
கலைஞன் பதிப்பகம், 'கண்ணதாசனின் பாடல்கள் பிறந்த கதை' நுாலிலிருந்து:
பாவ மன்னிப்பு படத்தில் வரும், 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' பாடலுக்கு இசை உருவான விதம் பற்றி, எம்.எஸ்.விஸ்வநாதன் கூறுகிறார்:
காலை நேரம் -
என் அருகில், அண்ணன் டி.கே.ராமமூர்த்தி இருந்தார்.
'தக தகி கிட... தக தகி கிட...' என்று தபேலாவின் ஒலி, மெலிதாக கேட்டுக் கொண்டிருந்தது. பட்டும் படாததுமாக அடிக்கொரு தடவை, வயலின் ஒலி ஆதார சுருதியில், தபேலாவின் தாளக் கட்டுடன் இணைந்து வெளிப்பட்டது.
என் கை விரல்கள், ஆர்மோனியத்தின் மீது குறுக்கும் நெடுக்குமாக விளையாடி, வினோதமான பல மெட்டுக்களை எழுப்பிக் கொண்டிருந்தது. இருப்பினும், என் பார்வை மட்டும் ஆர்மோனியத்தின் மீதிருந்த அந்த பாடல் பிரதி காகிதத்தின் மீதே இருந்தது. 'வந்த நாள் முதல்...' என்று துவங்கும் பாடல் அது.
என் மனம் ஏதேதோ மெட்டுக்களில் அந்த பாட்டை மனனம் செய்து கொண்டிருந்தது. ஒன்றும் பிடிபடவே இல்லை. கை விரல்கள் ஆர்மோனியத்தில் துள்ளி விளையாடுவதை நிறுத்தின. சில நிமிடங்கள் ஒரே அமைதி. அந்த அமைதியிலும் தபேலாவின் தாளக் கட்டு மட்டும் லேசாக ஒலித்துக் கொண்டே இருந்தது.
அந்த தாளக் கட்டுடன் லயித்த என் மனம், எங்கெங்கோ தாவிப் போய் கொண்டிருந்தது. என் சிந்தனையில், கடந்த கால நினைவுகள் மிதந்து வந்தன.
ஒரு நாள் -
என் வீட்டை அடுத்த சாந்தோம் கடற்கரை... 'ஓ' என்ற ஓசையுடன் ஆர்ப்பரித்து, சில மீனவர்கள் உற்சாகமாய் பாடிக் கொண்டிருப்பது கேட்டது. கரையோரம் நடந்து சென்ற என் கால்கள், அங்கேயே நின்று விட்டன. அவர்கள் பாடிய மெட்டு, என்னை வசியப்படுத்தியது. மீனவர்கள் எழுப்பிய அந்த மெட்டை மனனம் செய்தபடியே, என் வீட்டில் வந்து படுத்தேன்.
சில நாட்களுக்கு பின், சென்னை, சினிமா தியேட்டர் ஒன்றில், நானும், ராமமூர்த்தியும் படம் பார்க்க போனோம். படம் ஆரம்பமாவதற்கு முன், சில இசைத்தட்டு பாடல்களை ஒலிபரப்புவர் அல்லவா, அப்படியொரு ஆங்கில பாடலை வைத்தனர். அதைக் கேட்டு அப்படியே துணுக்குற்றேன்.
ஆம்... சில தினங்களுக்கு முன், சாந்தோம் கடற்கரையில் கேட்ட அதே பாட்டு. ஆனால், கொஞ்சம் மாறுதல். நினைவுச் சூழல் ஒரு நிலைக்கு வந்தது. அது நின்ற பிறகு, மீண்டும் என் கண் முன் இருந்த, 'வந்த நாள் முதல்...' பாட்டு தான் தென்பட்டது.
அடுத்து, என் மனம், மீனவர் மெட்டில் இந்த பாட்டை வைத்து பாடியது. என்ன ஆச்சரியம், அந்த பாட்டுக்காகவே பிறந்த மெட்டு போல் அது இருந்தது.
என் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அடுத்த நாள் என் விரல்கள், ஆர்மோனியத்தின், 'ரீடு'களில் ஆனந்த நடனமாடின. கூடவே, ராமமூர்த்தியின் பிடிலும் இணைந்தது; தாளமாக தபேலாவும் சேர்ந்து கொண்டது. ஒரே வேகம் தான்.
'வந்த நாள் முதல், இந்த நாள் வரை வானம் மாறவில்லை...' பாட்டும், இசையும் பிறந்தது.
புலியூர் கேசிகன் எழுதிய, 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
ஆங்கிலேய தளபதி, மேஜர் பிளின்ட் என்பவர், கி.பி.1767ல், பாஞ்சாலங்குறிச்சியை தாக்கியபோது, ஜெகவீர கட்டபொம்மு நாயக்கன் (வீரபாண்டிய கட்டபொம்முவின் தந்தை) கோட்டையையும், ஊரையும் விட்டு விட்டு ஓடி விட்டான்.
அதன்பின், கி.பி.1776ல், மீண்டும் வந்து, டச்சுக்காரர்களின் உதவியால் வாழ்ந்தான். டச்சுக்காரர்கள் உதவிய விஷயம், கி.பி.1783ல், கர்னல் புல்லர்டன் என்பவர் மூலம், அந்த கோட்டை அழிவிலே கண்டெடுத்த, 40 ஆயிரம் டச்சு வராகன்களும், ஒப்பந்தமும் விளக்கின.
புல்லர்டனுக்கு பயந்து, அவன் சிவகிரிக்கு ஓடி ஒளிந்ததும், பின்னர் பணிந்து, பணம் கட்டி, மீண்டும் பாளையக்காரன் ஆனதும், நாடறிந்த வரலாறு.
நடுத்தெரு நாராயணன்