PUBLISHED ON : அக் 25, 2020

முன்கதை சுருக்கம்: புவனாவை காதலிப்பது குறித்து, அத்தை மகள் ஜோதியிடம் கூற, அதை கேட்கும் கார்த்திகேயனின் அப்பா, கொதித்து எழுகிறார். இதையடுத்து ஜோதி, மாமா கார்த்திகேயனிடம் தான் பேசி பார்ப்பதாக சொல்ல, அவளது அம்மா செல்லாயி சத்தம் போட, அவளை முறைக்கிறாள் -
ஜோதியின் அந்த திடீர் ரவுத்திரத்தை கண்டு, அம்மா செல்லாயி திகைத்து போனாள். இதுவரை தன் மகளை, அந்த மாதிரி அவள் பார்த்ததே இல்லை.
அப்பன் இல்லாத பெண், விபரம் தெரியாத பெண் என, தன் தம்பியின் நிழலில் பொத்தி பொத்தி வளர்த்தவள். தம்பி மகனுக்கே மணமுடித்து கொடுத்து விட்டால், நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தவள். மகள் கண் எதிரிலேயே இருப்பாள். பார்த்துக் கொண்டே உயிர் விடலாம் என்று நினைத்தவள்.
அவை அனைத்திலும் மண் விழப் போவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. குமுறி குமுறி வந்தது. துக்கம் ஆத்திரமாக மாறியது. அந்த ஆத்திரம் கோபமாயிற்று. அந்த கோபத்தில் தான் வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொண்டாள்.
ஆனால், மகளே தனக்கு எதிராக மாறுவதை கண்டு அதிர்ந்து போய் நின்றாள்.
''நீ வெளிய போம்மா. இது என் வாழ்க்கை. நான் பார்த்துக்கறேன்.''
''என்னையாடி வெளிய போகச் சொல்ற?''
''அத்தை, மாமாவை கூடத்தான் சொன்னேன். இது, அவங்க வீடு. அவங்க போடுற சோறு. அவங்க வாங்கி தந்த துணிமணி. அவங்க இல்லாம போனா, நாம ரெண்டு பேரும் அனாதைங்க. அவங்க இடம் கொடுக்காட்டி போனா, நிக்க நெழல் கூட இல்லாதவங்க. அப்படிப்பட்ட அவங்களையே நான் சொல்லும்போது, நீ என்னம்மா?''
அதற்கு மேல் ஒன்றும் பேசாமல், தம்பி மற்றும் தம்பி மனைவியுடன் வெளியேறினாள், செல்லாயி. அவர்களை அனுப்பி, கதவை மூடி தாழிட்டவளை, மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தான், கார்த்திகேயன்.
'அடங்கி ஒடுங்கி பூனை மாதிரி இருந்தவளா, இப்போது புலியாக பாய்கிறாள்...'
அவன் அருகில் வந்தவள், அமைதியாக அவனை ஏறிட்டாள்.
''உக்காருங்க மாமா.''
உட்கார்ந்தான்.
''மாமா... நான் சொல்றத கேட்பீங்களா?''
''சொல்லு, ஜோதி.''
''பெரிய மாமா சொல்றதும் நியாயம் தான். ஊர் பெரியவரு. ஜாதி தலைவரு. அவரு மகனே ஜாதி விட்டு ஜாதி கட்டினா, ஊர் ஜனங்க மதிக்க மாட்டாங்க தான்.''
''அதுக்காக என்னை என்ன செய்யச் சொல்ற ஜோதி... அந்த பொண்ணை கைவிட்டு உன்னை கட்டிக்க சொல்றியா?''
''ஏன் மாமா, இப்படி அவசரப்பட்டு பேசறீங்க... வாழ்க்கையில அவசரம் கூடாது மாமா. அதுவும் இந்த விஷயத்துல அவசரப்பட்டா, காரியம் கெட்டுப் போகும். உங்களுக்கு காரியம் முக்கியமா, வீரியம் முக்கியமா?''
''நீயா பேசற ஜோதி?''
''நானே தான் மாமா... எதையும் விட்டுப் பிடிக்க கத்துக்கணும். எடுத்தேன், கவிழ்த்தேன்னு முடிவு எடுக்கக் கூடாது.''
''ஜோதி...''
''கொஞ்சம் அமைதியா இருங்க. நிதானமா இருங்க. கிளம்பி சென்னைக்கு போங்க. மாமாவையும், அத்தையையும் கொஞ்சம் கொஞ்சமா பேசி பேசி தான் கரைக்கணும். கரைப்பார் கரைச்சா கல்லும் கரையும்பாங்க. பொறுப்பை என்கிட்ட விட்டுட்டு நீங்க கிளம்புங்க...
''ஒரு ரெண்டு மாச அவகாசம் கொடுங்க. மூணாவது மாசம் உங்க கல்யாணம் நிச்சயமாகும். நீங்க ஆசைப்படுற அந்த ஐயிருவூட்டுப் பொண்ணையே கட்டிக்குவீங்க. உங்கப்பா அம்மாவே முன்ன நின்னு கட்டி வைப்பாங்க.''
''நிஜமாவா சொல்ற?''
''எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா.''
''யார் மேல?''
''என் மேல...''
ஒரு வினாடி யோசித்து பின் தலையாட்டினான்.
''சரி ஜோதி... நீ சொல்றதை நான் அப்படியே கேட்குறேன்.''
''நன்றி மாமா. அனாவசியமா உங்க அம்மாகிட்டயோ, அப்பாகிட்டயோ பேசாம வாயை மூடிக்கிட்டு, இன்னிக்கு ராத்திரி துாங்குங்க. நாளைக்கு காலையில கிளம்பிடுங்க.''
''சரி, ஜோதி.''
ஜோதி சொன்ன மாதிரியே, அன்றிரவு சாப்பிட்டு படுத்தான். துாக்கம் வர மறுத்தது. புவனாவின் உருவம் கண்ணெதிரில் நின்றது.
'இந்த போரட்டத்தில் நாம ஜெயிப்பமா...' என்று கேட்டது.
'நிச்சயம் ஜெயிப்போம். ஜெயித்தே ஆகவேண்டும், புவன்...' என, சொல்லிக் கொண்டான்.
'இது ஜோதியால் முடியக்கூடிய காரியமா... சின்ன பெண்; படிக்காதவள்; உலகம் தெரியாதவள். அவள் சொல்லியா அப்பா கேட்பார்...
'தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பவர். அம்மா சொன்ன மாதிரி நாலாவது காலை ஒடித்து விடக்கூடியவர். முரடர்; மூர்க்கமானவர்; அடியாட்கள் வைத்திருப்பவர். சொன்ன மாதிரியே, புவனாவை ஏதாவது செய்யச் சொல்லி தன் ஆட்களை ஏவி விட்டால் என்ன செய்வது?
'ஆனால், புவனாவை எப்படி கண்டுபிடிப்பார், அவர். அத்தனை பெரிய சென்னை மாநகரில் ஒரு சின்ன கோவிலின் குருக்களை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்... பழநி, திருவண்ணாமலை, திருத்தணி என்றால் பிரசித்தி பெற்ற கோவில்கள்.
'மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் என்றால் கூட, கண்டுபிடித்து விடமுடியும். ஆனால், அதே மயிலாப்பூரில் உள்ளடங்கி, அதிகம் வெளியில் தெரியாத, கூட்டம் நிறைய வராத, அமைதியான அந்த கோவிலின் குருக்களை எப்படி தேடி கண்டுபிடிப்பார், அப்பா... அது, சாத்தியமான காரியமா?
'ஆகவே, அந்த பயம் வேண்டாம். புவனாவை கண்டுபிடிப்பது என்பது, அத்தனை சுலபமல்ல. கூடுமான வரை வெளியிடங்களில் புவனாவை சந்திப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
'யாரையாவது அனுப்பி, பின் தொடரச் செய்து, புவனா யார் என்பதை அறிந்துகொள்ள முயற்சிப்பார், அப்பா. பல வழிகளிலும் முயற்சி செய்வார். ஆகவே, நானும் எல்லா வழிகளையும் சிந்தித்து, ஜாக்கிரதையை கையாள வேண்டும்...' என, யோசித்தவாறே துாங்கிப் போனான்.
காலையில் எழுந்ததும், காபி மட்டும் குடித்து கிளம்பினான். அம்மா, ஏதோ பேச வாயெடுத்து, அப்பாவை கண்டதும் நிறுத்திக் கொண்டாள்.
''நான் சொன்னதை கேக்கப் போறானா இல்லையான்னு கேளு, பூவாயி?''
அதற்குள் எங்கிருந்தோ வந்த ஜோதி, ''மாமா... நான் தான் சொன்னேனில்ல, அவரை விடுங்க... நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்.''
''குருவி தலையில் பனங்காயை துாக்கி வைக்கச் சொல்ற...'' என்று உறுமினார்.
அதை காதில் போட்டுக் கொள்ளாத ஜோதி, ''மாமா... நீங்க கிளம்புங்க,'' என்று, கார்த்திகேயனை அவசரப்படுத்தினாள்.
தன், 'லேப் டாப்' பையை முதுகில் போட்டுக்கொண்டு, கையில் ஒரு சின்ன பையோடு கிளம்பி விட்டான்.
''வரேம்மா... வரேன் ஜோதி.''
''திரும்ப எப்ப வருவய்யா?'' தாய் மனசு விம்மியது.
''வரேம்மா... போன் பண்ணி தெரியப்படுத்தறேன்,'' என்றவன், வெறுமனே அப்பாவை பார்த்து தலையசைத்து, காரில் அமர்ந்து கிளப்பினான்.
அது ஒரு சிறிய ஊர் என்பதால், விஷயம் வெகு விரைவாக பரவியது. கண், காது, மூக்கு வைத்து சொல்லப்பட்டது.
'நம்ம ஐயா மவன், ஐயிரு பொண்ணை கட்டிக்கப் போறாராமில்ல?'
'போராராம் இல்ல... கட்டிக்கிட்டாராம்...'
'யாரு சொன்னாக?'
'நேத்து, அவங்க வூட்ல அப்படி ஒரு தகறாராம். வேலைக்கு போன படியாளுங்க சொன்னாங்க... நம்ம ராக்கம்மா, பாவாயி, முத்தம்மா, நல்லம்மா அம்புட்டு பேரும் கதை கதையா சொல்றாக...'
'அது எப்படி...' என்று உறுமினான், இளைஞன் ஒருவன்.
'எங்க அக்கா வேத்து ஜாதி ஆளை கட்ட இருந்திச்சில்ல... அதை ஓட ஓட அவரு ஆளுங்க வெட்டிப் போட்டாங்கல்ல... இப்ப நாம பாத்துக்கிட்டா இருப்போம்... நம்ம கை பூ பறிச்சுக்கிட்டா இருக்கும்?'
'அதானே...' என்றான் மற்றொருவன்.
'நாமளும் அந்த ஜாதில வந்தவங்கதானே... அவரு ஒடம்புல ஓடுற அதே ரத்தம் தானே, நம்ம ஒடம்புலயும் ஓடுது...'
'நமக்கும் அரிவா துாக்க தெரியும்... இந்த விஷயத்தை நாம சும்மா விடக்கூடாது...'
'ஐயாவ நிக்க வச்சு ரோய ரோய கேக்கணும்ன்னு தவிச்சுக்கிட்டிருக்கேன். இதுதான் சரியான சந்தர்ப்பம், நாக்கப் புடுங்கிக்கிட்டு சாவணும் அந்த மனுஷன்...'
இவை அனைத்தையும் ஒன்று விடாமல், ஜோதியிடம் வந்து ஒப்பித்தாள், சாலாட்சி என்ற பெண்.
''ஊர் கூடி மீட்டிங் போடுறாங்க. பெரிய ஐயாவை மானபங்கப்படுத்த முடிவு செய்யுறாங்க,'' என்றாள்.
கொதித்து போனாள், ஜோதி.
'பெரிய மாமாவை மானபங்கப் படுத்துவதா... மனிதர்களா இவர்கள்... எத்தனை உதவிகள் செய்திருக்கிறார். எல்லார் வீட்டு திருமணங்களுக்கும் தாலி, புடவை, வேட்டி. வெள்ளம், மழை வந்தால் கீழண்ட வீட்டை திறந்து விடுவாரே...
'அண்டா அண்டாவாக சோறு வடிக்கச் செய்வாரே... இழவு வீடுகளுக்கு பணம் கொடுப்பாரே... பிரசவத்திற்கு, குழந்தை பிறப்பிற்கென்று... எத்தனை எத்தனை... ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை, தனி மனிதனாக செய்வாரே... அவரையா... அவருக்கா...' தாங்க முடியவில்லை அவளால்.
''எங்கூடவா சாலாட்சி...'' என்று அப்பெண்ணின் கைப்பற்றி இழுத்து, வேகமாக வீட்டை விட்டு வெளியேறினாள், ஜோதி.
— தொடரும்
இந்துமதி

