
அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது: 50, கணவர் வயது: 56. நானும், கணவரும் அரசு பணியில் உள்ளோம். நல்லது கெட்டது எதுவும் தெரியாமலேயே, என் வீட்டில் வளர்த்து விட்டனர். வெளியில் எங்கும் தனியாக செல்லத் தெரியாது.
கணவர், மிகப் பொறுப்பாளராக இருந்ததால், அவரே குடும்ப நிர்வாகத்தை கவனித்துக் கொண்டார். ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகளை, என் தம்பிக்கே மணம் முடித்தோம்.
நண்பர்களுடன் சேர்ந்து, கிரிக்கெட் விளையாட சென்று, படிப்பை கோட்டை விட்டான், மகன். நாங்கள் இருவரும் வேலைக்கு செல்வதால், அவனை சரியாக கவனிக்காமல், இப்படி ஆகிவிட்டான்.
எப்படியோ, பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தோம். குறைவான மதிப்பெண் பெற்றதாலும், மேலும் படிக்க விருப்பம் இல்லை என்றதாலும், அரசு போக்குவரத்து கழக பேருந்தில், நடத்துனராக பணியில் சேர்த்து விட்டோம். சொகுசாகவே வளர்ந்து விட்டதால், அப்பணியை செய்ய இயலவில்லை என்று கூறி, வேலையை விட்டு நின்று விட்டான்.
தற்காலிகமாக, ஒரு அலுவலகத்தில் பணியில் சேர்த்து விட்டோம். திருமணம் செய்து வைத்தால், பொறுப்பு வந்து விடும் என்று, பெண் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு நல்ல வரன் வந்தது. ஆனால், என் அவசர புத்தியால், அந்த வரன் வேண்டாம் என்று, மறுத்து விட்டேன். இதனால், கணவருக்கு, என் மீது அதீத கோபம். எங்களுக்குள் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்தது.
'படிப்பும் இல்லாமல், வேலையும் இல்லாமல் எந்த பெண் கழுத்தை நீட்டுவாள்...' என்று, தினமும் திட்டிக் கொண்டே இருப்பார்.
மகனும், தனக்கு யாரும் பெண் தரமாட்டார்கள் என்ற மன உளைச்சலில், வீட்டிற் குள்ளேயே அடைந்து கிடக்கிறான். மேலும், பெண் கிடைத்தாலும், அதற்கு பின், வேலைக்கு செல்லாவிட்டால், பெண் வீட்டார் கேவலமாக பேசுவரே என்றும் பயப்படுகிறான்.
இந்நிலையில், ஏழ்மையான வீட்டு பெண்ணை பார்த்து, மகனுக்கு மணம் முடிக்க விரும்பினார், கணவர். ஆனால், எனக்கோ அந்த வரனும் பிடிக்கவில்லை. பெண்ணும் சுமாராக தான் இருப்பாள்.
இந்த சம்பந்தம், நமக்கு பொருத்தமாக இருக்காது என, நான் தயங்குவதை அறிந்த கணவர், 'இந்த வரனையும் விட்டு விட்டால், மகனுக்கு திருமணமே ஆகாது; இதையே பேசி முடித்து விடலாம்...' என்கிறார்.
வீட்டில், சண்டையும் சச்சரவுமாக இருக்கிறது. நான் என்ன முடிவு எடுப்பது, அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு சகோதரிக்கு —
மகனின் ஒழுங்கின்மைக்கும், கல்வி இடை நிற்றலுக்கும் காரணம், நீயும், கணவரும் தான். இப்போதைய காலகட்டத்தின் குறைந்தபட்ச கல்வித் தகுதி, இளங்கலை பட்டப் படிப்பு தான். படிப்பு வருகிறதோ இல்லையோ, மகன், மகள்களை இளங்கலை பட்டப்படிப்பு வரை, படிக்க வைத்து விடுகின்றனர், பெற்றோர்.
கிரிக்கெட் விளையாட சென்று, படிப்பை கோட்டை விட்டான் என, நீ சொல்வது சாக்குபோக்கே. நடத்துனர் பணியையாவது மகன் விட்டு விடாமல் தகுந்த அறிவுரை கூறி, நீங்கள் தடுத்திருக்க வேண்டும். தற்காலிக பணி செய்யும் மகனுக்கு, பெண் பார்த்து திருமணம் செய்வது எந்த விதத்தில் நியாயம்... வரும் பெண்ணின் வாழ்க்கையையும் பாழாக்க போகிறீர்கள்.
மகனுக்கு இப்போது, 30 வயது இருக்குமா... ஒன்றும் கெட்டு போய் விடவில்லை. அவனுக்கு கீழ்கண்ட நிபந்தனைகளை விதித்து, ஒரு ஆண்டு அவகாசம் கொடுங்கள்...
* தொலை துார கல்வி இயக்ககம் மூலம் படிப்பை தொடரச் சொல்
* குறைந்தபட்சம், மாதம், 15 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் நிரந்தர பணியில் அவனை சேர சொல். மீண்டும் நடத்துனர் பணிக்கு மகன் போனால் சிறப்பு
* பகல் பொழுதுகளில், மகன், வீட்டில் தங்கக் கூடாது
* ஒரு ஆண்டு அவகாசத்தில், மகன், திருமண வாழ்க்கைக்கு பொருத்தமானவன் என்பதை நிரூபிக்க வேண்டும்
* மகன் முன், நீங்கள் இருவரும் சண்டையிடக் கூடாது. அவனுக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை, உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். உத்தியோகம் புருஷலட்சணம் என்ற பாடத்தை, கண்டிப்பான பெற்றோராக இருந்து, மகனுக்கு கற்றுத் தாருங்கள்
* பொறுப்பற்ற மகனுக்கு, மகளையும், மருமகனையும் தகுந்த அறிவுரை கூற சொல்லுங்கள்
* தாம்பத்யம் தேவை என்றால், ஓர் ஆண் என்ன வேண்டுமானாலும் செய்து, தன்னை நிரூபிப்பான். மகனை விட்டு பிடியுங்கள்
* ஏழ்மையான இடத்தில் பெண் பார்த்தாலும், அவள் படித்து, வேலைக்கு செல்பவராய் இருக்க வேண்டும்
* திருமணத்துக்கு பின், மகனையும், மருமகளையும் உங்கள் வீட்டில் வைத்து பராமரிக்காதீர்கள்; தனிக்குடித்தனம் போகட்டும்
* ஒரு ஆண்டிற்குள் மகன், சொந்த காலில் நிற்கவில்லை என்றால், மீண்டும் ஒரு ஆண்டு அவகாசம் கொடுத்து பார்க்கலாம். 35 வயதுக்குள், பொறுப்புள்ள ஆண் மகனாக மாற வாய்ப்புள்ளது
* 'நாங்கள் இன்னும், 10 ஆண்டுகள் உயிரோடு இருப்போமா, எவ்வளவு நாள் எங்களை சார்ந்து வாழ்வாய்... திருமணம் என்பது, வெறும் உடல் சுகம் பகிர்ந்து கொள்ளும் சடங்கல்ல, பாரம் ஏற்றிய இரட்டை மாட்டு வண்டியில், ஒரு மாடாய் பொறுப்பேற்கும் வைபவம். நாளை உன் மனைவி, ஒரு முழம் மல்லிகை பூ கேட்டால், பூவை, கடன் வாங்கி தருவாயா அல்லது எங்களிடம் கை நீட்டுவாயா...
'திருமணத்திற்கு பின், வேலைக்கு செல்லாவிட்டால், பெண் வீட்டார் கேவலமாக பேசுவரே என பயப்படுகிறாயே... அப்படியென்றால் உன் மீதே உனக்கு நம்பிக்கை இல்லையா...
'சுயமாய் சம்பாதிக்கிறாய், சொந்த காலில் நிற்கிறாய், உன்னை நம்பி வரும் மனைவியை, கண்ணின் மணி போல் பார்த்துக் கொள்வாய் என்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்தால் தான், உனக்கு திருமணம் செய்து வைப்போம். இல்லையென்றால், தன்னந்தனியாய் மண் புழு போல் ஊர்ந்து கிட
'உன் அக்காள் குடும்பம் சுபிட்சமாய் முன்னேற, நீ நடுத்தெருவில் நிற்கப் போகிறாயா, சிந்தித்து செயல்படு. இப்போது இல்லையென்றால், இனி எப்போதும் வராது ஒளிமயமான எதிர்காலம்...' என, ஆலோசனை வழங்கு
* சில ரயில்கள், தாமதமாய் கிளம்பி குறித்த நேரத்தில் சேர வேண்டிய இடத்தை போய் சேரும். அப்படி உன் மகனும் மாறினால் சந்தோஷமே.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.