PUBLISHED ON : செப் 05, 2021

செப்.,11 பாரதியார் நினைவு தினம்
தன் வீட்டு வேலைக்கார சிறுவனுக்கு, 'சமத்துவம்' என்று பெயரிட்டு அழைத்து வந்தார், பாரதியார். பெயர் சொல்லி அழைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவனை சமத்துவமாக நடத்தவும் செய்தார்.
ஒருநாள், டி.எஸ்.சொக்கலிங்கம் இல்லத்திற்கு, பாரதியார் சென்றபோது, சமத்துவத்தையும் அழைத்துச் சென்றார். வீட்டின் மூலையில் போய் அமர்ந்து கொண்டான், சமத்துவம். அதைக் கண்ட பாரதியார், 'அடே சமத்துவம், நாற்காலியில் போய் உட்கார்...' என்றார்.
அவன் நாற்காலியில் உட்கார, பயந்து நடுங்கினான்.
எழுந்து, அவனை துாக்கி நாற்காலியில் உட்கார வைத்தார், பாரதியார்.
அப்படி செய்தது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. இருந்தபோதும், 'சமத்துவம்' என்பதை, பாரதியார் உருவகப்படுத்திய விதத்தை, அவரது உள்ளம் அறிந்தவர்கள் ரசித்தனர்.
'சுதேசமித்திரன்' பத்திரிகையில் உதவி ஆசிரியராக, பாரதியார் பணியாற்றிய காலம்.
'சுதேசமித்திரன்' பத்திரிகையின் ஆசிரியராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர், ஜி.சுப்ரமணிய அய்யர்.
பாரதியாரும், சுப்ரமணிய அய்யரும், காசியில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து ஆதரித்து பேசினார், சுப்ரமணிய அய்யர்.
தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது, தீர்மானத்தை எதிர்த்து கடுமையாக பேசினார், பாரதியார்.
தன் உதவி ஆசிரியரே, தன்னுடைய தீர்மானத்தை எதிர்த்து பேசுவார் என்று சுப்ரமணிய அய்யர் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், பாரதியாரின் பேச்சுத்திறனை கூட்டம் முடிந்ததும், தட்டிக்கொடுத்து பாராட்டினார், சுப்ரமணிய அய்யர்.
செப்., 5 ஆசிரியர் தினம்
முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட பாராட்டுக் கூட்டத்தில், ஆங்கிலேயர் ஒருவர், 'இறைவன், ஆங்கிலேயர்கள் மீது மட்டும் அதிக அன்பு கொண்டவர். நல்ல முயற்சியோடு, அதிக விருப்பத்தோடு எங்களை படைத்தார். அதனால் தான் நாங்கள் வெள்ளை நிறத்துடன் இருக்கிறோம்...' என்று பேசி, அமர்ந்தார்.
அவருக்கு பின் பேசிய, டாக்டர் ராதாகிருஷ்ணன், 'நண்பர்களே, ஒருமுறை, ரொட்டி தயாரிக்க விருப்பமுடன் அமர்ந்தார், இறைவன். அவர் தயாரித்த முதல் ரொட்டி, சிறிதும் வேகவில்லை. வெண்மையாக இருந்தது. அதன் காரணமாகத்தான் ஆங்கிலேயர்கள் பிறந்தனர்.
'இரண்டாவதாக தயாரித்த ரொட்டி, அதிக நேரம் வெந்து, கருகியதால், கறுப்பினத்தவர்கள் பிறந்தனர். இவ்வாறு, இரண்டு முறை பயிற்சி பெற்ற இறைவன், மூன்றாவது முறை ரொட்டி தயாரித்தார்.
'இந்த முறை ரொட்டி, வேகாத வெள்ளை நிறத்திலும் இல்லை, அதிகப்படி தீய்ந்து கறுப்பாகவும் ஆகவில்லை. சரியான பக்குவத்தில் தயாரித்தார். அப்படித்தான் இந்தியர்களாகிய நாங்கள் பிறந்தோம்...' என்றார்.
அதன் பின், எதுவும் பேச முடியாமல், தலை கவிழ்ந்தார், அந்த ஆங்கிலேயர்.
நடுத்தெரு நாராயணன்
