/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
மோட்சம் கிடைக்க மதுராவுக்கு செல்வோம்!
/
மோட்சம் கிடைக்க மதுராவுக்கு செல்வோம்!
PUBLISHED ON : நவ 08, 2020

மதுராவை, கிருஷ்ணஜென்ம பூமி என்றே அழைக்கின்றனர். பகவான் ஸ்ரீகிருஷ்ணபிரான் பிறந்து, வளர்ந்து, ஆட்சி புரிந்து வாழ்ந்த இடம், இது.
ஸ்ரீகிருஷ்ணன் பிறந்ததால் மட்டுமே, முக்கியத்துவம் பெற்ற இடமல்ல மதுரா. அதற்கும் முன்பே, புராண காலத்துக்கும் பழமையான நகரமான இது, நான்கு யுகங்களாகவே புகழ்பெற்றது. 12 புராணங்களிலும் இதுபற்றி எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீராமன் காலத்திலும், அவரது கடைசி தம்பியான சத்ருக்னனின் காலத்திலும் தலைநகராக இருந்தது.
மது எனும் பழங்குடி மன்னன், மதுபூர் என்ற பெயரில், மதுராவை உருவாக்கி ஆண்டு வந்தான்.
கி.பி., 1150ல், மதுராவில் மகாராஜா விஜய்பால் தேவாவின் ஆட்சியில், ஜட்ஜா எனும் தனி மனிதன், இதே இடத்தில் கிருஷ்ணன் பெயரிலேயே ஒரு கோவிலை கட்டினான். 16ம் நுாற்றாண்டில், மதுராவின் மீது படையெடுத்த, லோடி வம்சத்து மன்னன் சிக்கந்தர் லோடியால், அக்கோவில் இடிக்கப்பட்டது.
இதற்கு, 125 ஆண்டுகளுக்கு பின், ஒர்ச்சாவின் சிற்றரசன், பெரிய கோட்டை மதில் சுவர்களுடன், 'கேசவ தேவா' என்ற பெயரில், ஸ்ரீகிருஷ்ணன் கோவிலை மிகப்பெரியதாக கட்டினான். 250 அடி உயரமிருந்த அந்த கோவிலில், தீபாவளி அன்று ஏற்றப்படும் தீபங்கள், ஆக்ரா வரை ஒளிவீசியுள்ளன.
முகலாய மன்னன் அவுரங்கசீப் ஆட்சியில், அக்கோவிலும் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. கி.பி., 1803ல் மதுரா, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தவுடன், கோவிலின் நிலம், ஏலம் விடப்பட்டது.
கி.பி., 1815ல், இந்த நிலத்தை ஏலத்தில் எடுத்த வாரணாசியின் ராஜா பட்னிமால், 'இங்கு மீண்டும் கிருஷ்ணன் கோவிலை கட்ட வேண்டும்...' என முடிவெடுத்தார். ஆனால், அவரால் அது முடியாமல் போனது. எனினும், நிலம், அவரது குடும்ப வாரிசுகளில் ஒருவரான ராய் கிருஷ்ணதாசிடம் இருந்தது.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனரான மதன்மோகன் மாளவியா, அந்த நிலத்தை, ஜுகல் கிஷோர் பிர்லா மற்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' கோயங்காவிடம் பெற்ற நிதி உதவியால், 13 ஆயிரத்து 400 ரூபாய்க்கு, ராய் கிருஷ்ணதாசிடமிருந்து விலைக்கு வாங்கி, ஸ்ரீகிருஷ்ணனுக்கு கோவில் எழுப்ப முனைந்தார். ஆனால், அதற்கு முன்பாகவே அவர் இறந்து விட்டார்.
பிப்., 21, 1951ல், கோவில் பணிக்காக ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமி டிரஸ்ட் ஒன்றை நிறுவினார், ஜுகல் கிஷோர் பிர்லா. அக்., 15, 1953ல் துவக்கப்பட்ட இந்த கோவில் பணி, பிப்., 12, 1982ல் முடிவடைந்தது.
மனித ஜென்மம் மோட்சம் கிடைக்க, குழந்தை கிருஷ்ணரை தரிசனம் செய்ய வேண்டிய இடங்களில் முக்கியமானது, மதுரா.
லஹிரி மகாசயா