
'பிசினஸ் ஸ்டாண்டர்டு' பத்திரிகையில் வந்த செய்தி: பிரபலங்கள் உடல்நிலை பற்றி வெளியில் சொல்லலாமா?
சமீபத்தில், பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், 'கொரோனா' வைரஸ் தொற்றால் அவதிப்பட்டார். கவலைக்கிடமான நிலைக்கு பின், குணமானார். நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட போது, 'இவர், தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருந்து மீண்டார், நேய்தொற்று ஏற்பட்ட போது, போரீஸ், பிரதமர் பதவி வகிப்பது சரியா...' என, கேள்வி எழுந்தது.
'தற்போது, உலக யுத்தம் போன்று எதுவும் நடக்கவில்லை என்றாலும், 'கொரோனா' சார்ந்தே பல முடிவுகளை, எடுக்கப்பட வேண்டியவர், பிரதமர். இப்படி முடங்கலாமா...' என்றனர், வல்லுனர்கள்.
இப்படி, மிக பிரபலங்களின் நோய் பற்றி, நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமா என்ற, கேள்வியும் எழுந்தது. இதற்கு முன்பும் இதுபோல் பல தலைவர்களுக்கு வந்த நோய் பற்றிய செய்தி, ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதுபற்றி, இப்போது வெளியாகி உள்ளது.
* பிரிட்டனில், வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது, அவருடைய டாக்டராக, லார்ட் மாறன் என்பவர் இருந்தார். இவர், 1960ல், தன் நினைவுகளை தொகுத்து, புத்தகமாக வெளியிட்டார். அதில், 1942ல், சர்ச்சிலுக்கு, 'ஸ்டிரோக்' மற்றும் 'ஹார்ட் அட்டாக்' வந்தது. ஆனால், அது வெளிப்படுத்தப் படவில்லை
அந்த சமயத்தில், இரண்டாம் உலகப் போர் துவங்கியிருந்தது. சர்ச்சிலின் நடவடிக்கைகள், 'சூப்பர் மேன்' அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டன. ஆனால், இதை, 1960ல், டாக்டர், தன் புத்தகத்தில் குறிப்பிட்டபோது, 'ஒரு பிரபலத்தின் உடல்நிலை பற்றி, அப்படி எப்படி எழுதலாம்...' என, பலர் கோபம் அடைந்தனர்
சர்ச்சில் ஒன்றும் கூறவில்லை. மேலும், சர்ச்சில், 1965ல் தான் இறந்தார். இதனால், விஷயம் பெரிதாகாமல் அமுங்கி விட்டது
* ஜெர்மன் சர்வாதிகாரி, ஹிட்லருக்கு, மேகப்புண் என்ற நோய் இருந்தது. இதனால், மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். 1943ல், பல தவறுதலான முடிவுகளை எடுத்து, பலரது உயிருக்கு வேட்டு வைத்தார். இதுபற்றி பலர் விரிவாக எழுதியுள்ளனர்
* அமெரிக்க முன்னாள் அதிபர், ப்ராங்க்ளின் ரூஸ்வெல்டுக்கு, புகை பிடித்ததால் ஏற்பட்ட இதய நோய், 1940ல் இருந்தது. ஆனால், இது வெளியிடப்படவே இல்லை. 1945ல், தீவிர, 'ஹார்ட் அட்டாக்' வந்து காலமானார்
* ரஷ்யாவின் சர்வாதிகாரி ஸ்டாலினும், புகை பிடிப்பவர் தான். ஆனால், அவர் பற்றிய உடல் ரகசியங்கள், அவர் உயிரோடு இருந்தபோதும், இறந்த பிறகும் பேசப்பட்டதே இல்லை; மருத்துவர்களும் வெளிப்படுத்தியதே இல்லை. அவர் இறந்து, பல ஆண்டுகளுக்கு பின், அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர், பேச்சுவாக்கில் கூறினார்
* சீன கம்யூனிஸ்ட் தலைவர், மாசேதுங் பற்றி, லிசிக்யூயி என்பவர், ஒரு புத்தகம் எழுதியுள்ளார். மாசேதுங், உலக அளவில் எந்த பிரச்னைகளிலும் சிக்கவில்லை. இருந்தும், 1970 - 76ல், அவர் இறக்கும் வரையில், அவர், உடல் நிலை பற்றிய ரகசியம் வெளியிடப்படவே இல்லை
கடந்த, 1971ல், அமெரிக்க ஜனாதிபதி, ரிச்சர்ட் நிக்சன், சீனா வந்த போது, அவரிடம் மாசேதுங் உடல் நிலை பற்றி தெரிவிக்கப்பட இல்லை
* இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோதும், பிறகும், முகமது அலி ஜின்னா, எப்போதுமே உடல்நிலை சரியில்லாதவராகவே இருந்துள்ளார். ஜல் ரத்தன்ஜி படேல் என்பவர் தான், அவருடைய குடும்ப டாக்டர். அவர் ஒருபோதும், ஜின்னா உடல்நிலை பற்றி அறிக்கை வெளியிட்டதே இல்லை.
நடுத்தெரு நாராயணன்

