PUBLISHED ON : ஆக 02, 2020

கோடை முடிந்து, இதமான பருவ காலம் துவங்கியுள்ளது. வீட்டில் தோட்டம் அமைக்க உகந்த காலம் இது.
வீட்டுத் தோட்டம் அமைப்பதன் மூலம், மாதம் தோறும் காய்கறிகளுக்கு செலவிடும் தொகையை கணிசமாக குறைக்கலாம். தோட்டம் அமைப்பதால், உடல் உழைப்பும், மன அமைதியும் கிடைக்கும்.
தோட்டம் அமைக்க இடம் இல்லையே என்று எண்ண வேண்டாம். ஜன்னல் ஓரம், பால்கனி போன்ற இடங்களில் காய்கறி மற்றும் கீரை வகைகளை வளர்க்கலாம்.
மொட்டை மாடியில், மண் தொட்டி அல்லது சாக்கு பையில் வளர்க்கலாம். காம்பவுண்டு சுவர்களில் சின்ன சின்ன தொட்டிகளை வைத்து, கீரை வகைகளை வளர்க்க முடியும்.
வீட்டு தோட்ட விவசாய முறை இன்று, உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.
மாடி தோட்டம் அமைக்கும் முன், மாடியில், தண்ணீர் எந்த வாட்டத்தில் போகிறது என்று பார்த்து, அதற்கு எதிர் புறத்தில் தோட்டம் அமைக்க வேண்டும். அப்போது தான், செடிகளில் அதிகப்படியான தண்ணீர் தேங்காமல், வழிந்தோடி விடும்.
தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் செங்கல் அடுக்கி, அதன் மீது கனமான பலகை அல்லது 'சிமென்ட் சிலாப்' வைத்து, தொட்டிகளை வைக்கலாம். இப்படி செய்வதால், மொட்டை மாடியில் தண்ணீர் இறங்கி, 'கான்கிரீட்' பாதிக்குமே என்று கவலைப்பட வேண்டாம்.
பழைய சிமென்ட் சாக்குகளில் கூட, செடிகளை வளர்க்கலாம். சாக்கின் அடி பகுதியில் தேங்காய் மட்டையை போட்டு, அதன் மேல், மக்கிய இலை தழைகளை, ஒரு அடுக்கு போட வேண்டும்.
மீதமுள்ள கொள்ளளவில் பாதியளவுக்கு செம்மண், மணல் கலந்த கலவையை இட்டு, 1 கிலோ தொழு உரம், ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு மற்றும் சுண்ணாம்பு துாள் ஆகியவற்றை இட வேண்டும். தேங்காய் மட்டை போடுவதால், தண்ணீர் கீழே வடியாமல் இருப்பதோடு, மண்ணும் உறுதியாக இருக்கும்.
பழைய டயர்கள், பெயின்ட் டப்பாக்கள், ஆயில் டப்பாக்கள், பழைய பக்கெட்டுகள், பழைய ஷூக்கள், வாட்டர் பாட்டில்கள், கண்ணாடி குடுவைகள் மற்றும் கூடைகள் என, மண்ணை கொட்டி வைக்க தகுந்த அனைத்து பொருட்களிலும் பயிர்களை வளர்க்கலாம்.
புதினா, கொத்தமல்லி, கீரைகள் போன்றவற்றை வெட்டி எடுத்து, அதன் வேரை மண்ணில் ஊன்றி வைத்தாலே, வளர்ந்துவிடும்.
வீட்டு தோட்டத்தை பொறுத்தவரை, கத்தரி, வெண்டைக்காய், மிளகாய், தக்காளி, கொத்தவரை போன்ற செடிகளையும்; பாகல், புடலை, பீர்க்கன் போன்ற கொடி வகைகளையும்; தர்பூசணி, சுரை, பூசணி போன்ற தரையில் படரும் கொடி வகைகளையும் பயிரிடலாம். அத்துடன், கேரட், முள்ளங்கி, நுாக்கோல், காலி பிளவர், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளையும் பயிர் செய்யலாம்.
கோடை காலத்தில், புடலங்காய், தர்பூசணி, பாகற்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி போன்றவற்றையும்; மழை காலத்தில், அவரை, காராமணி, கொத்தவரங்காய் போன்றவற்றையும்; குளிர் காலத்தில், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, கேரட், குடமிளகாய் போன்றவற்றுடன், அனைத்து கீரை வகைகளையும் வளர்க்கலாம்.
தக்காளி செடிக்கு நிறைய வெயில் தேவை. மழை காலத்தை விட, வெயில் காலத்தில் நிறைய காய்க்கும். தக்காளியில் நோய் பிரச்னை அவ்வளவாக வராது.
எத்தனை நாளுக்கு ஒருமுறை நீர் விடுவது?
நாம் செடிகளை எதில் வளர்க்கிறோம் என்பதை பொறுத்து, தண்ணீர் ஊற்றலாம். வெறும் தரையில் எனில், நன்றாக வளர்ந்த செடிகளுக்கு, மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் விட்டால் போதும்.
செடிகள் வாடி, வெளுத்து போனது போலிருந்தால், சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் குறைவாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
இதற்கு, 10 முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து, 10 எலுமிச்சம் பழங்களை பிழிந்து, கூடவே, 250 கிராம் வெல்லத்தையும் சேர்த்து, 15 நாட்களுக்கு மூடி வைத்து விடவேண்டும். இதுதான் முட்டை கரைசல். இதை செடிகளுக்கு தெளிக்கலாம்.
வீட்டு தோட்டத்தில், காய்கறிகள் மட்டுமல்லாமல், துளசி, கற்பூரவல்லி, சோற்றுக்கற்றாழை, கீழாநெல்லி போன்ற மூலிகை செடிகளையும் வளர்ப்பதன் மூலம், மருத்துவ செலவையும் கணிசமாக குறைக்கலாம்.
நாலு நாள் வெளியூர் போனால், செடிகள் வாடி போய் விடுமே என, கவலைப்பட தேவையில்லை. அந்த கவலையை தேங்காய் மட்டை பார்த்து கொள்ளும். ஒரு வாரத்துக்கு தேவையான நீரை, அது எப்பவும் கிரகித்து வைத்துக் கொள்ளும்.
வீட்டில் நாம் வளர்த்து வரும் பயிர்களுக்கும், கோடை வெயிலின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில், மாடி தோட்ட பயிர்களுக்கான கோடைகால பராமரிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
வெயில் சூட்டின் காரணமாக, தொட்டியில் உள்ள நீர் வேகமாக ஆவியாகிவிடும். மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் வேலையை முதலில் செய்ய வேண்டும். 25 முதல் 50 சதவீதம் வரை, நிழல் கொடுக்கும் தன்மை கொண்ட வலை பந்தல் அமைக்க வேண்டும்.
வலை பந்தலுக்கு பதிலாக, புடலை, பாகல், அவரை போன்ற கொடி வகைகளை வளர்த்து, மூங்கில் குச்சிகளால் பந்தல் அமைத்து, அதன் மீது படர விடலாம். இது கொடுக்கும் நிழலே தொட்டி செடிகளுக்கு போதுமானது. கூடவே, கொடி வகை காய்களும் நமக்கு கிடைக்கும்.
வகை வகையான மல்லிகை கொடிகளை படர விட்டால், பூக்களும் கிடைக்கும்.
குறைந்த இடம் உள்ளவர்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளில் உள்ளோருக்கு ஏற்றது, உரித்தோட்டம். வீடுகளில், பால்கனி, வராண்டா, ஜன்னல் ஓரங்கள் என, சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் தொட்டிகளை தொங்க விட்டு செடிகளை வளர்க்கும் முறையே, உரித்தோட்டம்.
நர்சரிகளில் மாட்டு சாண உரம், மண் புழு உரம் கிடைக்கும். நன்கு மக்க வைக்கப்பட்ட தேங்காய் நார் கலவை கலந்த உரமும் நல்லது.
மண் இறுக்கமின்றி இருப்பதற்கு, மண்ணுடன் மாட்டு சாண உரம் மற்றும் நன்கு மக்கிய தேங்காய் நார் கலவை சேர்த்து கலக்க வேண்டும்.
நர்சரிகளில் கிடைக்கும், 'பஞ்சகவ்யம்' என்ற பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி, ௧ லி., தண்ணீருக்கு, 100 மி.லி., என்ற விகிதத்தில் கலந்து, காய்கறி மற்றும் கீரை செடிகள் மீது நான்கு நாட்களுக்கு ஒருமுறை, 'ஸ்ப்ரே' செய்து வந்தால், பூச்சிகளின் தாக்குதலை தடுக்கலாம்.
வாடா மல்லி!
நம் வீட்டு தோட்டத்திலோ, வாசற்புறத்திலோ வாடாமல்லி தாவரம் வளர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இப்பூவை, டீ கஷாயம் போல் போட்டு குடித்தால், இருமல் நோய் தீர்ந்து போகும். இதன் இலைகள், மன அழுத்தத்தை போக்கவல்லது. வாடாமல்லிக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டு.
வி. மவுரியா