
க.அருச்சுனன் எழுதிய,'பெரியோர் வாழ்வில்சுவையானவை' நுாலிலிருந்து:
கடந்த, ஜன., 24, 1966ல், பாரத பிரதமராக பதவி ஏற்ற, இந்திரா, இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை பெற்றார்.
'நேருவின் மகள் என்பதால் வந்த பதவி அல்ல, இது. என் உழைப்பு, திறமை, தனித்தன்மை, ஊக்கத்திற்கு வந்த உயர்வே...' என்றார்.
பாரத பிரதமராக பல பணிகளுக்கிடையே, தினமும் காலை, 8:30 மணிக்கு, தனக்கே உரித்தான விரைவு நடையில் மக்களை சந்திக்க தோட்டத்திற்கு வருவார். வந்திருக்கும் மக்களின் குறைகளை கேட்பார். அந்த நேரத்தை, அவர் வேறு பணிக்கு என்றும் ஒதுக்க விரும்பவில்லை.
ஒரு சமயம், நிருபர் ஒருவர், 'தாங்களோ ஒரு பெண். பெரிய ஜனநாயக நாட்டை ஆள முடியுமா என, பலர் நினைக்கின்றனர்...' என கேட்க, சற்றும் தயங்காமல், 'நான் பெண் அல்ல, ஒரு மனித வர்க்கம்...' என்றார், இந்திரா.
கலைமாமணி எஸ்.எம்.உமர் எழுதிய,'கலை உலக சக்ரவர்த்திகள் பாகம் - 2' நுாலிலிருந்து:
'எம்.ஆர்.ராதாவிடம் வாயை கொடுக்காதீங்க, வாங்கி கட்டிக்காதீங்க...'ன்னு, சொல்லுவாங்க. அதுக்கு ஒரு உதாரணம்:
ஒரு சமயம், நண்பர் ஒருவர், 'உங்கள் மகளுக்கு, ரஷ்யா என்று ஏன் பெயர் வைத்திருக்கிறீர்கள்...' என்று கேட்டார்.
'உங்கள் மகன் பெயர் என்ன...' என்று கேட்டார், ராதா.
'சிதம்பரம்...' என்றார், நண்பர்.
'நீங்கள் மட்டும் ஒரு ஊரின் பெயரை வைக்கலாம். நான் வைக்கக் கூடாதா...' என்றார், ராதா.
'இது, தமிழ்நாட்டு பெயர்...' என்றார்.
'அப்படியா... நீங்கள், ஊரை நேசிக்கிறீர்கள். நான், உலகை நேசிக்கிறேன்...' என்றார், ராதா.
அசடு வழிய நின்றார், நண்பர்.
சொந்த படம் தயாரிக்காத பிரபல நடிகர்களில், எம்.ஆர்.ராதாவும் ஒருவர். சினிமாவில் நடிப்பதை பெருமையாக அவர் கருதவே இல்லை. நாடகத்தையே அதிகமாக நேசித்தார்.
'நாடக நடிகர் தான், 'ஆக்டர்!' சினிமா நடிகர் வெறும் ஸ்டார்...' என்பார்.
அனுபவப் படிப்பையே அதிகம் படித்த அறிவாளி, அவர்.
'கல்வி என்பது சட்டை; அறிவு என்பது வேட்டி. சட்டை இல்லாமல் வாழலாம். வேட்டி அப்படியில்லை. அறிவே ஆதாரம்...' என்பார்.
டி.ஆர்.மகாலிங்கம் பற்றிய, சில ருசிகர தகவல்கள்:
* டஜன் கணக்கில் உயர் ரக நாய்களை வளர்த்து வந்தார்
* கார்கள் 12 வைத்திருந்தார்
* பல படங்களை தயாரித்துள்ளார். தெருப்பாடகன் என்ற படத்தை அவரே இயக்கி வந்தார். ஆனால், படம் முழுமை பெறாமல் நின்று விட்டது
* சினிமா உலகில் பல இயக்குனர்கள், மகாலிங்கதை, 'அம்பி' என்று தான் அழைப்பர்
* மாலையிட்ட மங்கை படத்தில், கதாநாயகனாக டி.ஆர்.மகாலிங்கத்தை போடப் போவதாக, பிரபல கதாநாயகர் ஒருவரிடம், கவிஞர் கண்ணதாசன் கூறியபோது, 'ராசியில்லாத நடிகர். ஓய்ந்து போன மனிதரை ஏன் இழுக்கிறீர்...' என, கேட்டார், அவர்.
'அவருக்கு ராசியில்லாமல் போகலாம். எனக்கு ராசி இருக்கிறதே...' என்று கூறி, மகாலிங்கத்தையே ஒப்பந்தம் பண்ணினார், கண்ணதாசன். மாபெரும் வெற்றி பெற்றது, படம்.
நடுத்தெருநாராயணன்