
கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' நுாலிலிருந்து: சென்னை, காமராஜர் அரங்கில், ஒரு இந்து மத மாநாடு. அதில், என் தலைமையில் கவியரங்கம். முதல் வரிசையில் அமர்ந்திருந்தார், முதல்வர், எம்.ஜி.ஆர்.,
மண்ணிலிருந்து புறப்பட்டது புழு
புழுவை பூச்சி தின்ன
பூச்சியை புறா தின்றது
புறாவை பூனை தின்றது
பூனையை மனிதன் தின்ன
மனிதனை மண் தின்றது
மறுபடியும்
மண்ணிலிருந்து புறப்பட்டது புழு
புனரபி ஜனனம்
புனரபி மரணம்
என்று, நான் கவிதையை படித்து முடித்தபோது, கைதட்டி ரசித்தார், -எம்.ஜி.ஆர்.,
'அண்ணல் அம்பேத்கர்' நுாலிலிருந்து: தன், 26வது வயதில், கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு, பட்டப்படிப்பிற்காக சென்றார், அம்பேத்கர். அதற்கான பொருள் உதவியை செய்து கொடுத்தவர், பரோடா மகாராஜா. 1917ல், பட்டப்படிப்பு முடித்து வந்த பின், மகாராஜாவின் ராணுவ காரியதரிசியாக வேலையில் சேர்ந்தார், அம்பேத்கர்.
அப்போது, மகாராஜாவின் வேலையாட்களும், சிப்பந்திகளும், கோப்புகளை, அம்பேத்கரின் கையில் தராமல், எட்ட நின்று, மேஜை மேல் துாக்கிப் போடுவர். கிட்டே போனால், தீட்டு பட்டுவிடுமாம். அந்த அளவுக்கு கொடிய தீண்டாமை.
இந்து மதத்தில் உள்ள தீண்டாமையை எதிர்த்து, 1930ல், புத்த மதத்தில் சேரப் போவதாக அறிவித்தார், அம்பேத்கர். என்றாலும், அக்டோபர், 1956ல் தான் புத்த மதத்திற்கு மாறினார். ஆனால், அதே ஆண்டு, டிசம்பரில் காலமானார்.
'கி.வா.ஜ., சிரிக்கிறார்' நுாலிலிருந்து: ஒருமுறை, சொற்பொழிவாற்ற மும்பை சென்றிருந்தார், கி.வா.ஜ., ஒரு ஓட்டலில், குளிர்சாதன அறையில் தங்க வைத்தனர். மறுநாள் புறப்படும்போது, விழா நிர்வாகிக்கும், ஓட்டல் நிர்வாகிக்கும் அறை வாடகை சம்பந்தமாக ஏதோ தகராறு. பிறகு, பணம் கட்டி, கி.வா.ஜ.,வுடன் புறப்பட்ட விழா நிர்வாகி, 'நீங்கள் இதைப் பொருட்படுத்த வேண்டாம். சும்மா, சில்லரை தகராறு தான்...' என்றார்.
'இல்லை; இது, 'ஜில்' அறை தகராறு...' என்றார், கி.வா.ஜ.,
சிற்பி கோ.வீரபாண்டியன் எழுதிய, 'தமிழர் சிற்பக் கலை' நுாலிலிருந்து: பொதுவாக சிற்ப கலை என்பது, இந்து கோவில் கலையாகவே இருந்தது. இதனால், சிற்பக் கலைஞர்கள், போதிய வருவாய் இன்றி தவித்து, அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் தங்கள் நிலைமையை தெரிவித்தனர்.
இதன் விளைவாக, பூம்புகார் கலைக்கூடம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம் மற்றும் வள்ளுவர் கோட்டம் ஆகியன தோன்றின; சிற்பக் கலைஞர்களுக்கும் வேலை கிடைத்தது. 2௦௦ ஆண்டுகளுக்கு பின், சிற்ப பணிகளுக்கு, மதிப்பும், ஏற்றமும் கிடைத்தது. சமயத்தை மட்டும் சார்ந்திருந்த சிற்பம், இலக்கியத்திற்கும் பயன்பட்டது.
நடுத்தெரு நாராயணன்

