதற்கு நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்...' என்றார்.
'ரயிலுக்கு போகும் அவசரத்தில், ஒன்றும் செய்ய முடியாது. சென்னைக்கு வந்தால், சாவகாசமாக அதை பற்றி யோசிக்கலாம்...' என்று சொல்லி, தப்பினேன்.
தேவகோட்டைக்கும், சென்னைக்கும் பல காத துாரம். அத்துடன், அந்நாட்களில் ரயில் பிரயாணம் மிக அபாயகரமாகவும் இருந்தது. ஆகையால், அந்த இளைஞரை, இந்த ஜென்மத்தில் மறுபடி சந்திக்க போவதில்லை என்று நினைத்தேன். ஆனால், நாம் நினைக்கிறபடி, இந்த உலகில் என்ன காரியம் தான் நடைபெறுகிறது...
சில காலத்திற்கு பிறகு, அந்த இளைஞர், சென்னைக்கு வந்து, நினைத்த காரியத்தை பிடிவாதமாக நிறைவேற்றியும் வைத்தார்.
நாமக்கல் கவிஞருக்கு, பண முடிப்பு அளிக்கும் வைபவம் மிக சிறப்பாக நடைபெற்றது. ஒரு கவிஞரை, உயிருடன் இருந்த காலத்திலயே சிறப்பித்த பெரும் புகழை, தமிழகம் அடைந்தது.
அந்த இளைஞரை பாராட்டி, ராஜாஜி வைத்த சிறப்பு பெயர் தான், சின்ன அண்ணாமலை.
தி.க.சிவசங்கரன் எழுதிய, 'தாமரை' இலக்கிய இதழிலிலிருந்து: கல்கி, துமிலன், நாடோடி, தேவன், ராஜாஜி, டி.கே.சி., - எஸ்.வி.வி., - மீ.ப.சோமு மற்றும் பி.ஸ்ரீ., ஆகியோரின் ஜனரஞ்சக எழுத்துகளின் முன், 'மணிக்கொடி' இதழ் எழுத்தாளர்களின் கலை படைப்புகள் நிற்க முடியவில்லை.
நான்கே ஆண்டுகளில், 'மணிக்கொடி' இதழும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில்,
க.நா.சுப்ரமண்யத்தின், 'சூறாவளி' இதழும் கடையை கட்டி விட்டன.
கடந்த, 1939ல், இரண்டாம் உலக யுத்தம் துவங்கிய வேளையில், மணிக்கொடி எழுத்தாளர்களில், பி.எஸ்.ராமையா மற்றும்
கி.ராஜ நாராயணன் ஆகியோர், ஜெமினி, ஜுபிடர் ஸ்டுடியோக்களிலும், சிட்டி என்பவர், அகில இந்திய வானொலியிலும், ந.பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத் துறையிலும்,
ந.சிதம்பர சுப்ரமணியன், வாகினி ஸ்டுடியோவிலும் வேலைக்கு சேர்ந்தனர். மவுனி, சிதம்பரத்தில், 'ரைஸ்மில்' வைத்து நடத்தலானார். புதுமைப்பித்தனுக்கு, 'தினமணி'யில் உதவி ஆசிரியர் உத்தியோகம்.
கு.ப.ராஜகோபாலன், க.நா.சுப்ரமண்யம், சி.சு.செல்லப்பா ஆகியோருக்கு, வேலையில்லாத் திண்டாட்டம். இவ்வாறாக அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டை போல, பொருளாதார நெருக்கடியை தாங்க முடியாமல், 'மணிக்கொடி' கோஷ்டி சிதறுண்டு போனது.
வாரியாரின் சொற்பொழிவிலிருந்து: அறிவில் சிறந்தவன், மனிதன். ஆற்றலில் சிறந்தது, சிங்கம். இரணியனை அழிக்க, ஆற்றல், அறிவு இரண்டுமே அவசியம். எனவே தான், அறிவையும், ஆற்றலையும் இணைத்து, நரசிம்ம அவதாரம் எடுத்து, இரணியனை அழித்தார், மகா விஷ்ணு.
ஒழிக்கப்பட வேண்டிய ஒரு பெரும் சக்தியை வெல்ல, கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை முதலில் உணர்த்தியவரே, மகா விஷ்ணு தான்!
நடுத்தெரு நாராயணன்
