
டி.என்.இமாஜான் எழுதிய, 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில், மே மாதத்தில் வெயில், அனல் பறந்து கொண்டிருந்தது. சாலையோரத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது; ஆனால், பூட்டிக் கிடந்தது.
அப்போது, பேருந்து ஒன்று அந்தப் பக்கம் வந்து நின்றது. அதிலிருந்த பயணியர், குடிப்பதற்கு நீர் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தனர்.
அச்சமயம், அங்கு வந்த ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், தன் காரை நிறுத்த சொன்னார். காரிலிருந்து இறங்கியவர், டிரைவரிடம், தண்ணீர் பந்தலின் பூட்டை உடைக்க சொன்னார். உள்ளே சென்று பார்த்தார். அங்கு, தண்ணீர் இருந்தது.
உடனே, அந்த இடத்தில் அமர்ந்து, அரை மணி நேரம், பயணியர்களுக்கு தண்ணீர் வழங்கினார்.
வியந்து போன பயணியர், 'நாட்டின் தலைமகன், இப்படி சாதாரண மனிதன் செய்யும் வேலையை செய்வதா...' என்றனர்.
அதற்கு, 'தாகத்திற்கு தண்ணீர் தருவது, ஜனாதிபதி பதவியை விட உயர்வானது...' என்றார், ராஜேந்திர பிரசாத்.
இன்றும், நாம் அவரை நினைத்துப் பார்க்கிறோம் என்றால், அவரது பணிவும், அந்த சேவை மனப்பான்மையும் தான், காரணம்.
க.பன்னீர்செல்வம் எழுதிய, 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
தேசியக் கொடியை பறக்க விடும்போது, கம்பத்தின் உச்சியில் கொடி பறக்க வேண்டும். அப்படி பறக்கும்போது, காவி வண்ணம் மேலே இருக்குமாறு, பார்த்துக் கொள்ள வேண்டும்.
தேசிய தலைவர்கள் யாராவது இறந்து விட்டால், தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும். அரசு துக்கம் அனுஷ்டிக்கும் நாள் வரை, கொடியை முழுமையாக உச்சி வரை ஏற்றி, அதன் பிறகே இறக்கி, அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும்.
சூரிய உதயத்திற்கு பிறகே, கொடி ஏற்ற வேண்டும். சூரியன் மறைவதற்குள், மாலையில் இறக்கிவிட வேண்டும். கொடிக் கம்பம் செங்குத்தாக நிறுத்தியிருக்க வேண்டும். ஏற்றும்போதும், இறக்கும்போதும், கொடிக்கு, வணக்கம் செலுத்த வேண்டும்.
கொடியின் உள்ளே பூக்கள் வைத்து மடித்து கட்டி, கம்பத்தின் உச்சி வரை ஏற்றி, அதன் பிறகே பறக்கும்படி அதன் கட்டை அவிழ்க்க வேண்டும். நீள வாட்டத்தில் வண்ணம் வாரியாக மடித்து, அதன்பிறகே சிறிய அடுக்குகளாக மடித்துக் கட்ட வேண்டும்.
மற்ற நாட்டு கொடிகளுடன் பறக்க விடும்போது, வலது புறமாக நம் நாட்டு கொடி இருக்க வேண்டும். கம்பத்தின் உயரமானது ஏனைய கொடிகளைக் காட்டிலும் உயரமாக இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் இரவில் பறக்கும்படி விடக்கூடாது. மழையில் நனைய விடக்கூடாது. மழை வருமாயின் இறக்கிவிட வேண்டும்.
மாநில மற்றும் மத்திய துறை அலுவலகங்களில் தினமும் கொடியை பறக்கவிட வேண்டும். மற்ற இடங்களில், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் பறக்க விடலாம்.
அமைச்சர், ஆளுனர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோர் கார்களில் செல்லும்போது, காரின் முன் பறக்க விடலாம். அவர்கள் கீழே இறங்கியவுடன், கொடியை சுருட்டி, உறையிட்டு பாதுகாக்க வேண்டும். அவர்கள் காரில் இருக்கும்போது, மழை வந்தால் மூடி பாதுகாக்க வேண்டும். இரவில் பறக்க விடக்கூடாது.
தேசிய தலைவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது உடலின் மீது தேசியக் கொடியை போர்த்த வேண்டும்.
நிறம் மங்கிய, நசிந்த கொடிகளை பறக்க விடக்கூடாது. வேறு எந்தவிதமாகவும் இவைகளை பயன்படுத்தக் கூடாது. நிறம் மங்கிய, நசிந்த கொடிகளை மடித்து, பாதுகாத்து வைக்க வேண்டும். அப்படி பாதுகாக்க முடியாத நிலையில், ஆழமாக பள்ளம் தோண்டி, புதைத்து விடலாம். அலங்காரத்திற்காக நம் தேசிய கொடியை எக்காரணத்தை முன்னிட்டும் பயன்படுத்தக் கூடாது.
'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
இந்தியத் திருநாடு, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலம். காந்திஜி தலைமையில், விடுதலைப் போராட்டம் சூடு பிடித்தது.
அப்போது, இங்கிலாந்து பிரதமராக இருந்தார், சர்ச்சில்.
நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், 'எல்லா நாடுகளையும் நம் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். ஆனால், இந்தியாவில், காந்தி என்ற ஒரு நோஞ்சான் மனிதனை அடக்க முடியாமல் இந்த மன்றம் தடுமாறுவது ஏன்...' என்று, வினா எழுப்பினார்.
'காந்தி, போராடுவதற்கு கத்தி எடுத்திருந்தால், நாம் துப்பாக்கி எடுத்திருக்கலாம். அவர், துப்பாக்கி எடுத்திருந்தால், நாம், பீரங்கி எடுத்திருக்கலாம். ஆனால், அகிம்சை என்ற ஆயுதத்தை எடுத்துள்ளார், அவர். அதுபோன்ற ஆயுதம் நம்மிடம் இல்லை. அதனால் தான் தடுமாறுகிறோம்...' என்றார், சர்ச்சில்.
அதென்ன அகிம்சை ஆயுதம்... இன்றைய தலைமுறை அதை அறிந்து வைத்திருக்கிறதா... ஒரு சம்பவத்தை பார்ப்போம்:
எதிரியை தாக்காமல், தம்மையே வருத்திக் கொள்ளும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்திஜியை, ஆங்கிலேய போலீசார், ஏரவாடா சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறை அதிகாரியாக இருந்தவர், ஸ்மட்ஸ் என்ற ஆங்கிலேயர்.
அவர், காந்திஜியை வெறுப்போடு பார்த்தார்.
அப்போது, உடன் இருந்த சிலரோடு பேசிக் கொண்டிருந்தார், காந்திஜி. அதைப் பொறுக்காத அந்த அதிகாரி, தன் பூட்ஸ் காலை உயர்த்தி, காந்திஜியின் நடு நெஞ்சில் மிதித்து, அறைக்குள் தள்ளினார்.
சிறையில் இருந்தபோது, நுால் நுாற்றார். செருப்புகள் செய்து, பலருக்கு பரிசாக வழங்கினார், காந்திஜி. அவர், விடுதலையாகும் நாள் வந்தது.
வெளியே வரும்போது, ஒரு ஜோடி செருப்பை, ஸ்மட்ஸ் என்ற அந்த அதிகாரிக்கு பரிசாக வழங்கினார், காந்திஜி.
அதிர்ச்சியடைந்த அதிகாரி, 'எல்லாரும் என்னை திட்டுவர். இவரோ, பரிசு கொடுக்கிறாரே...' என்று ஆச்சரியமாக பார்த்தார்.
'செருப்பின் அளவு, உங்கள் கால்களுக்கு சரியாக இருக்கிறதா என்று போட்டுப் பாருங்கள்...' என்றார், காந்திஜி.
போட்டுப் பார்த்த அதிகாரி, 'சரியாக இருக்கிறது... என் காலின் அளவு உங்களுக்கு எப்படித் தெரிந்தது...' என்றார், திகைப்புடன்.
'அதுவா... நான் சிறைக்கு வந்த முதல் நாள், உங்கள் பூட்ஸ் காலால் என் நெஞ்சில் மிதித்து தள்ளினீர்களே... அப்போது பதிந்த தடத்தை, அன்றே அளவெடுத்துக் கொண்டேன்.
'அதை வைத்து தான், இந்த செருப்பு செய்தேன். நீங்கள், வேலை நேரம் போக மற்ற நேரங்களில், இந்த செருப்பை பயன்படுத்திக் கொள்ளலாமே...' என்றார், காந்திஜி.
சிலிர்த்துப் போன சிறை அதிகாரி, காந்திஜியை கையெடுத்து வணங்கினார்.
இதுதான், மகாத்மா கண்ட அகிம்சையின் மகத்துவம்.
நடுத்தெரு நாராயணன்