
'இலக்கிய சிற்பி, வை.மு.கோதைநாயகி' நுாலிலிருந்து:
வை.மு.கோதைநாயகி, 1923ல், இந்திர மோகனா என்றொரு நாடகம் எழுதினார். அதைப் படித்துப் பார்த்த, அந்நாளைய பிரபல நாவலாசிரியர், வடுவூர் துரைசாமி ஐயங்கார், நேரில் வந்து பாராட்டினார்.
தாம் நடத்தி வந்த, 'ஜகன் மோகினி' என்ற மாத பத்திரிகையை வாங்கி, அதில் தொடர்ச்சியாக நாவல்களை வெளியிடலாமே என்று, கோதைநாயகிக்கு, யோசனை கூறினார்.
அதன்படியே பத்திரிகையை ஆரம்பித்து, அதில், நாவல்களை எழுதினார். முதல் நாவல் - வைதேகி. பிறகு, தனி நுாலாகவும் நாவல்களை வெளியிடலானார்.
மொத்தம், 115 நாவல்களை எழுதியிருக்கிறார். 1938ல்,- அவரது நாவலான, அனாதைப் பெண் மற்றும் ராஜமோகன் இரண்டும், திரைப்படங்களாக வெளிவந்தன. தயாநிதி என்ற நாவலை, 1967ல், சித்தி என்று, படமாக தயாரித்தார், இயக்குனர்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சிறந்த கதைக்கான, தமிழக அரசின் பரிசு, அந்தப் படத்திற்கு கிடைத்தது.
கடந்த, 1937ல், ராஜாஜி ஆட்சி நடந்து கொண்டிருந்த போது, கோதைநாயகியை, 'பிலிம் சென்சார் போர்டு' உறுப்பினராக நியமித்தார்.
முதல் படத்தைப் பார்த்துவிட்டு, கடுமையாக ஆட்சேபித்தனர். காரணம், அந்த படத்தில், காந்திஜி, தேசிய இயக்கம், முதலிய சில காட்சிகளுக்கு பிறகு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகிய சம்பவங்களை கொண்டே, தயாரிக்கப்பட்டிருந்தது தான்.
'நம் பண்பாட்டுக்கு விரோதமான இந்த படத்தை வெளியிடக் கூடாது...' என்று, கடுமையாக ஆட்சேபித்தார், கோதைநாயகி. மற்றொரு உறுப்பினரான, பம்மல் சம்பந்த முதலியாரும் ஆமோதிக்கவே, அந்த படம் தடை செய்யப்பட்டு, வெளிவராமலே போனது.
சூரிய குமாரி நடித்த, அதிர்ஷ்டம் என்ற படத்தில், குட்டைப் பாவாடை அணிந்து, ஊஞ்சலாடும் காட்சியொன்றை ஆட்சேபித்து, கருத்து தெரிவித்தார், கோதைநாயகி. ஆனால், அந்த படத்தின் காட்சி, வெளியூர்களில் வெளியான போது இடம்பெற்றிருந்தது. அதை அறிந்த, கோதைநாயகி, மீண்டும் தயாரிப்பாளர்களை எச்சரித்து, 'நெகடிவ்' பிரதிகளில், அந்த காட்சியை அழிக்கும்படி செய்தார் .
'அன்னை கஸ்துாரிபா' நுாலிலிருந்து:
ஒருமுறை, திருச்செங்கோட்டில், ராஜாஜி நடத்தி வந்த, காந்தி ஆசிரமத்திற்கு வந்தார், கஸ்துாரிபா காந்தி. அங்கே, கைத்தறி துணிகளுக்கு சாயம் போடும் வேலையை, ஆசிரமத் தொண்டர்கள் செய்து கொண்டிருந்தனர்.
ஒரு துணியை எடுத்துப் பார்த்த, கஸ்துாரிபா, அருகில் இருந்த ராஜாஜியிடம், அந்தத் துணியை காட்டி, 'திஸ் கலர் கோ...' அதாவது, இந்த துணி, சாயம் போகுமா என்பதை, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டார்.
அதைக் கேட்ட மற்றவர்கள், சிரித்தனர்.
'திஸ் கலர் நோ கோ...' என்றார், ராஜாஜி.
மீண்டும் சிரிப்பொலி.
சற்று வெட்கத்துடன், 'நான் பேசிய ஆங்கிலம் தவறா...' என்றார், கஸ்துாரிபா.
'இல்லை; நீங்கள் பேசியது தான் எளிமையான ஆங்கிலம். அது, குழந்தைகளுக்கு கூட புரியும்...' என்றார், ராஜாஜி.
அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார், கஸ்துாரிபா.
'அரசியல் சுவடுகள்' நுாலிலிருந்து:
பார்லிமென்டில், சோக ரசம் கூட, சமயத்தில், நகைச்சுவையாக அமைந்து விடும்.
தமிழகத்தில், அரியலுாரில் நடந்த ரயில் விபத்தால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து, தமிழக உறுப்பினர், வல்லத்தரசு என்பவர், விளக்கியதுடன் நிற்கவில்லை; தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
முகத்தில் துண்டைப் போட்டுக் கொண்டதால், சபாநாயகரை பார்க்கவில்லை.
சபாநாயகர் எவ்வளவு வற்புறுத்தியும், அவர், அழுகையை நிறுத்தவில்லை.
நடுத்தெரு நாராயணன்