
டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர், சர்.ராபர்ட் பில். இவர், சிறு வயதில் மெலிந்த உடலுடன் இருந்தார்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, முரட்டு சிறுவன் ஒருவன், அவரை வம்புக்கிழுத்து அடித்துக் கொண்டிருந்தான். அவனை திருப்பி அடிக்க சக்தியின்றி, அடியை வாங்கி வந்தார், ராபர்ட் பில்.
அருகில், அக்காட்சியை கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், முரட்டு சிறுவனை நெருங்கி, 'இன்னும் இவனை எத்தனை அடிகள் அடிப்பதாக எண்ணியிருக்கிறாய்...' என்று கேட்டான்.
'ஏன், எதற்காக கேட்கிறாய்...' என்று கேட்டான், முரட்டு சிறுவன்.
'இனி, மேற்கொண்டு இவனுக்கு நீ கொடுக்க நினைக்கிற அடிகளை எனக்கு கொடுத்து விடு. நான் வாங்கிக் கொள்கிறேன்...' என்றான், அச்சிறுவன்.
அந்த சிறுவன் தான், பிற்காலத்தில், இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற கவிஞனாக திகழ்ந்த, பைரன்.
இ.ஆர்.க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தத்துவஞானி வால்டேர், மரணப் படுக்கையில் கிடந்தபோது, அவர் மீது பற்று கொண்டவர்கள், தினமும் அவரை வந்து பார்த்துச் சென்றனர்.
ஒருநாள், பாதிரியார் ஒருவர் வந்து, 'உங்கள் பாவங்களையெல்லாம் கூறி, வருந்தி, பாவ மன்னிப்பை பெறுங்கள்...' என்றார்.
சிரித்துக்கொண்டே, 'உங்களை இங்கு யார் அனுப்பியது...' என்று வினவினார், வால்டேர்.
'நான் கடவுளின் பிரதிநிதி. கடவுள் தான் என்னை அனுப்பி வைத்தார்...' என்றார், பாதிரியார்.
'அன்புக்கினியவரே... நான் வால்டேராக உருவாகி, பின் வால்டேராகவே திரும்பி செல்கிறேன். உங்கள் நற்சாட்சி பத்திரங்கள் எனக்கு தேவையில்லை. கடவுளிடம் பாவமன்னிப்பு பெறவே விரும்புகிறேன். உங்களிடம் பெற விரும்பவில்லை...' என்று கூறி அனுப்பி விட்டார், வால்டேர்.
'சுவையான சம்பவங்கள்' நுாலிலிருந்து:
ஒருமுறை, நியூயார்க் வீதியில், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் நடந்து சென்றார். அப்போது, அவரை யாருமே கண்டுகொள்ளாததை, விசாரிக்காததை பார்த்த ஒருவர், வேகமாக அவரிடம் ஓடி, 'ஐயா, தாங்கள் எவ்வளவு பெரிய மேதை. தங்களை யாருமே கண்டு கொள்ளவில்லையே... ஒரு நடிகையாக இருந்தால், இந்த வீதியில் அவளை எவ்வளவு பேர் சூழ்ந்து கொண்டிருப்பர்...' என்று, குறைப்பட்டுக் கொண்டார்.
'மக்களுக்கு ரசிக்க என்னிடம் என்ன இருக்கிறது...' என, சிரித்துக் கொண்டே சொன்னார், ஐன்ஸ்டின்.
டாக்டர் மெ.ஞானசேகர் எழுதிய, 'சிகரம் தொட்டவர்கள்' நுாலிலிருந்து:
சமையல் அறையில், எடுபிடி வேலை செய்து வந்தவர், ஹெரால்டு ராபினஸ். பின்பு, நியூயார்க் நகரில் ஒரு ஓட்டலில் சர்வராகவும் பணிபுரிந்தார். இந்த வேலைகள், ஒரு காலகட்டத்தில் அவருக்கு சலிப்பை தந்தன. பல்வேறு நாவல்களை படிக்கும் பழக்கம் இருந்த அவருக்கு, தான் ஏன் நாவல் எழுதக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.
சிறு வயதிலேயே படிப்பையும், தன்னை வளர்த்த பெற்றோரையும் விட்டு, ஓட்டலுக்கு வந்து பிழைத்த அவருக்கு தான், இந்த சிந்தனை உதித்தது. தன் எண்ணத்தை செயலில் காட்ட விரும்பினார்.
நாவல்கள் எழுத ஆரம்பித்தவர், 40 ஆண்டுகள் எழுதினார். எழுத்துலகில் கொடி கட்டி பறந்தார். அவரது நாவல்கள், அவர் இறப்பதற்கு முன்பே, 70 கோடி பிரதிகள் விற்பனையானது.
கடந்த, 1997ல் இறந்த இவர், இறுதி, 13 ஆண்டுகள் உடல்நிலை காரணமாக எழுதவில்லை. ஆயினும், 70 கோடி பிரதிகள் விற்றதால், அவர் அடைந்த புகழும், வாழ்வும் பிரமிக்கத்தக்கது.
நடுத்தெரு நாராயணன்

