
தோழி!
தொலைந்து போய் இருப்பேன்
தோழி உன் தோழமை மட்டும்
எனக்கு கிடைக்காதிருந்தால்!
விட்டில் பூச்சியாக விளக்கையே
சுற்றிக் கொண்டிருந்த எனக்கு
விடியலை காட்டியதே உன்
உண்மையான நட்பு தானே!
பாலைவன பயணமாகவே
இருந்த என் வாழ்க்கையின்
பாதையில் நிழல் தரும்
சோலையாக நீ நின்று
இளைப்பாற வைத்தாய்!
என்றுமே தோல்வி தான்
எனக்கு நிரந்தர முகவரி
என்று தான் நினைத்திருந்தேன்...
ஆனால், இன்று உன்னால்
வெற்றி கூட என் விலாசம்
கேட்டு வருகிறதே!
தோல்வியை கண்டு துவண்ட
நேரத்திலெல்லாம் தோழியாய்
நின்று தோள் கொடுத்தாய்
இன்று, அந்த வானம் கூட
எனக்கு வசப்படும் துாரத்தில்!
அன்று, முயற்சியில்லாமல் முடங்கிக்
கிடந்தவனை தட்டியெழுப்பி
வெற்றி காண வைத்தது
உன் ஊக்குவிப்பும் உரிமையான
நட்பும் தான்!
என் தோல்விகளுக்காக அதிகம்
வருத்தப்பட்டதும் நீதான்...
வெற்றியை கண்டு சந்தோஷப்படுவதும்
நீ தானே தோழி!
நண்பனின் துணையிருந்தால்
சென்ற இடமெல்லாம் வெற்றி
வாகை சூடி வரலாம் என்றனர்...
ஆனால், இங்கே தோழி
உன் நட்பு, சாமானியனையும்
சாதனை படைக்க வைத்து
விட்டது அல்லவா!
நல்ல நட்புக்கு என்றுமே
காதலுக்கும், காமத்துக்கும்
இடமில்லை என்பதை நிரூபித்தாய்
இன்னொரு பிறவி என்றிருந்தால்
அதிலேயும் நீயே என் தோழியாய்
வந்து விடு - நானும் உன்
துணையோடு வென்றிடுவேன்
இந்த ஜகத்தினையே!
எஸ்.கே.ராமசாமி, சென்னை.