
'சாதனை படைத்த திரைப்படங்கள்' நுாலிலிருந்து:
தமிழின் முதல் பேசும் படம், காளிதாஸ். அக்., 31, 1931, தீபாவளி திருநாளில் இருந்து பேசத் துவங்கியது.
தியாகராஜ பாகவதர் நடித்த, 42 பாடல்கள் கொண்ட, தமிழின் முதல், 'சூப்பர் டூப்பர் ஹிட்' படமான, ஹரிதாஸ், 1944ல்- தீபாவளிக்கு வெளியாகி, மூன்று தீபாவளிகளை கொண்டாடியது.
சிவாஜியின் அறிமுகப் படமான, பராசக்தி, சவுகார் ஜானகி கதாநயகியாக நடித்த, வளையாபதி, 1952- தீபாவளி அன்று வெளியானது.
கடந்த, 1960ல் தீபாவளி அன்று வெளியான ஆறு படங்களில், வெற்றியை கைப்பற்றியது,
எம்.ஜி.ஆரின், மன்னாதிமன்னன் ஜெமினிகணேசன் நடித்த, கைராசி இரண்டு படங்கள் மட்டுமே.
கடந்த, 1963ல் தீபாவளி அன்று வெளியான, கற்பகம் படம், கே.ஆர்.விஜயாவுக்கு, நிலையான இடத்தை பிடித்துக் கொடுத்தது.
கடந்த, 1969ம் ஆண்டு, தீபாவளி அன்று, எம்.ஜி.ஆர்., நடித்த, நம்நாடு; சிவாஜியின், சிவந்த மண் படமும் வெளியாகி, ரசிகர்களுக்கு விருந்தளித்தது.
கடந்த, 1970ல், தீபாவளி அன்று, சிவாஜி நடித்த, சொர்க்கம் மற்றும் எங்கிருந்தோ வந்தாள் படங்கள் வெளியாயின. இவைகளுக்கு நடுவே பாலசந்தரின், காவியத்தலைவி படமும் வெளியாகி, பெண்களை கவர்ந்தது.
கே.ஆர்.விஜயாவின், 100வது படம், நத்தையில் முத்து, ஜெயலலிதாவின், பாக்தாத் பேரழகி, சிவாஜியின், கவுரவம் உட்பட, ஐந்து படங்கள், 1973ம் ஆண்டு, தீபாவளி அன்று வெளியானது.
அண்ணன் ஒரு கோயில், ஆறுபுஷ்பங்கள், ஆட்டுக்கார அலமேலு, பெண்ணை சொல்லி குற்றமில்லை உட்பட ஆறு படங்கள், 1977ல் வெளியாகின. இதில், ஆட்டுக்கார அலமேலு படம் சக்கை போடு போட்டது.
கடந்த, 1987ல் தீபாவளிக்கு வந்த, 12 படங்களில் மணிரத்னம், கமல், பாலகுமாரன் கூட்டணியில் உருவான, நாயகன் வெற்றிப் படமாக அமைந்தது.
முத்து, குருதிப்புனல், ஆயுத பூஜை, மக்கள் ஆட்சி, ரகசிய போலீஸ் மற்றும் நீலக்குயில் ஆகிய ஆறு படங்கள், 1995ல் வெளியானது. இதில், முத்து படம் வசூலை குவித்தது.
'நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்' நுாலிலிருந்து:
பீகார் தலைநகர், பாட்னா காலேஜூயேட் பள்ளியில், ஜெயப்பிரகாஷ் நாராயணன் படிக்கும் போது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர், ஓயிட்மோர் சாஹிப் என்ற ஆங்கிலேயர். அவர், ஒருமுறை, 'தீபாவளி அன்று, தேர்வு நடக்கும்...' என்று, அறிவித்தார்.
மற்ற மாணவர்கள் முணு முணுத்தபடியே, போய் தேர்வு எழுதினர். ஆனால், ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது ஐந்து நண்பர்கள், அன்று பள்ளி செல்லவில்லை; மறுநாள் சென்றனர்.
'நீங்கள் ஆறு பேரும் நேற்று ஏன் தேர்வுக்கு வரவில்லை...' என்று, கோபத்தோடு சத்தம் போட்டார்.
அவர்களில், ஐவர் பயந்து நடுங்கினர். ஆனால், ஜெயபிரகாஷ் அஞ்சாமல், 'நேற்று பண்டிகை; பண்டிகை நாளில் தேர்வு வைத்தது தவறு. அதனால், வரவில்லை...' என்றார்.
அதைக்கேட்டு, சினத்தோடு, 'ஓகோ, அப்படியா... உங்களைத் தண்டிக்காமல் விடுவதில்லை; நீட்டுங்கள் கையை...' என்றார்.
ஐந்து மாணவர்கள் பயந்து, ஒதுங்கிக் கொள்ள, பயப்படாமல் முன் வந்து கை நீட்டினார், ஜெயபிரகாஷ் நாராயணன்.
கோபம் தீர, பிரம்பால் அடித்து தள்ளினார், தலைமை ஆசிரியர்.
பல்லைக் கடித்தபடி அடியை வாங்கிக் கொண்டார், மாணவர் ஜெயபிரகாஷ்.
கை வீங்கி, வலி விண் விண் என்று தெறித்தது. உண்மையை சொல்லியும், தமக்கு அடி கிடைத்ததே என்று எண்ணி வருந்தினார்.
பின்னாளில், பள்ளி இறுதித் தேர்வில், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, அதே தலைமை ஆசிரியரிடம் பாராட்டுக்களைப் பெற்றார். 'மெரிட் ஸ்காலர்ஷிப்'பும் கிடைத்து, மேற்படிப்பு படிக்கச் சென்றார்.
இலங்கை எழுத்தாளர், மானா மக்கீன் தொகுத்தளித்த, 'இரு சமூகமும் இரு கண்களும்' நுாலிலிருந்து:
மொகலாய மன்னன் ஜஹாங்கீரால் தீபாவளி, தசரா, சிவராத்திரி ஆகிய மூன்றும் சிறப்பாக கொண்டாடப்பட்டன. இவரது அரசவையில், 48 சமஸ்கிருத வித்வான்கள் அலங்கரித்தனர்.
மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்ததும், நடைமுறையில் இருந்த, 80 வரிகளை, அவர் நீக்கினார். அவைகளில், கங்கையில் நீராடும் ஒவ்வொரு யாத்திரிகரிடமிருந்து ஆறே கால் ரூபாய் வரியாக வசூலிப்பதையும், தீபாவளியின் போது ஏற்றப்படும் தீப அலங்காரங்களுக்கு விதிக்கப்பட்ட வரியையும் நீக்கினார்.
நடுத்தெரு நாராயணன்