PUBLISHED ON : மே 16, 2021

கல்யாணமான மூன்றாம் நாளே, அம்மு வேலைக்கு வந்து சேர்ந்தபோது, ஆச்சர்யமாக இருந்தது, மனோகருக்கு. ஆனாலும், மனைவி மாலா, அதை அத்தனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை.
அம்முவை தனியாக அழைத்து, ஏதேதோ, 'கிசுகிசு'த்தாள். பெண்கள் சமாசாரமாக இருக்கும். நமக்கெதுக்கு என்று கிரிக்கெட்டில் மூழ்கிப் போனேன்.
எல்லா விஷயத்திலும், கறார் பேர்வழி, மாலா. எங்களை விட, வசதி வாய்ப்பில் பேருபெத்தது, அவளது குடும்பம். என் உத்தியோகம் தான், அவளை எனக்கு மனைவியாக்கியது என்றால் மிகையில்லை. சுமார் ரகம் என்பதால், எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
திருமணமாகி, 10 ஆண்டுகளுக்கு மேல், இரு குழந்தைகள் பிறந்ததும், இடுப்பு பெருத்து, கொஞ்சம் ஊதிப் போயிருந்தாள். அவள் அப்பாவின் ஆஸ்தி, அவளை விடவும் ஊதி இருந்ததால், எனக்கு மனம் பூரித்தது.
காபி தந்து விட்டுப் போன அம்முவைப் பார்த்தேன். புதுப் பெண்ணுக்கான முக வசீகரம் துளிகூட இல்லை. அடர் நிறத்தில் ஒரு புதுப்புடவை கட்டி இருந்தாள் அன்றி, எந்த பிரத்யேக அலங்காரமும் அவளிடத்தில் இல்லை.
''என்னடி... அம்மு, இன்னைக்கே வேலைக்கு வந்துட்டா... வீட்டுல எதுவும் பிரச்னையா?'' மாலாவிடம் கேட்க, அவள் கண்கள், கோவைப் பழமாக மின்னியது.
''என்னத்த சொல்றது, இந்த ஆம்பளைங்களை துடப்பத்தால நாலு சாத்து சாத்தணும்... எதுக்கு இவனுங்களை எல்லாம் கல்யாணம் பண்ணச் சொன்னது?'' என்று, ஏக வசனத்தில் ஆண் வர்க்கத்தை சாடி, ஓய்ந்தாள்.
அடி வயிற்றில் புளி கரைத்து, ரசம் வைத்துக் கொண்டிருந்தேன்.
''அம்முவோட அத்தை மகன்தான்ங்க... பெரிசா வேலை, வெட்டி ஒண்ணும் கிடையாது. இதெல்லாம் பார்த்தா, கல்யாணம் காட்சி எப்படி ஆகும்ன்னு, இவங்க வீட்டில் பேசி, முடிச்சு வச்சிருக்காங்க. இப்போ என்னடான்னா, மூணு நாள் குடித்தனம் பண்ணிட்டு, 'உன்னை பிடிக்கலை'ன்னு சொல்றானாம். இந்தக் கதை நல்லா இருக்கே?'' என, அம்முவின் கணவன் மாரிச்சாமி மீது இருக்கும் கோபத்தை, பாத்திரத்தில், 'ணங்ணங்'கென காட்டினாள், மாலா.
எனக்கென்னவோ மாலா சொல்வது போல், அந்த கதை, இந்த வகையில் இருக்காது என்று தான் தோன்றியது. ஆனால், அதைப்பற்றிய என் விளக்கவுரையை அவளுக்கு தந்து, நான் வாழாவெட்டியனாக வேண்டாம் என்ற நினைப்பில், அமைதியாக இருந்தேன்.
''சார், வேலையெல்லாம் முடிச்சுட்டேன். இன்னும், 'பேலன்ஸ் சீட்' தான், 'பைல்' பண்ணணும். நாளைக்கு அதையும் முடிச்சுத் தந்துடறேன்,'' சொன்ன கலைவாணியை, உற்றுப் பார்த்தேன். 40ஐ தாண்டியும், நல்ல மினுக்கில் இருந்தாள்.
''சரி, கலைவாணி... நாளைக்கு பார்த்துக்கலாம்,'' பார்வையில் பரஸ்பரம் ஏக்கப் பெருமூச்சு வழிந்தது.
அரசல்புரசலாக கலைவாணியைப் பற்றி அலுவலகத்தில் பேசி கொள்வர். ஆனால், அது எத்தனை துாரம் சரியாக வருமென்ற குழப்பம் எனக்குள் உள்ளாடிக் கொண்டே இருந்தது.
மனசின் சபலம் உடனடியாக முடிவெடுக்கச் சொல்லி, என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தது.
சில நாட்கள் கடந்தது. இடையில் வேலையை விட்டு நின்று கொண்டாள், அம்மு. மாலாவிடம் காரணம் கேட்டேன்.
''என்னத்தை சொல்றதுங்க... எதுலயும் ஒரு பக்குவமான மனநிலை வேண்டாமா... காலுக்கு ஆகாத செருப்பை கழட்டி வீச வேண்டாமா?'' என்றாள்.
''ஏம்மா, உனக்கு சொல்றதுக்கு வேற பழமொழியே கிடைக்கலியா?'' என்றேன்.
''அதுலீங்க... போயிட்டு போயிட்டு வர்ற புருஷன் கூட சீராடவும், போராடவுமே இவளுக்கு நேரம் சரியா இருக்கு,'' என்று, அலுத்துக் கொண்டாள்.
''என்ன சொல்ற, மாலா?''
''பிடிக்கலைன்னு சொல்லிட்டு போன புருஷன் திரும்பி வந்துட்டான் போல. அதான் வேலைக்கு வரலைன்னு சொல்லிட்டுப் போய் இருக்கா.''
''எங்கேயோ நல்லா இருக்கட்டும் மாலா.''
''இருக்கட்டும், நான் என்ன வேணாம்ன்னா சொன்னேன்... யோசிச்சுப் பாருங்க, அவளை நான் வேலை செய்யிற பொண்ணாவா பார்த்தேன்... ஆனாலும், வேலையை விட்டு நிற்க போறதாச் சொல்லாம, அவபாட்டுக்கு வீட்டுல தங்கிட்டா... மூணு நாள் கழிச்சு போன் செய்தா, 'நான், இனி வேலைக்கு வரமாட்டே'ன்னு சொல்றா.''
''விடு மாலா... வேற ஆள் பார்த்துக்கலாம்.''
''அதெல்லாம் வேணாம். தெரியாத ஆளுங்களை உள்ளே விடற காலம் இல்லை இப்போ... உதவிக்கு ஆள் இல்லை... நான் என்ன செஞ்சு போடறனோ அதை சாப்பிடுங்க.''
அப்போதே முடிவாகி விட்டது. இனி, வாரத்தில் ஏழு நாளும் உப்புமா தான் என்று.
எதிர்த்து உடல் நோவதை விட, ஏற்று மனம் நொந்து கொள்ளலாம் என்று அமைதியானேன். ஆனால், எனக்கு அந்த தண்டனையை வெகு நாட்களுக்கு நீடிக்கச் செய்யாமல், இரண்டு மாதத்திலேயே வந்து நின்றாள், அம்மு.
இந்த முறை, இன்னும் முகம் சுணங்கி நின்றாள்.
''என்னத்தை அக்கா சொல்ல, சுத்த கேடு கெட்ட மனுஷனா இருக்காரு... மன்னிக்கவும், மனசு ஒப்பி ஏத்துக்கவும் தெரியல,'' முந்தானையில் மூக்கைத் துடைத்தாள்.
''தப்பு செய்றவங்களை தண்டிக்கணும், அம்மு. மன்னிக்கவும் ஒரு தகுதி வேணும். கட்டினதும், அவன் புருஷன் ஆகிட முடியாது. கண்ணியத்தையும், தான் ஏத்துகிட்ட மான மரியாதையையும் கட்டிக் காக்கணும்,'' வீராவேசமாய் அம்முவிற்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தாள், மாலா.
கவனிக்காதது போல் இருந்தேன்.
''சார், கலைவாணி மேடம் உங்களைப் பத்தி நிறைய விசாரிச்சாங்க,'' மெல்ல காதைக் கடித்தான், பியூன்; எனக்கு ஜிவ்வென்று இருந்தது.
''என்ன விஷயம்யா?''
''யாருக்குத் தெரியும்... மனோகர் சார் எப்படி... அவருக்கு எத்தனை பசங்க... இப்படி, 'ஜெனரல் நாலேஜ்' கேள்வி தான்,'' தலையை சொறிந்தான், பியூன்.
ஆண்களின் பார்வையில் பெண்களின் கேள்விகள் எல்லாமுமே, ஏதோ அர்த்தங்களை தாங்கிக் கொண்டுதான் வந்து நிற்கிறது. எந்த அர்த்தமானால் என்ன, எனக்கு கொஞ்சம் ஆவலாய் இருந்தது, கலைவாணி விஷயத்தில்.
ஒருநாள் கலைவாணியை பஸ் ஸ்டாப்பில் பார்த்தபோது, முகமெல்லாம் பல்லாக அருகில் வந்து நின்றாள்.
''என்ன கலை, வீட்டுக்கு கிளம்பியாச்சா?'' மகா அபத்தமாக, ஒரு கேள்வி கேட்டேன்.
''ஆமாம் சார், சீக்கிரம் போய் என்ன செய்றது... நாளைக்கு காலையில ஆபிஸ் வர வரைக்கும் தனிமை தான்,'' தன் சூழ்நிலையை, சுய விளம்பரம் செய்தாள்.
சிரித்துக் கொண்டேன். மனசுக்குள் இருந்த சபலப்பேய் விலாசம் விசாரித்தது. தட்டிவிட்டால் கனிந்து விடும் தான். ஆனால், நான் தான் எட்ட நின்று, வேஷம் போட்டுக் கொண்டிருந்தேன்.
வீட்டிற்கு வந்தேன். அம்முவோடு காரசார விவாதத்தில் இருந்தாள்.
என்னைப் பார்த்ததும், பஞ்சாயத்து என்னை நோக்கி நகர்ந்தது.
''என்னங்க, உங்களுக்கு தெரிஞ்ச வக்கீல் யாராச்சும் இருந்தா சொல்லுங்களேன்... விவாகரத்துக்கு விண்ணப்பிக்கணும்,'' என்றாள், மாலா.
''ஐயோ மாலா... நான் அப்படி என்ன தப்பு செஞ்சுட்டேன்னு என்னை வாழாவெட்டி ஆக்கப் பாக்குறே,'' என்ற என்னை, பார்வையால் பொசுக்கினாள்.
''இந்த நடிப்புக்கு குறைச்சல் இல்லை... எல்லாம் நம் அம்முக்குதாங்க... அந்த புறம்போக்கு ராஸ்கல், என்னவோ, 'விசிட்டர்' விசாவுல வந்து போற மாதிரி, அப்பப்ப வந்து போறானாம்... இவளுக்கென்ன கொறை... அவனுக்கு நினைப்பு வந்ததும், தேடி வர்றானே, இவளுக்கு நினைப்பு வந்தா எங்கே போவான்னு நினைச்சானா?''
அவள் கேட்ட கேள்வியில், சுரீரென விக்கித்துப் போனேன். நியாயமான கேள்வி தான். ஆனால், அநியாயம் செய்ய முடிவு செய்தவர்களிடம், நியாயத்தை எப்படி எதிர்பார்ப்பது?
''யாரையாவது ஏற்பாடு செய்யலாம், மாலா,'' என்று சொல்லி, அதோடு அந்த விஷயத்தை மறந்தேன்.
அடுத்தடுத்து இன்னும் சில முறை, அம்முவின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடந்து கொண்டு இருந்தது. எனக்கு அதைப்பற்றி யோசிக்க நேரமில்லை. கலைவாணியும், நானும் நேத்துதான் சினிமாவுக்கு சேர்ந்து போனோம். சின்ன நெருக்கம் எங்களுக்குள் வந்திருந்தது. எனக்கு அந்த உலகம் பிடித்தமானதாக இருந்தது.
நான்கைந்து நாள் கழித்து, அம்முவை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாகச் சொன்னாள். எனக்கு பெரிய அதிர்ச்சியாக தெரியவில்லை. அமைதியாக இருந்தேன்.
''அம்முவை, மகளிர் சுய உதவிக்குழுக்களோட சேர்த்து, கைத்தொழில் கத்துக்க அனுப்பிட்டேன். வீட்டு வேலையே அவளுக்கு சாஸ்வதம் இல்லீங்க... அவள் புருஷன் தேடி வந்தாலும், அவ, அவனை துாக்கி எரியணும். அதுக்கு அவளுக்கு பொருளாதார தன்னிறைவு வேணும்.''
மாலாவை விசித்திரமாய் பார்த்தேன்.
''இந்த மாதிரி புரட்சிகரமான சிந்தனைகளை, அடுத்தவங்க வாழ்க்கையில தான் பயன்படுத்தி பார்ப்பியா... இது, நமக்கு தேவையில்லாத வேலை, மாலா. இப்போ இதெல்லாம் சகஜம்,'' சொல்லும்போதே, சின்னதாய் குரலில் பிசிறு தட்டியது.
என் கண்களை உற்றுப் பார்த்தவள், ''இதேதான் சொன்னான், அம்முவோட புருஷனும். எது சகஜம், வீட்டுல விட்டுட்டு போற பொம்பளைங்க மட்டும் உங்களுக்கு உண்மையா இருக்கணும்ன்னு நினைக்கிற மனசு, அதே சிந்தனையை தனக்குள்ள வளர்த்துக்க முடியாம தள்ளாடறதா?
''மன்னிப்பு கூட மறுபடி மறுபடி தரப்பட்டா, அது தப்பு செய்றவங்க குத்தம் இல்லை... அவங்களை அங்கீகரிக்கிறவங்க குத்தம். இன்னொன்னுங்கிற மனநிலையை மாத்தாத வரைக்கும், ஆணுக்கு பெண்ணைத் தேடி வர அருகதையும் இல்ல... உரிமையும் இல்ல...
''இலவசமா எல்லாருக்கும், எல்லாம் கிடைக்குது. அதை ஏத்துக்கறதும், எட்டி நிற்கறதும் அவங்கவங்க மனநிலையைப் பொறுத்தது. அம்மு இடத்துல நான் இருந்திருந்தா, இத்தனை வாய்ப்பு தந்திருக்க மாட்டேன். நிச்சயம், ஆணுக்கு சமமா பெண் தப்பு செய்றது இல்ல, சுதந்திரம். அப்படி தப்பு செய்ற ஆணை துாக்கி எறியறது தான், சுதந்திரம். எனக்கு அது இருக்கிறதா நம்பறேன்.''
தெளிவாக அவள் சொல்லி முடித்தபோது, என் உள்ளங்கால்கள் வியர்த்து இருந்தது.
எனக்குள் புகைமூட்டமாய் இருந்த கலைவாணியின் பிம்பம், மெல்ல மெல்ல கரைந்திருந்தது.
ஹயாத்
