
முன்கதை சுருக்கம்: ராஜாராமனிடம் அப்பா கூறியதை கேட்டு கண் கலங்கினாள், புவனா. கார்த்திகேயனின் அப்பா, புவனாவை தேடுவதை அறிந்த ராஜாராமன், அவர்களை தன் ஊருக்கு அழைக்க, இருவரும் கிளம்பினர். இந்நிலையில், கோவிலில் அபிஷேக, அர்ச்சனையில் மனம் லயிக்காமல், மகனிடம் கூறி வீட்டுக்கு வந்த குருமூர்த்தி சிவாச்சாரியார், மயங்கி சரிந்தார் -
மிக அழகாக இருந்தது, மாந்தோப்பு வீடு. மனசுக்கு நிம்மதியாக தெரிந்தது. சுற்றி சூழ்ந்து நின்ற மரங்கள், சூரியனுக்கு குடை பிடித்தன. எப்போதும், 'சிலுசிலு'வென்று குளிர்ந்த காற்று வீசியது.
மா மரங்கள் மட்டுமின்றி, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, மாதுளை மற்றும் எலுமிச்சை என, நிறைய பழம் தரும் மரங்கள் காணப்பட்டன.
தேக்கு மர துாண்களும், வேலைப் பாடுகளோடு கூடிய கதவுகளுமாக முற்றம் வைத்த வீடு. வாயிற் கதவின் வெளியே இருபுறமும் நீண்டு அகன்ற பெரிய திண்ணைகள்.
இப்படிப்பட்ட வீட்டை பார்த்தது கூட இல்லை, புவனா. பிறந்து வளர்ந்ததிலிருந்து அவள் பார்த்ததெல்லாம் மயிலாப்பூரின் அக்ரஹாரத் தெரு வீடுகள் தான்.
வீட்டு படியிறங்கினால் தெரு வந்து விடும். ஒட்டி ஒட்டியிருந்த நெருக்கமான வீடுகள். தங்கள் வீட்டை போன்ற ஐந்தாறு வீடுகள் சேர்ந்தால் தான், இந்த ஒரு வீடாகும்.
''அடேயப்பா, எப்பேர்ப்பட்ட வீடு...'' வந்ததிலிருந்து மாய்ந்து மாய்ந்து போனாள்.
''எங்க வீடு கூட, இப்படித்தான் இருக்கும், புவனா. இன்னும் பெரிசு. ரெண்டு கட்டு வீடு,'' என்றான், கார்த்திகேயன்.
''இந்த மாதிரி வீட்டையெல்லாம் நான் பார்த்தது கூட இல்லை,'' என்றாள், புவனா.
அவர்களை அங்கு குடி வைத்து விட்டு சும்மா இருக்கவில்லை, ராஜாராமன். ஏற்கனவே, தோப்புக்கு காவலாகவும், வீட்டை பராமரிக்கவும் பின்பக்க, 'அவுட் ஹவுசில்' நடுத்தர வயது கணவன் - மனைவி இருந்தனர். சமைக்க ஆள் போட்டான். தினம் வந்து கவனித்துக் கொண்டான்.
என்ன தேவை, எல்லாம் இருக்கிறதா என்று, பார்த்து பார்த்து விசாரித்தான். ஊர் முழுவதும், புவனாவை தன் துாரத்து சொந்தம் என்று, சொல்லி வைத்தான். கார்த்திகேயனை, அத்யந்த சினேகிதன் என அறிமுகப்படுத்தினான்.
இருவருக்கும் யாரும் இல்லாததால், வரும் வெள்ளிக்கிழமை, தானே திருமணம் செய்து வைக்கப் போவதாக அறிவித்தான்.
''நம்ம கோவில்லயா கல்யாணம், சின்ன ஐயரே?''
''அங்கதான் வச்சுக்கணும். நம்ம கோவில் இருக்க, வேற எங்க வச்சுக்கிறது?''
'ஆமா ஐயிரே...' என, ஆமோதித்தனர் ஊர் மக்கள்.
அன்று மாலை -
புவனாவையும், கார்த்திகேயனையும் வீட்டுக்கு அழைத்து போனான்.
''வாம்மா...'' என்று வாய் நிறைய வரவேற்றாள், ராஜாம்பாள்.
'என்ன அழகு... எப்பேர்ப்பட்ட பெண்... நமக்கு தான் குடுத்து வைக்கலை...' என்று, ராஜாம்பாள் நினைத்தபோதே, ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டாள், புவனா.
அம்மாவை கட்டிக்கொள்கிற மாதிரி இருந்தது; அம்மா வாசனை வந்தது.
அம்மா ஞாபகத்தில் கண் கலங்கிற்று. நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து நீண்ட விம்மல் ஒன்று தெறித்தது. அதைக் கேட்ட ராஜாம்பாள், ''என்னம்மா...'' என்று, அவள் முகத்தை நிமிர்த்தினாள்.
''இனிமே, நீங்க தான் எனக்கு அம்மா,'' குரல் கரகரத்தாள், புவனா.
''அடி அசடே... இதற்கு போய் யாராவது அழுவாளா என்ன... எனக்கும் பெண்ணில்லே, நீயே பெண்ணாக இருந்துட்டு போ.''
''அம்மா வாங்கோ... அப்பா, நீங்களும் வாங்கோ...'' என்று, ஊஞ்சலில் கார்த்திகேயனுடன் உட்கார்ந்திருந்த சாம்பசிவத்தை கூப்பிட்டாள்.
இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து, கார்த்திகேயனை அழைத்தாள்.
''வாங்க... ரெண்டு பேரும் நமஸ்காரம் பண்ணிக்கலாம்.''
அவள், சாஸ்த்தோத்திரமாக நமஸ்கரிக்க, அவன், அவர்கள் வழக்கப்படி விழுந்து கும்பிட்டான்.
மனைவிக்கு சைகை செய்தார், சாம்பசிவம்.
அந்த அம்மாள் உள்ளே போய், பெரிய தாம்பாளத்தில் தயாராக வைத்திருந்த பட்டுப் புடவை, நகை, வெற்றிலை, பாக்கு, பூ மற்றும் பழம் அனைத்தையும் எடுத்து வந்து, புவனாவிடம் நீட்டினாள்.
அதை வாங்காமல், ''என்னம்மா இதெல்லாம்?'' என்று கேட்டாள், புவனா.
''பொண்ணோட கல்யாணத்துக்கு, பொறந்தாத்து சீர்.''
''ரொம்ப நன்னா இருக்கும்மா... நீங்க பொண்ணுக்கு சீர் செய்யிறது. பெத்த பொண்ணா இருந்தா இப்படியா செய்வீங்க?''
சுருக்கென்றது அந்த அம்மாளுக்கு. திடுக்கிட்டு, அவளை பார்த்தார், சாம்பசிவமும்.
அந்தம்மா தயங்கி தயங்கி, ''என்னம்மா சொல்ற நீ?''
''பின்ன என்னம்மா... கன்யாதானம் பண்ணிக் குடுக்க வேண்டிய அம்மா - அப்பா, தட்டுல வெத்தல பாக்கையும், புடவை, நகையையும் வச்சு நீட்டி, யாரோ மூணாவது மனுஷாளுக்கு தர்ற மாதிரி தந்தா, எப்படி இருக்கும்?''
கணவனை பார்த்தாள், ராஜாம்பாள்.
அவர் சட்டென்று, ''தட்டை எடுத்து போய் உள்ள வை, ராஜம். நாம ரெண்டு பேரும் முன்ன நின்னு, சாஸ்திரப்படி, நம்ம பொண்ணு கல்யாணத்தை நடத்தலாம்,'' என்றவர், புவனாவை நெருங்கினார்.
''அம்மா... நீ கவலைப்படாதே. என் மடியில உட்கார்ந்து தான், உனக்கு திருமாங்கல்யதாரணம் ஆகும். நம்ம வழக்கம் போல, அரக்குல கூரைப் புடவை வாங்கிண்டு வந்துடறேன்.''
திடீரென்று ஏற்பட்ட உற்சாகத்தில், கார்த்திகேயனை ஏறிட்டார்.
''ஏன் மாப்ளே... திருமாங்கல்யம் எங்க மாதிரி வாங்கவா... இல்ல, உங்க வழக்கப்படி வாங்கவா?''
''உங்க வீட்டு பொண்ணுன்னு ஆனதற்கப்புறம், நான் சொல்ல என்ன இருக்கு... உங்க இஷ்டப்படியே எல்லாம் செய்யுங்க.''
பத்து வயது குறைந்தவராக உணர்ந்த சாம்பசிவம், சுறுசுறுவென்று வேலை பார்க்க ஆரம்பித்தார்.
'என்னடா ராஜா, 'மசமச'ன்னு, பார்த்துண்டு நிக்கற... இன்னிக்கு திங்கட் கிழமைடா, வெள்ளிக்கிழமை கல்யாணம். முதல்ல நம்மாத்துல பந்தக்கால் நட ஏற்பாடு பண்ணு. ஊர் மொத்தத்தையும் கூப்புடு. சாப்பாட்டுக்கு பரிசாரகா, மளிகை எல்லா பொறுப்பையும் நம்ம சாமாகிட்ட உட்டுடு.
''புவனா... இனிமே நீ மாந்தோப்பு வீட்டுக்கு போக வேணாம். நம்ம பொண்ணு நம்மாத்துல தான் தங்கணும். மாப்ளே... நீங்களும், ராஜாராமனும், மாந்தோப்பு வீட்ல இருங்கோ... கல்யாணத்துக்கப்புறம் ரெண்டு பேரையும் கிரஹப்பிரவேசம் பண்ணி, அங்க குடித்தனம் வச்சுடறோம்.'
அசந்து போனான், ராஜாராமன். இந்த மாதிரி சந்தோஷத்தில், அவன், அவரை பார்த்ததே இல்லை. புவனாவை, அவர் சொந்த பெண்ணாக வரித்து விட்டது புரிந்தது. அவரை நினைத்து பெருமிதப்பட்டான்.
'எப்பேர்ப்பட்ட அப்பா எனக்கு கிடைத்திருக்கிறார்...' என, நினைத்துக் கொண்டான்.
''என்ன ராஜா நின்னுண்டிருக்க... இனிமேல் நிக்க நேரமில்ல. தலைக்கு மேல வேலை இருக்கு. ராஜம், நாம போய் நகை நட்டு, புடவை, வேஷ்டி எல்லாத்தையும் வாங்கிண்டு வந்துடலாம்.''
கார்த்திகேயனும், புவனாவும் திகைத்து நின்றனர்.
அவர்கள் ஒருபுறமும், ராஜாராமன் மறுபுறமுமாக காரியமாற்ற விரைந்தனர்.
ஆஸ்பத்திரியின், ஐ.சி.யு., வாசலில், நாள் கணக்கில் அத்தனை பேரும் காத்துக் கிடந்தனர். ஒருவர் மாற்றி ஒருவர் வீட்டிற்கு போய் குளித்து, சாப்பிட்டு வந்தனரே தவிர, யாரும் ஆஸ்பத்திரியை விட்டு அகலவில்லை.
மாலை, 4:00 மணியளவில், ஒவ்வொருவராக, ஐ.சி.யு.,வின் உள்ளே போய், குருமூர்த்தி சிவாச்சாரியாரை பார்த்து விட்டு வந்தனர். இவர்கள் தான் பார்த்தனரே தவிர, யாரையும் அவர் பார்க்கவில்லை.
'ஆக்சிஜன் மாஸ்க்' போடப்பட்டு, கண்களை திறக்காமல் கிடந்தார். சிறுநீர் கழிக்க, 'கதீட்ரல்' போடப்பட்டிருந்தது. தலைக்கு மேல் நாடித்துடிப்பும், இதய இயக்கமும் கோடுகளாக ஓடிக்கொண்டிருந்தன.
பர்வதம் மட்டும் அவர் அருகில் சென்று, போர்வைக்கு மேல், மார்பில் கை வைத்து பார்ப்பாள். மெல்ல வருடித் தருவாள்.
காதருகில் போய் மிக மெல்லிய குரலில், ''எழுந்திருங்கோன்னா... கண்ணைத் தொறந்து பாருங்கோ... எனக்கு, உங்களை விட்டா யார் இருக்கா... 15 வயசுல, உங்களை கல்யாணம் பண்ணிண்டு, இந்தாத்துக்கு வந்தேன்... இதுவரை நீங்க இல்லாம வாசப்படிய கூட தாண்டினதில்ல... உங்க கையை பிடிச்ச என் கையை விட்டுடாதீங்கோ...''
தன் குரல், அவருக்கு கேட்கிறதோ இல்லையோ, முக்காலமும் அவர் பூஜை பண்ணின, அந்த ஈஸ்வரனின் காதில் விழும் என்று நம்பினாள். அந்த நம்பிக்கையில் தான், ஐ.சி.யு., வாசலிலேயே காத்துக் கிடந்தாள்.
மற்ற எல்லாரும் வீட்டுக்கு போய் குளித்து, சாப்பிட்டு வந்தபோது கூட, அவள் போகவில்லை. ஆஸ்பத்திரியே கதியாக கிடந்தாள். இடைவிடாமல் வாய் மட்டும் கந்தசஷ்டி கவசமும், லலிதா சகஸ்ரநாமமும் சொல்லிக் கொண்டிருந்தது.
அதற்கு மேல் தாங்க முடியாதவர்களாக, அன்று அவளை, குருமூர்த்தி சிவாச்சாரியாரின் தம்பிகளும், தங்கைகளும் சூழ்ந்து கொண்டனர்.
'இத்தனை நாளாச்சு புவனாவை காணோம்... ஆஸ்பத்திரிக்கும் வரல, வீட்லயும் இல்ல... எங்க மன்னி...' என்றனர்.
அத்தனை நாட்களும் உள்ளுக்குள் போட்டு அடக்கி அடைத்து வைத்திருந்ததெல்லாம், தாங்க மாட்டாமல் மொத்தத்தையும் கொட்டினாள்.
கேட்டுக் கொண்டிருந்தவர்கள், ஆடிப்போயினர். ஒரு வினாடி பேச முடியாமல் திண்டாடினர். பின்னர் ஒவ்வொருவராக பேசினர்.
''அந்த அதிர்ச்சியை அண்ணாவால தாங்கிக்க முடியல. அதனால் தான், 'ஹார்ட் அட்டாக்' வந்திருக்கு...''
''அவளை நாம படிக்க வச்சிருக்கவே கூடாது, மன்னி. வேணாம் வேணாம்னு தான் சொன்னார், அண்ணா. பெரியண்ணா தான் ரொம்ப உறுதியா, அவ பக்கம் நின்னார்...''
''படிச்சது கூட பரவாயில்ல. வேலைக்கு அனுப்பியிருக்கவே கூடாது. அதுக்கு நாமெல்லாம் தான் காரணம். கை நிறைய சம்பாதிச்சாளோன்னோ, அதான் திமிரும், அகங்காரமும் வந்துடுத்து...''
அதற்கு மேல் தாங்க முடியாமல், ''அவளை பத்தி பேசாதீங்கோ... அவ வழிய பாத்துண்டு அவ போயிட்டா... அந்த ஈஸ்வரன் என் வழிய அடைக்காமல் எனக்கு வழி காட்டட்டும்.
''இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்கா... அவாளை நல்லபடியா கரை சேர்க்கணும். குமரேசனை படிக்க வைக்கணும். உங்கண்ணா நல்லபடியா எழுந்து வந்துட்டா போறும் எனக்கு... வேற எதுவும் வேணாம்...'' என்றாள், பர்வதம்.
அந்த பேச்சில், சட்டென்று அந்த இடமே நிசப்தமாயிற்று.
— தொடரும்
இந்துமதி