PUBLISHED ON : மே 16, 2021

ஒரு சமயம், விழா ஒன்றுக்கு, ஈ.வெ.ரா.,வை அழைத்திருந்தனர். நிகழ்ச்சியின் துவக்கத்தில், கடவுள் வாழ்த்து பாடலுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், ஈ.வெ.ரா., நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்தாலும் பரவாயில்லை என, ஏற்பாட்டாளர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால், நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்து விட்டார், ஈ.வெ.ரா.,
அவரை வைத்து, கடவுள் வாழ்த்து பாடலை எப்படி துவக்குவது என்று, தயங்கினர்.
நிகழ்ச்சி நிரலை படித்த, ஈ.வெ.ரா., 'கடவுள் வாழ்த்து பாடலை துவக்குங்கள்...' என, மற்றவர்கள் எழுந்து நிற்பதற்கு முன், தானும் எழுந்து நின்றார்.
தான், கடவுள் மறுப்பு கொள்கையில் இருந்தாலும், மற்றவர்களின் மனதை, ஈ.வெ.ரா., புண்படுத்த விரும்பியதில்லை என்பதற்கு, இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.
சுதந்திர போராட்டம், தீவிரமாக நடந்த நேரம்.
துாத்துக்குடியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது, 'வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுகளுடன் இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டும்...' என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார், பேச்சாளர் ஒருவர்.
மேடையிலிருந்த சுப்ரமணிய சிவா, கோபாவேசமாக, 'இப்படியெல்லாம் பேசக் கூடாது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...' என்றார்.
பதறிப்போன பேச்சாளரும், பேச்சை நிறுத்தி விட்டார்.
ஒன்றும் புரியாமல் அனைவரும் விழித்தனர்.
'வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுகளுடன் விரட்டுவதா, கூடாது. ஏன் தெரியுமா, மூட்டை முடிச்சுகள் நம்முடையவை. ஆங்கிலேயர்களை நாம் வெறும் பயல்களாகதான் விரட்ட வேண்டும்...' என்று, கர்ஜித்தார், சுப்ரமணிய சிவா.
மக்களின் ஆரவாரம் அடங்க நீண்ட நேரமானது.
மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம். அப்போது அவரது நண்பர், சர்.சி.பி.ராமசாமி, தென் ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்று, விமானம் மூலம் கல்கத்தா வந்து சேர்ந்தார்.
தென்னாப்ரிக்க நாடுகளுக்கு சென்று வருபவர்கள், கண்டிப்பாக விஷ காய்ச்சல் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
பரிசோதனையில், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் ராமசாமியிடம் இல்லாததால், அவரை, தனிமைப்படுத்தி, தங்க வைத்திருந்தனர். அதன்பின், சென்னைக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். தொலைபேசி வழியாக, ராஜாஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
'அவரை அங்கிருந்து அழைத்து வந்து, தனியாக ஒரு அறையில் தங்க வைத்து, அதிகாரிகளின் மேற்பார்வையிலேயே இருக்கும்படி செய்யலாம்...' என்று, ராஜாஜி மூலம், அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டது.
அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
அப்போது சுகாதார அமைச்சராக இருந்த, அமிர்தகவுரிடம் பேசினார், ராஜாஜி.
ராஜாஜியின் வேண்டுகோள் மறுக்கப்பட்டது.
அதன்பிறகு, தன் நண்பருக்கு உணவும், அறிவு பசி தீர்க்க, நுால்களையும் தினமும் அனுப்பி வைத்தார், ராஜாஜி.
நடுத்தெரு நாராயணன்
