
கற்றுக்கொள்!
மரத்திலிருந்து
உதிர்ந்து மண்ணில்
விழுந்தாலும்
மாறா புன்னகை
கொள்ளும் தன்மையை
மலரிடம் கற்றுக்கொள்!
இலையுதிர் காலத்திற்காக
வருத்தப்படாமல்
மீண்டும் வசந்தத்திற்காக
தன்னை புதுப்பித்து
துளிர்க்கும் தன்மையை
மரத்திடம் கற்றுக்கொள்!
புதைத்தாலும்
மடிந்து விடாமல் விருட்சமாய்
வளரும் விடாமுயற்சியை
விதையிடம் கற்றுக்கொள்!
முட்களையும் கூடாக்கி
வாழும் மன வலிமையை
பறவைகளிடம் கற்றுக்கொள்!
பருக்கை சோறென்றாலும்
பகிர்ந்துண்ணும்
சமத்துவத்தை, காக்கையிடம்
கற்றுக்கொள்!
வேப்ப மரத்தில் கட்டினாலும்
கசக்காமல் இனிக்கும்
தேன் கூடையை தரும்
தனித்துவத்தை தேனியிடம்
கற்றுக்கொள்!
கடும் பசியென்றாலும்
இரையுண்ண வரிசையில்
செல்லும் ஒழுங்கை
எறும்புகளிடம் கற்றுக்கொள்!
மலையில் அருவியாய்
தரையில் நதியாய்
மாறிக்கொள்ளும்
சமயோஜிதத்தை தண்ணீரிடம்
கற்றுக்கொள்!
மாலையில் அஸ்தமித்தாலும்
விடியலில் ஒளியாய்
உதயமாகும் புத்துணர்ச்சியை
கதிரவனிடம் கற்றுக்கொள்!
மேடு - பள்ளம், உயர்வு - தாழ்வு
என்று பேதம் பாராமல்
எல்லாருக்கும்
சமமாய் பொழியும்
மகோன்னத மனதை
மழையிடம் கற்றுக்கொள்!
கு. வைரச்சந்திரன், திருச்சி.

